கொரோனாவும், நோய் எதிர்ப்பு சக்தியும்

கொரோனா தொற்று, கரும் பூஞ்சை போன்ற எந்த நோயாகட்டும் உடலில் போதுமான நோய் எதிர்ப்பு இருந்தால் எது வந்தாலும் நம்மால் ஓரளவு நிலைமையை சமாளித்துக் கொள்ள முடியும்.

கொரோனா முதல் அலையை காட்டிலும் இந்த இரண்டாம் அலை அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையில் அவ்வளவாக பாதிக்கப்படாத குழந்தைகள் மற்றும் இளவயதினர் கூட இந்த இரண்டாம் அலையில் சிக்கியுள்ளனர். ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசிகளின் பற்றாக்குறை ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது போன்ற இக்கட்டான காலகட்டத்தில் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் உடலின் நோயெதிர்ப்பை வலுப்படுத்தும் வகையிலான சத்துக்கள் இருப்பது மிக முக்கியம்.

நம் உடலை பாதுகாத்துக் கொள்ளும் இயற்கையான திறனை மேம்படுத்துவதன் மூலம் தொற்றுநோய்களுக்கு எதிரான போராட்டத்தை உடலில் ஏற்படுத்த முடியும்.

நெல்லி:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு சிறந்த வீட்டு மருந்தாக நெல்லி உள்ளது. இதில் நிறைந்து காணபபடும் வைட்டமின் சி, உடலில் வெள்ளை ரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது. இது நோய் தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக இருக்கிறது. வைட்டமின் ஏ, பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட சத்துகளும் நெல்லிக்காயில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது

ஆரஞ்சு :

ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி உயிரணுக்களை பாதுகாப்பதன் மூலமும், நோயெதிர்ப்பு உயிரணு வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமும் நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலங்களை மேம்படுத்துகிறது. பொதுவாகவே சிட்ரஸ் பழங்களில் கால்சியம், பொட்டாசியம், ஃபோலேட், தைமின் மற்றும் நார்ச்சத்து நிறைந்து இருக்கும். ஆரஞ்சுடன் மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவை கலந்து தயாரிக்கப்படும் பழசாறு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொய்யா :

மலிவான விலையில் விற்கப்படும் சத்தான பழங்களில் ஒன்றான கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. கொய்யாவிலிருக்கும் குர்செடின், லைகோபீன், வைட்டமின் சி மற்றும் பிற பாலிஃபோன்கள் உடலில் உற்பத்தி செய்யப்படும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக இருக்கிறது.

இஞ்சி, பூண்டு :

இஞ்சியில் இருக்கும் ஜிஞ்செரோல்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. உடலில் வைரஸ்களின் பெருக்கத்தை தடுக்கின்றன. இஞ்சியில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

பூண்டில் உள்ள அலிசின் சத்து,  இயற்கை ஆன்டிபயாடிக்காக செயல்படுகிறது. பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளிலிருந்து நுரையீரலைக் காப்பதற்கு பூண்டு உதவுகிறது. உடலில் வெள்ளை ரத்த அணுக்களின் நோய்யெதிர்ப்பை அதிகரிக்கிறது.

மஞ்சள் :

அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்ட செயலில் உள்ள மூலப்பொருள் குர்குமின் இருப்பதனால் மஞ்சள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சுவாசக் குழாய்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சலை போக்க உதவி, சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது உடலுக்கு வைரஸ் தடுப்பு பண்புகளை வழங்குகிறது.

துளசி :

வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் ஏராளமாக உள்ளதால் இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்களை தடுக்கிறது. சக்திவாய்ந்த ஆன்டிவைரல், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை துளசி கொண்டுள்ளது. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில், 2-3 துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி கூடும்.

கருமிளகு :

வைட்டமின் சி நிறைந்து காணப்படும் இது இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் ஒரு ஆண்டிபயாடிக்காகவும் செயல்படுகிறது.

 

தகவல்: News 18 Tamilnadu