ஜூன் 3 – ல் துவங்கும் தென்மேற்கு பருவ மழை

தென்மேற்கு பருவ மழை, வரும் ஜூன் 3ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில், துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக பெய்யும் இந்த தென்மேற்கு பருவ மழை, நாட்டிற்கு அதிகமான மழை பொழிவை கொடுக்கிறது. நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் பருவமழை மூலமாத் தான் கிடைக்கிறது. தென்மேற்குப் பருவமழை சீராக இருந்தால் மட்டுமே விவசாயம் நன்றாக செழிக்கும்.

இயல்பான மழை பொழிவு இந்த ஆண்டு இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ல் வழக்கமாக தென்மேற்கு பருவ மழை, கேரளாவில் துவங்கி, படிப்படியாக பிற மாநிலங்களுக்கு பெய்ய துவங்கும். வங்கக்கடலில் சமீபத்தில் உருவான யாஸ்’ புயலால், கேரளாவில் இன்று பருவ மழை துவங்கலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தென்மேற்கு பருவக்காற்று, நாளை முதல் வலுவடைகிறது. எனவே, தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வரும் 3 ம் தேதி துவங்கும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில், இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.