மனிதனை போன்ற ‘ஆவுளியா’ கடல் விலங்கு

கடலில் பல உயிரினகள் வாழ்ந்து வருகின்றன. அதில் ஒரு சில விலங்குகள் மிகவும் வேறுபட்டதாகவும், ஆச்சரியமூட்டும் வித நடவடிக்கைள் மேற்கொள்வதாகவும் இருக்கும். அதில் மனிதர்களுடைய இயல்பை பெற்றிருக்க கூடிய கடல் விலங்கு கடல் பசு என்றழைக்கப்படும் தூய தமிழில் “ஆவுளியா” என்றழைக்கும் விலங்கு மிகவும் அரியவகை உயிரினம்.

இந்த ‘ஆவுளியா’ வெளிர் சாம்பல் நிறத்தில் தோற்றமளிக்கும் ஆவுளியா, மூன்று மீட்டர் நீளத்தில் சுமார் 400 கிலோ எடையுடன் காணப்படும். இந்தோ-பசிபிக் பகுதியின் வெப்ப மண்டலக் கடல்களில் ஆழம் குறைவான பகுதிகளில் இவை காணப்படுகின்றன. கிழக்கு ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், செங்கடல், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை ஒட்டிய கடல் பகுதிகளில் வாழ்கின்றன. இந்தியாவில் கட்ச் வளைகுடாவிலும், மன்னார் வளைகுடாவிலும், அந்தமான்- நிக்கோபார் தீவுகளிலும் இவை வாழ்கின்றன. அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் மாநில மிருகம் ஆவுளியா ஆகும். ‘சிரேனியா’ (Sirenia) வரிசையில் உயிர் வாழும் நான்கு இனங்களில் ஆவுளியாவும் ஒன்றாகும்.

ஏறக்குறைய நாற்பது நாடுகளில் ஆவுளியா பரவியுள்ளது. இன்றைய சூழ்நிலையில், ஆஸ்திரேலிய கடற்பகுதியில்தான் ஆவுளியா அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது. சுமார் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யானை போன்ற ஒரு மிருகம், நீருக்குள் சென்று பரிணாமம் அடைந்து, ஆவுளியாவாக மாறியது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகில் வாழும் பாலூட்டிகளில் நீருக்குள் வாழும் ஒரே தாவரவுண்ணி ஆவுளியாதான்.

கடல் புல்லை மட்டும் உண்ணும் சாதுவான விலங்கு இது. ஆவுளியாவுக்கு முன் துடுப்பு மட்டுமே உண்டு. பின் துடுப்பு கிடையாது. இதன் வால் டால்பின் வால்போல் பிளந்திருக்கும். ஆனால் ஆவுளியா, மீன் குடும்பத்தைவிட, யானை குடும்பத்திற்குத்தான் நெருங்கிய உறவாம்.

இதன் தலை உருண்டை வடிவில், முகவாய் கீழ்நோக்கி அமைந்திருக்கும். தொங்கியபடி இருக்கும் இதன் மேல் உதடு, கடல் பாசியை மேய வசதியாக அமைந்துள்ளது. மேலுதட்டில் காணப்படும் உணர்ச்சிமிக்க முட்கள், இரை தேட உதவுகின்றன. இரு நாசித் துவாரங்கள் தலையின் மேற்பகுதியில் அமைந்திருக்கும்.

நீருக்குள் மூழ்கும்போது, நாசித்துவார மூடிகள், மூக்கை மூடிக்கொள்ளும். ஆவுளியா நுரையீரல் மூலம் சுவாசிக்கும். ஆறு நிமிடங்களுக்கு ஒருமுறை நீரின் மேற்பரப்புக்கு வந்து ஆக்ஸிஜனை சுவாசித்துச் செல்லும். ஆழமில்லாத நீர்ப்பரப்பில் இருக்கும்போது, வாலை தரையில் ஊன்றி, கழுத்தை மட்டும் வெளியே நீட்டியபடி நிற்கும். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 40 கிலோ எடையுள்ள கடல் தாவரங்களை உண்ணும். இரையை விழுங்கும்முன், தலையை உலுக்கி, மண்ணை வெளியேற்றி விட்டு சாப்பிடும்.

ஆவுளியாவால் வேகமாக நீச்சலடிக்க முடியாது. மணிக்கு ஆறு மைல் வேகத்தில் நீந்தும். மிக மெதுவாக, ஒயிலாக, ஒய்யாரமாக நீந்தும். ஆவுளியா நீந்தும் அழகில் மயங்கிய பழங்கால மீனவர்கள், அவற்றை கடல் கன்னியென்று எண்ணி, கட்டுக்கதைகளைப் பரப்பினர்.

ஆண் ஆவுளியா பருவ வயதை எட்டும்போது, 12-15 ஆண்டுகளில் தந்தங்கள் வளரும். வெட்டுப்பற்களே தந்தங்களாக வளரும். பெண் ஆவுளியாவின் தந்தங்கள்் வெளியே தெரியாது. இதன் கர்ப்ப காலம் ஓராண்டாகும். ஒற்றைக்கன்றை ஈனும். மூன்று முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை கருவுறும். ஒன்றரை வருடங்கள் வரை குட்டி தாயுடனே வளரும். ஆவுளியாவின் இனப்பெருக்கம் மிகத் தாமதமாக நடைபெறுவதால், இதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த அபூர்வ விலங்கின் ஆயுட்காலம் எழுபது ஆண்டுகள் ஆகும். இதன் எதிரிகள் – திமிங்கலம், சுறா, முதலை ஆகியவை ஆகும்.

ஆனால், முக்கிய எதிரி மனிதனே. ஆவுளியாவின் சுவையான மாமிசத்திற்காகவும் தோலுக்காகவும் வேட்டையாடிக் மனிதர்களால் வேட்டையாடப்படுகிறது. இதன் கனத்த தோலிலிருந்து விலையுயர்ந்த தோல் பொருட்களையும் பற்களைப் பொடித்து நஞ்சு முறிவு மருந்தும், கொழுப்பிலிருந்து எண்ணெயும் தயாரிக்கப்படுகின்றன. இந்திய கடற்பகுதியில் ஆவுளியாக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. பாதுகாப்பு சட்டங்கள் பல போட்டும் பலனில்லை. மீனவர்களின் படகைக் கண்டால், தப்பிச் செல்லாமல் சுற்றிச்சுற்றி வரும் அளவுக்கு மிகவும் அப்பிராணி இது. இரக்கமற்ற மனிதனின் கொடூர செயலால் ஆவுளியா அழிவின் விளிம்பில் உள்ளது.