காக்க… காக்க… கோவையைக் காக்க!

இந்தியா முழுவதும் கொரோனா நோய்தொற்று மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய அறிகுறிகள் தெரிகின்றன. பல மாநிலங்கள் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கி இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் மட்டும் என்ன காரணத்தாலோ தொற்றின் வேகம் குறைந்த பாடில்லை.

இந்தியாவிலேயே மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மேலும் புதிதாக பொறுப்பேற்று இருந்தாலும் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் இந்த சிக்கலை சிறப்பாக கையாண்டு வரும் நிலையில், கொரோனா கட்டுக்குள் வராமல் இருப்பது பொதுவாக கவலையைத் தந்தாலும் சென்னையில் படிப்படியாக நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது ஆறுதலைத் தருகிறது.

கோவையில் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கவலை தருவதாகவே இருக்கிறது. இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை சொல்லிவிட முடியாது. அதைப்போலவே எதிர்மறை விவாதங்களும் தேவை இல்லை. இந்த நோய்தொற்று நிலையில் இருந்து எப்படி வெளியேறுவது, நோயாளிகளின் எண்ணிக்கையை எப்படி குறைப்பது, நோய் தொற்றை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்பதே இன்றைய எண்ணமாக இருக்க வேண்டும். அந்த வகையில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டியது நம் அனைவரின் கடமை ஆகும்.

அனைத்து செய்தி மற்றும் ஊடகங்கள், சமூக வலைத் தளங்கள் மூலமாக இந்த நோய் பரவல் பற்றி அறிந்திருந்தாலும் இன்னும் சில நடவடிக்கைகளை கடைபிடித்தால் இதை வெல்ல இயலும் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். முதலில் அரசாங்கத்தின் பொது முடக்கத்தை மதித்து நடக்க வேண்டும். அடுத்து காய்ச்சல், சளி என்று எந்த விதமான சிறிய அறிகுறிகளை கண்டாலும் சுயமருத்துவம் பார்த்து நாட்களை கடத்தாமல், உடனடியாக தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சையை ஆரம்ப நிலையிலேயே எடுத்து அபாயத்தை தவிர்ப்பது இந்த கால கட்டத்தில் மிகவும் உதவும். அதைப் போலவே கல்யாணமோ, சாவோ, மற்ற நிகழ்வுகளோ முடிந்தவரை கூட்டத்தை கண்டிப்பாக குறைக்க வேண்டும்.

கொரோனா நோய் தொற்று என்பது ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரி. இதை உணர்ந்து நம்முடைய புத்திசாலித் தனத்தை காட்டாமல் வெற்றி கொள்வதே அறிவுடைமை. இந்த இரு வாரங்களுக்குள் தமிழக முதல்வர் நேரடியாக கோவைக்கு இரு முறை வருகை தருவது அவரின், அரசாங்கத்தின் அக்கறையை காட்டுகிறது. அதனை புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டியது நமது கடமை மட்டும் அல்ல, காலத்தின் கட்டாயமும் கூட. கோவையை காப்பது என்பது நம்மை, நம் வாழ்வை, தொழில்களை, நாட்டின் பொருளாதாரத்தை காப்பது என்பதை உணரவேண்டும். அந்த வகையில் கொரோனா நோய் தொற்றிலிருந்து காக்க காக்க கோவையை காக்க என உறுதி கொள்வோம்.