நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் புகை!

-டாக்டர். ஆர்.சுப்ரமணியம்,
கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர், கே.எம்.சி.ஹெச்

 

புகை பழக்கம்; தற்கொலைக்கு சமம்!

சிறிதாக தெரியும் பல விஷயங்கள் தான் உலகத்தையே புரட்டிப்போட்டு வந்துள்ளது வரலாறு நமக்கு கூறும் செய்தி. சிறு வைரஸ் தான் இந்த உலகத்தின் இயல்பு நிலையை இரண்டு ஆண்டுகளாக தவிடுபொடியாக்கி வருகிறது.

சிறிய தோற்றம் உள்ள சிகரெட் தான் ஆண்டிற்கு 12 லட்சம் உயிர்களை இந்தியாவில் காவு வாங்குகிறது என்பது புகைப்பவர்களுக்கு பலருக்கும் தெரிந்திருந்தும், அதை கைவிடுவதில்லை. இதுவரை புகையிலை நுரையீரலை பாதிக்க செய்யும் என்ற தகவலை கேட்டிருப்போம்.ஆனால், புகையிலை பழக்கத்தால் கண்பார்வை பாதிப்படையும், சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும், இதயம் பலவீனம் ஆகும் என்பனவற்றை கேட்டிருப்போமா?

புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளை பலரிடமும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதியை ‘உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ என அனுசரித்து வருகிறது.

புகையிலையினால் பிற உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றி நம் கோவை பகுதியை சேர்ந்த மருத்துவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டதன் தொகுப்பு:

நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் புகை!

தொடர்ச்சியாக புகைபிடிப்பது காலப்போக்கில் நுரையீரலில் மாற்றத்தை கொண்டுவருகிறது. ஒரு கட்டத்தில் புற்றுநோய் ஏற்படவும் வழிவகுக்கின்றது. புகைப்பிடித்தல் தான் பலருக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.

கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிட்டலில் ஆண்டிற்கு 150 முதல் 200 நுரையீரல் புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு வைத்தியம் செய்கிறோம், இதில் பெரும்பான்மையானோர் புகையிலை மூலம் பாதிப்படைந்தவர்களாக இருக்கின்றனர்.

நாள் ஒன்றிற்கு 20 சிகரெட்டை 20 ஆண்டுகளாய் பிடித்துவரும் எந்த நபருக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உயர்ந்த நிலையில் தான் இருந்துவரும். ஆனால் புகைப்பழக்கத்தை எப்போது கைவிட்டாலும் நன்மைகள் கிடைப்பது நிச்சயம்.

இதுவரை நேர்ந்த பாதிப்பு குறையுமா என்றால், நீங்கள் சமீபத்தில் தான் பிடிக்கத் துவங்கியவர் என்றால், புகைப்பழக்கத்தை நிறுத்தியதும் நுரையீரல் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புகள் உண்டு, ஆனால் நெடுநாட்கள் பழக்கமுடையவராக இருந்தால் புகைப்பழக்கத்தை கைவிடுவதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதை தள்ளிப்போடவும், நுரையீரல் இன்னமும் சேதாரமாவதை தடுக்கவும் அதிக வாய்ப்புகள் உண்டு.

புகைபிடிப்பவர்களின் நுரையீரல் ஏற்கனவே பலவீனமாக இருக்கும் நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வருவது மிக சவாலாக இருக்கும், சிக்கல்களும் அதிகரிக்க வாய்ப்பும் உண்டு.

சிகரெட் பிடிப்பது ஒன்றும் பேஷன் கிடையாது. மன நிம்மதிக்காக புகைபிடிக்கலாம் என நண்பர்கள் சிலர் சொன்னால் அதை கண்டுகொள்ளாமல் தவிர்த்துவிடுவது நல்லது. வாழ்நாளில் சிகரெட்டை நினைத்தே பார்க்கவில்லையென்றால் வாழ்க்கைத்தரம், உடல் நலம் இரண்டும் நல்ல முறையில் இருக்கும்.