நல்ல தொடக்கம்…

பத்தாண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் உதயமானதற்கு முக்கிய காரணமாக திகழ்பவர் அக்கட்சியின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். தனது அரை நூற்றாண்டு கால அரசியல் பயணத்தில் கிடைத்த அனுபவத்தினாலும், அயராத உழைப்பினாலும், விடா முயற்சியின் மூலமாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 159 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற உறுதுணையாக இருந்து வெற்றிக்கனியை எட்டிப்பிடிப்பதற்கு வித்திட்டுள்ளார்.

திமுக ஆட்சி அமைத்த காலகட்டத்தில்  பல்வேறு குற்றசாட்டுகள் இருந்து இருந்தாலும், ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள இந்த ஆட்சி  சில  நாட்களுக்கு உள்ளாகவே மக்கள் நலன் சார்ந்த பணிகளையும், கொரோனா தடுப்பு பணிகளையும்  சிறப்பாக கையாண்டு வருகிறது.  அரசு எடுக்கும் சில முடிவுகள் மற்றும் நடைமுறைகள் அரசாங்கம் சரியான திசையில் செயல்படுவதை காட்டுவதாக  உள்ளதோடு, வெளிப்படை தன்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் என்ற தேர்தல் வாக்குறுதியை ஒவ்வொரு செயலின் மூலமும் நமக்கு உணர்த்துகிறார்.

அதிகாரபூர்வமாக பதவியேற்கும் முன்னே அதிகாரிகளை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட விதம் மற்றும் பதவியேற்ற பின்பும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி அதில் கொரோனா தடுப்பு ஆலோசனைகளை மேற்கொண்டது போன்ற செயல்கள் இந்த கொரோனா பெருந்தொற்றை சமாளிப்பதில் முனைப்புடன்  செயலாற்றுவதை தெரிவிப்பதாக உள்ளது.

பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பு அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. அன்றாடம் பணிக்கு செல்லும் பெண்களும், சிறு வியாபாரம் செய்யும் பெண்களும் அவர்களின் ஊதியத்தில் இருந்து ஒரு கணிசமான தொகையை இனி பேருந்துக்கு செலவழிக்க தேவையில்லை. ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையை இந்த இலவச பயணம் மிச்சப்படுத்தும்.  அதுமட்டுமில்லாமல் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்ற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த அசாதாரணமான சூழலில் நன்றாக தொடங்கி இருக்கும் அரசின் செயல்பாடுகள் எப்போதும் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் மிகுதியாகவே உள்ளது. காலியாக கிடக்கும் சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை கொண்டு காணப்படும் கஜானாவின் நிதி நிலையை  சீரமைத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிய பின்தான் மற்ற வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என்பதை தமிழக அரசு புரிந்து கொண்டு இருப்பதை  தொடக்க கால செயல்பாடுகள்  காட்டுகின்றன.

கொரோனா நோயாளிகள், காப்பீட்டு திட்டத்தின் மூலமாக தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெரும் விதமாக கட்டண தொகையை அரசாங்கமே ஏற்கும் என்ற அரசாணை வெளியீடு, சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கான இடவசதி மற்றும் ஆம்புலன்ஸ் இருப்பு போன்றவற்றை கண்காணிக்கும் விதமாக 24 மணி நேரமும் செயல்படும் வார் ரூம் கட்டுப்பாட்டு அறையினை உருவாக்கியுள்ளது.

மத்திய அரசு ஒதுக்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லை என தேவையான தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்த புள்ளி, ஆக்ஸிஜன் இருப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கை  எடுத்ததோடு மட்டுமல்லாமல் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முன் வரும் நிறுவனங்களுக்கு 30% மூலதன மானியம் என்ற சிறப்பு சலுகையை அறிவித்திருப்பது மருத்துவ நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்கின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அலட்சியத்தோடு செயல்படாமல் அதனை முறையாக கையாளும் பக்குவம் இந்த அரசிடம் உள்ளது  என்றே சொல்ல வேண்டும்.

தொழில் மற்றும் வணிக சங்க அமைப்பு சார்ந்த ஆலோசனை கூட்டம் நடத்தி தொழில் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு சலுகை வழங்கியுள்ளது. மேலும் இந்நிறுவனங்களின் கடன் தொகையை திரும்ப செலுத்த 6 மாத கால அவகாசம் வேண்டி, முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

அனைத்து விதமான பிரச்சனைகளின் மீதான கவனம், அதற்கான  நடவடிக்கையை மிக குறுகிய காலத்திலே  செயலாற்றுவது போன்றவை அனைவரும் விரும்பும் ஒரு மாற்றத்திற்கான துவக்கமாக உள்ளது.