எங்கள் உழைப்பை பறிக்காதீர்கள்

“கலை, ஒவ்வொருவரும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா அது” என்ற வாக்கியத்திற்கேற்ப, நம் தமிழ் சினிமாவில் பல அற்புதமான கலைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் நமக்கு எது தேவையோ அதைத் தேர்ந்தெடுத்து, தன் இலட்சியப் பாதையாக மாற்றிக் கொண்டு வெற்றி பெறுபவர்கள்தான் சரித்திரத்தில் இடம்பிடிக்கின்றனர். அதுபோல் சரித்திரத்தில் இடம்பிடிக்க தயாராக இருக்கும் கலை இயக்குநர் கிரண், ‘நான் இன்னும் சாதிக்க வேண்டியவை நிறைய இருக்கிறது’ என்று தன்னடக்கத்துடன் கூறுகிறார். அவர் கடந்து வந்த பாதை மற்றும் திரைத் துறையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி நம்முடன் பகிர்ந்து கொண்டவை.

‘‘என் வாழ்க்கையில் எனக்குப் பிடித்தது சினிமா மட்டும்தான். சினிமாவை வெறுப்பவர்கள் யாரும் கிடையாது. சிறு வயதில் எனக்கு பல கனவுகள் இருந்தாலும், என் திறமையைக் காண்பிக்க ஒரே இடம் சினிமா மட்டும்தான் என்று முடிவு செய்து, ஃபைன் ஆர்ட் கல்லூரியில் படித்தேன். அந்த கல்லூரியில் படித்த இரண்டு பேர் மட்டும்தான் நடிகர் மற்றும் இயக்குநராக உருவெடுத்தார்கள். அவர்கள் நடிகர் சிவகுமார் மற்றும் இயக்குநர் கதிர்.

என் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு என் நண்பர் மூலமாக கார்த்திக் நடித்த சீமான் படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றேன். படத்தின் இயக்குநர் ராஜ்கபூர் கோபத்துடன் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் இயக்குநரிடம், சீக்கிரம் ஒர்க் ஸ்டார்ட் பண்ணுங்க என்று சொன்னவுடன் எல்லோரும் மிகவும் வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தார்கள்.

அவர் யார் என்று கேட்டேன். அவர்தான் கலை இயக்குநர் என்று கூறினர். அன்று என் மனதில் தோன்றியது, நாம் கலை இயக்குநராக வேண்டுமென்று. அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கலை இயக்கத்தில் என்ன என்ன நுணுக்கங்கள் இருக்கின்றன என்பதை கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். ஒருமுறை, நடிகர் முரளி, ரோஜா நடித்த ஊட்டி என்ற படத்தில் என் நண்பன் நாகராஜன் கலை இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தான். என் நண்பனுடன் சேர்ந்து நானும் அப்படத்தில் பணியாற்றத் தொடங்கினேன். அப்பொழுது என் நண்பன் படப்பிடிப்புத் தளத்திற்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அவனுக்கு பதிலாக நான் அவனது பணிகளை செய்து முடித்தேன்.

படத்தை முடித்த பிறகு, படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டது. அதில் என் பெயர் இடம்பெற்றது. உடனே எனக்கு கோபம் வர, ‘என் நண்பன்தான அப்படத்தின் கலை இயக்குநர். அவர் பெயர் போடாமல், ஏன் என் பெயர் போட்டு இருக்கீங்க’ன்னு கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நீங்கதான் படம் முழுக்க பணியாற்றினீங்க. இந்த படத்தின் மூலம் உங்களை அறிமுகம் செய்து வைக்கிறோம். இதுபற்றி உங்கள் நண்பரிடம் கூறியபோது, அவரும் சரி என்று ஒப்புக் கொண்டார்’ என்று கூறினர். எதிர்பாராமல் எனக்கு நடந்த அந்த நிகழ்வு ஒரு புத்துணர்ச்சியையும், தன்னம்பிக்கையையும் அளித்தது. சந்தோசம் ஒரு பக்கம் இருக்க, என் தொழில்மீது எனக்கு பொறுப்புகள் அதிகம் ஆகிவிட்டது.

தொடர்ந்து பல திரைப்படங்கள் செய்தேன். அந்த நேரத்தில், எனக்கு விளம்பரப் படங்களில் பணியாற்றவும் வாய்ப்பு கிடைத்தது. ராஜிவ்மேனன் உடன் 120 விளம்பரப் படங்களில் நான் பணியாற்றி முடித்தபிறகு, ‘நீ இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. நீ சினிமா துறையில் உன் திறமையை வெளிப்படுத்த வேண்டும்’ என்று ஊக்கப்படுத்தினார். அதற்கு பிறகு ஜெய் நடித்த வாமனன், தெலுங்கில் ஜகடம் போன்ற படங்கள் முடித்த பிறகு, அயன் படத்தில் ஜகன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கச் சொல்லி என்னிடம் கேட்டார் இயக்குநர் கே.வி.ஆனந்த். நான் உடனே சிரித்து விட்டேன். எனக்கு நடிப்பு வராதுன்னு சொல்லிட்டேன். அதற்கு அப்புறம் கோ, அனேகன் போன்ற படங்களில் சில வேடங்களில் நடித்துக் கொண்டும், கலை இயக்குநராகவும் பணியாற்றத் தொடங்கினேன்.

அயன் படம் வெளியானவுடன் ஜெகன் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. அந்த கதாபாத்திரம் புரியாமல் நான் விலகியது எண்ணி பிறகு வருத்தப்பட்டேன். கே.வி.ஆனந்த், செல்வராகவன், விக்னேஷ் சிவன் போன்ற இயக்குநர்களுடன் தொடர்ந்து படங்கள் பண்ணிக் கொண்டிருக்கிறேன். தற்போது ஜிவி பிரகாஷ் நடித்த ‘குப்பத்து ராஜா’ படத்தில் எனது பணியை நல்லபடியாக முடித்து விட்டேன். படம் ரிலீசுக்கு ரெடி ஆகிக்கொண்டு இருக்கின்றது. சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நான் அமைத்த செட்களைப் பார்த்து பலர் பாராட்டி வருகின்றனர். இது எனக்கு மிகவும் சவாலாக இருந்த படம் என்று சொல்லலாம். என்னிடம் வந்த யாரும் நேரடியாக என்னைப் பாராட்டியது கிடையாது.

ஒருமுறை, என் நண்பன் சூர்யா, விஜய் டிவியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டு இருந்தார். ஷோ நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது, அதில் கலந்துகொண்ட ஒரு நபர் இந்த அரங்கம் மிக பிரம்மாண்டமாக இருக்கின்றது என்று சொன்னவுடன், உடனே சூர்யா இந்த அரங்கத்தை அருமையாக அமைத்தது என் நண்பன்தான் என்று நிகழ்ச்சியில் என்னைப் பாராட்டினர்.

அதேபோல், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்து இருந்த உலக நாயகன் கமல்ஹாசன் நான் அமைத்த அரங்கத்தைப் பாராட்டினர். இது இரண்டும் என் மனதில் நீங்கா இடம் பெற்றவை.

தமிழ் சினிமாவைப்பற்றி இங்கு நான் சில வார்த்தைகள் கூற கடமைப்பட்டிருக்கிறேன். நல்ல படங்கள் தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பல இயக்குநர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் உழைப்பைத் திருட்டு விசிடி, இணையதளம் மூலம் பறிக்கின்றனர். சினிமா விமர்சனம் என்ற பெயரில் தமிழ் சினிமாவை அழித்து வருகின்றனர். ஒரு படத்துக்குப் பின்னால் எத்தனை பேர் உழைப்பு இருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்தால் அவரின் நிலை என்ன என்று புரிந்து கொள்ளாமல் இதை செய்து வருகிறார்கள்.

இதற்கு நடுவில் ரசிகர்கள் பிரச்னை. உங்களுக்குப் பிடிக்காத நடிகர் படம் வரும்பொழுது பார்க்காமல் இருக்க வேண்டும். அதை செய்யாமல் ‘மிமீஸ்’ என்ற பெயரில் அப்படத்தைக் கேவலப்படுத்துவதால், எவ்வளவு நஷ்டத்தை தமிழ் சினிமா பெற்று வருகிறது என்பதை உணர வேண்டும் என்பது என்னுடைய கருத்து. நன்றி’’.

— பாண்டியராஜ்