கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரி நியமிக்க வேண்டும்

– கோவை மக்கள் முதல்வருக்கு வேண்டுகோள்

நாட்டிலேயே கொரானா நோய்த்தொற்று அதிகமாக பரவி வரும் பகுதிகளில் ஒன்றாக கோயம்புத்தூர் மாவட்டம் மாறி வருகிறது. இந்த கொரானா நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

என்றாலும் அவற்றை மீறி இந்த நோய்தொற்று கட்டுக்கு அடங்காமல் பரவி வருகிறது. இந்த நிலையில் அரசாங்கம், அதிகாரிகள், முன் களப் பணியாளர்கள் மட்டும் தனியாக எதுவும் சாதித்து விட முடியாது. ஒவ்வொரு தனிமனிதனும்  தங்கள் முழு ஒத்துழைப்பையும்   மனப்பூர்வமாக வழங்கினால் தான் இந்த நிலையில் இருந்து நாம் அனைவரும் விடுபட இயலும்.

சென்ற ஆண்டு வந்ததை விட இந்த இரண்டாம் அலை பரவல் பல விதங்களில் கூடுதல் வீரியம் பெற்று இருப்பது கண்கூடாக தெரிகிறது. எனவே அதற்கேற்ப நடந்து கொண்டு இதில் இருந்து விடுபட வேண்டியது அறிவார்ந்த மக்கள் சமூகத்தின் கடமை. அதை உணர்ந்து நடக்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

ஒரு புறம் முறையாக எந்த கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்காமல் அசட்டு துணிச்சலுடன் திரிவது, இன்னொரு புறம் ஆம்புலன்ஸ் இல்லை, ஆக்சிஜன் இல்லை, மருத்துவமனையில் இடம் இல்லை என்று சத்தம் போடுவது என்று இரண்டும் இங்கே நடக்கிறது. முதலில் இந்த நோயைக் கட்டுப்படுத்த அதன் சங்கிலியை அறுக்க வேண்டும். அதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு  ஒத்துழைப்பு தர வேண்டும் அப்போது தான் இந்த நிலையில் இருந்து விடுபட முடியும்.

கடுமையான சோதனைக்கு, சிக்கலுக்கு உள்ளாகி இருக்கும் நமது மருத்துவ கட்டமைப்பு உடைந்து விடாமல் நாம் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இன்றைய நிலையில் வாழ்வா, வாழ்வாதாரமா எது முக்கியம் என்ற முக்கியமான கேள்வி நம் முன் எழுந்துள்ளது. எப்போதுமே மனித குலத்துக்கு உயிர்தான் முக்கியம். உயிர் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அந்த வகையில் ஒவ்வொரு மனிதரும் தங்கள் உயிரையும் காப்பாற்றிக் கொண்டு சக மனிதர்களுக்கும் துன்பம் தராமல் குறிப்பாக நோய்தொற்று தராமல் இருப்பது அவசியம்.

இந்த வாரம் தமிழக அரசு பொதுவான அரிசி  ரேசன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு நிவாரண தொகையாக 2000 ரூபாய் வழங்கி உள்ளது. வரும் மாதமும் வழங்க உள்ளது.கூடவே மளிகை பொருட்களும் வழங்க உள்ளது. போதாக்குறைக்கு காலையில் 4 மணி நேரம் காய்கறி மளிகை கடைகள் திறந்து இருக்கின்றன. வேறு என்னதான் வேண்டும்? இதையும் மீறி அவசியம் இல்லாமல் வெளியில் சுற்றுவது, கண்டிப்பாக நோயை பரப்புவது  குற்றம் என்றே கருதப்பட வேண்டும். மேலும் இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலையில் திருமணம், உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டுக்கு செல்வது,போன்ற செயல்களில் ஈடுபடுவதை மனசாட்சியுடன் தவிர்க்க வேண்டும்.

இந்த ஒரு நோயால் எத்தனை உயிர்கள் போய் கொண்டு இருக்கின்றன, எத்தனை ஆயிரம் குடும்பங்கள் சிதறிப் போய் இருக்கின்றன, எவ்வளவு குழந்தைகள் தங்கள் பெற்றோர் குறிப்பாக தந்தையை இழந்து உள்ளார்கள் என்று ஒரு முறை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இறுதியாக தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்,  சென்னைக்கு அடுத்து அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள பகுதியான இங்கு தடுப்பு பணிகளை இன்னும் வேகப்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சி தலைவர் உள்ளிட்ட நிர்வாகம் இன்னும் கூடுதல் பலத்துடன் செயல்படும் வகையில் சிறப்பு அதிகாரி அல்லது அதிகாரிகள் குழு ஒன்றையோ அமைப்பது இன்னும் சிறப்பாக செயல்பட உதவும். முதலமைச்சர் அவர்களே நேரடியாக வந்து ஆய்வு செய்வது மக்கள் அனைவருக்கும் ஒரு பெரும் நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது.  அரசுடன் ஒத்துழைப்பு கொடுத்து  இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தி விடுபடுவோம்.