தொட்டதெல்லாம் துலங்கும் “தைப்பூசம்”

தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமாக கொண்டாடப்படுவது தைப்பூசம். இத்தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இன்று (31.01.18) கோவை காந்திப்பார்க்கில் அமைந்துள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

தை மாதத்திலே வரும் பூச நட்சத்திரம் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பூரணை நாளாக) இருக்கும். தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேச தினமாகும். “தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்” எனும்  பழமொழிக்கேற்ப அன்றைய தினம் பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், ஏடு தொடக்குதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற்கொள்ளப்பெறுகின்றன.

அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள். இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவார்கள். சஷ்டி கவசம், சண்முகக் கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

முருகனுக்கு காவடி எடுப்பதன் காரணம்…

தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான். இந்தக் காவடி எடுப்பதன் காரணம் என்ன?

அகஸ்திய முனிவர், தனது சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து, தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.

அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகளையும் திருஆவினன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். இடும்பன் வழி தெரியாமல் திகைத்தபோது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப்போல் தோன்றி இடும்பனை ஆவினன்குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார்.

இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்துவிட்டுப் புறப்படும்போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும்போது சிவகிரியின்மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

ஆனால் அந்த சிறுவன் இந்த மலை ”தனக்கே சொந்தம்” என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம்போல் கீழே சரிந்து விழுந்தான்.

இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பனின் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது இடும்பனைப்போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக முருகன் வரமளித்தார். அப்போது முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகிவிட்டது என்று ஆன்மிக வரலாறு கூறுகின்றது.

ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும் துன்பமும் இரண்டு சுமைகளாக சரி சமமாக இருக்கிறது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும். இதற்கு கடவுள் பக்தி என்பது இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாகச் சுமக்க உதவும் மையக்கோலாக உள்ளது என்பதே உண்மை.