எவ்வளவு புகையோ, அவ்வளவு பாதிப்பு

-டாக்டர். வி.தேவிப்பிரியா,
விழித்திரை சிறப்பு மருத்துவர், சங்கரா கண் மருத்துவமனை

புகை பழக்கம்; தற்கொலைக்கு சமம்!

சிறிதாக தெரியும் பல விஷயங்கள் தான் உலகத்தையே புரட்டிப்போட்டு வந்துள்ளது வரலாறு நமக்கு கூறும் செய்தி. சிறு வைரஸ் தான் இந்த உலகத்தின் இயல்பு நிலையை இரண்டு ஆண்டுகளாக தவிடுபொடியாக்கி வருகிறது.

சிறிய தோற்றம் உள்ள சிகரெட் தான் ஆண்டிற்கு 12 லட்சம் உயிர்களை இந்தியாவில் காவு வாங்குகிறது என்பது புகைப்பவர்களுக்கு பலருக்கும் தெரிந்திருந்தும், அதை கைவிடுவதில்லை. இதுவரை புகையிலை நுரையீரலை பாதிக்க செய்யும் என்ற தகவலை கேட்டிருப்போம்.ஆனால், புகையிலை பழக்கத்தால் கண்பார்வை பாதிப்படையும், சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும், இதயம் பலவீனம் ஆகும் என்பனவற்றை கேட்டிருப்போமா?

புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளை பலரிடமும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதியை ‘உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ என அனுசரித்து வருகிறது.

புகையிலையினால் பிற உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றி நம் கோவை பகுதியை சேர்ந்த மருத்துவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டதன் தொகுப்பு:

எவ்வளவு புகையோ, அவ்வளவு பாதிப்பு

புகை பிடிப்பதினால் நுரையீரல் மற்றும் இதயம் பாதிப்படைவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கண்களும் பாதிக்கப்படும் என்பதை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.
வயதானவர்களுக்கு கண்களில் எந்த இடத்தில் துல்லியமான பார்வை இருக்கிறதோ, அந்த இடம் பாதிப்படையும். இதுவே புகை பிடிக்கும் ஒருவருக்கு அந்த பாதிப்புக்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகரிக்கிறது.

கண்ணில் ஏற்படும் கண்புரை மற்றும் கண்களில் வறட்சி போன்றவை புகை பிடிப்பவர்களுக்கு வருவதற்கான வாய்ப்பு மிக விரைவிலேயே வருகிறது. இதைத்தவிர கண் நரம்புகள் பாதிப்படைந்து, அதனால் டையபடிக் ரெட்டினாபதி எனப்படும் விழித்திரை கோளாறு பிரச்சனையும் அதிகமாகலாம். தைராய்டு சம்பந்தமாக கண்களில் வரும் பாதிப்பு அதிகரிக்கலாம்.

புகை பிடிப்பதின் ஆரம்ப கட்டத்தில் உள்ள ஒரு நபருக்கு கண் எரிச்சல் இருக்கும். புகையினால் கண்ணில் உள்ள ரத்த நாளங்களில் கண் எரிச்சல் பாதிப்பு வரும். கண் வறட்சி, கண்ணில் நீர் வடிதல் இது போன்ற பிரச்சனைகள் கூட அவர்களுக்கு ஏற்படும். புகை பிடிப்பவரின் அருகில் இருப்பவர்களுக்கும் இந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகளவில் உள்ளது.
புகை பிடிக்கும் பழக்கத்தை 10 அல்லது 15 வருடத்திற்கு முன்பு நிறுத்த முடியாத ஒன்றாக இருந்ததால், அந்த காலகட்டத்தில் கண் நரம்புகள் பாதிப்படைந்து பார்வை முற்றிலுமாக போய்விடக்கூடிய நிலை ஏற்பட்டது.

எவ்வளவு காலம் புகை பிடிக்கிறோம் என்பதை பொறுத்து அதற்கான பாதிப்பு உள்ளது. ஆனால் இந்த பழக்கத்தை நிறுத்தினால் நிச்சயமாக அதற்கான பலன் உள்ளது. புகையிலை எந்ததெந்த பொருட்களில் உள்ளதோ, அதற்கான பாதிப்புகள் கண்டிப்பாக வரும். புகைபிடிப்பதை நிறுத்தினால் மேற்கொண்டு பாதிப்பு அதிகமாகாமல் தவிர்க்க முடியும்.

புகை பிடிப்பதினால் கண் நரம்பு குறைபாட்டினாலோ, ரெட்டினாபதி பாதிப்பினாலோ போன பார்வை பழைய நிலைக்கு திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் பாதிப்பு தொடங்குவதற்கு முன் தடுப்பதற்கான வாய்ப்பும், மேற்கொண்டு அதிகம் பாதிப்பு ஏற்படாமலும் தடுக்கலாம்.
புகை பிடித்து கொண்டிருக்கும் நபர் இனி, அந்த பழக்கத்தை விட்டுவிட்டார், எனில் நிச்சயமாக பாதிப்பு வராமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.