கைதி -2 எப்போது: தயாரிப்பாளர் விளக்கம்

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கைதி திரைப்படம் கடந்த 2019 ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியானது. விஜய்யின் பிகில் திரைப்படம் வெளியான தினத்தில் தான் இந்த படமும் வெளியானது. ஆனாலும் இந்த படம் 24 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி 105 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய லாபத்தை ஈட்டியது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் விமர்சன ரீதியாக  நல்ல வரவேற்பு கிடைத்த, இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தின் வெற்றிக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கைதி 2 கண்டிப்பாக உருவாகும் என்றும், முதல் பாகத்தின் இறுதியிலிருந்து 2-ம் பாகம் தொடங்கும் எனவும் தெரிவித்திருந்தனர். ஆனால், அதற்குப் பிறகு இப்படம் குறித்து எந்தவொரு தகவலுமே இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் ‘கைதி 2’ படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, ‘கைதி 2’ படம் நிச்சயம் உருவாகும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களும் முடிந்தவுடன் மீண்டும் கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்திற்காக இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.