பொய்மை இல்லா ‘அன்பு’

இந்தியா நம் தாய் நாடு, தமிழ் நம் தாய் மொழி. நாம் வாழும் நாட்டையும், பேசும் மொழியையும், உணவளிக்கும் மண்ணையும், தாகம் தீர்க்கும் நதியையும், பெண்ணாக, தாயாக போற்றுகிறோம்.   ஆனால் நம்மை கருவில் சுமந்து, ரத்தமும், சதையுமாய் பெற்றெடுத்த அன்னையை நாம் எவ்வாறு போற்றுகிறோம்.

அன்னை வாழும் தெய்வம், கேட்காமல் வரம் தரும் சாமி, பசிக்க வில்லை என்றாலும் நேரத்துக்கு உணவுக்கு கொண்டு வந்து எத்தனை வயதானாலும் ஊட்டி விடுவாள். வலியென்று நாம் கலங்கினால் கண்ணீர் துளிகள் முதலில் அவள் கண்ணில் இருந்து தான் வரும். பெற்ற மனம் பித்து என்பதை போல, நம்மை எத்தனை வயதானாலும் மடியில் சாய்த்து தாலாட்ட தயங்க மாட்டாள்.கடவுள் எல்லா இடங்களிலும் தோன்ற இயலாது என்பதால்தான் அன்னையைப் படைத்தான் என்று யூத பழமொழி சொல்கிறது.

ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டபோது தன் அன்னையைப் பற்றித்தான் நினைத்தார் என்று குறிப்புகள் உள்ளன. “இறைவனை வணங்குவதை விட தாயை வணங்குவதே பெரும் புண்ணியம்” என்று கவிஞர் கண்ணதாசன் கூறியுள்ளார்.

கலப்படமான பொய்மைகளுடனான பல உறவுகள் மத்தியில் கலப்படமில்லாத பொய்மையில்லா ஒரு உறவு அம்மா மட்டும் தான். கோடிகளை சம்பாதிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறிதளவு தாயின் மீது அன்பு செலுத்துங்கள். மடியில் கிடத்தி தாலாட்டு பாடிய தாய்க்கு நீங்களும் தாலாட்டு பாடவேண்டாம். அவளுக்கு உங்கள் அன்பு மட்டும் போதும்.

பிறர் கஷ்டத்தில் பங்கு கொள்பவர்

வி.கோபால கிருஷ்ணன், எஸ்.என்.ஆர் குழுமம்

என் அம்மா வேலுமணியம்மாளை “கைராசி அன்னை”  என அனைவரும் அழைப்பார்கள்.  ஒரு சமூக ஆர்வலராக இருந்து  எளியவர்களின்  கல்யாணத்திற்கும், ஏழைமக்களுக்கு  அவர் செய்த தொண்டின் காரணமாக அவரை கைராசி அன்னை என கூறுவார்கள்.

சுதந்திர போராட்டத்தின் போது  காந்தி ஒரு சமயம் கோவை வந்தார். அப்பொழுது சிறுவயதில் காந்தியின் மடியில் என் அம்மா அமர்ந்து தன் கையில் இருக்கும் வளையலை அவருக்கு அன்பளிப்பாக அளித்துள்ளார்.

என் அம்மாவிடம் எனக்கு மிகவும் பிடித்த விசயம், மற்றவர்களுடைய கஷ்ட நஷ்டத்தில் அவர் பங்கு கொள்வார்.  பிறர் படும் துன்பங்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும்  என்று கூறியே  எங்களை வளர்த்தார்.  இந்த ஒரு நல்ல குணத்தை அவர்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.

நாம் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் நம்மிடம் உதவி என கேட்டு வருபவர்களுக்கு நம்மால் முடித்த உதவிகளை செய்ய வேண்டும் என அவர் சிறுவயதில் இருந்தே என்னிடம் கூறுவார். பிறருக்கு உதவும் ஒரு மனப்போக்கு வரவேண்டும் எனவும் அப்பொழுது தான் பொது வாழ்வில் ஈடுபட முடியும் என்றும் கூறுவார். என்  தாயாரின்  பெயரிலே அவர் நினைவாக ராமகிருஷ்ணா மருத்துவமனையிலும், காரமடையிலும்  வேலுமணியம்மாள்  என்ற மண்டபத்தை கட்டியுள்ளோம். அவரின் பெயரிலே வேலுமணியம்மாள் என்ற நற்பணி மன்றம் ஆரம்பித்து, அறநிலையத் துறையில் எந்தெந்த கோவில்களில் உதவி தேவைப்படுகிறதோ அதை நாங்கள் இந்த நற்பணி மன்றம் வாயிலாக செய்து வருகிறோம்.  காரமடை ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் தேர் திருவிழாவின் போது இந்த நற்பணிமன்றம் மூலம் அன்னதானத்தை வழங்குகிறோம்.

என் பார்வைக்கு தெரிந்த வரை  இன்றைய  தலைமுறை குழந்தைகளும் அவர்கள்  தாயின் மீது அன்பும், மதிப்பும், மரியாதையும் கொண்டுள்ளனர்.  அதே சமயத்தில் அம்மாக்களும் தன்  குழந்தைகளை அனுசரித்து, அவர்களுக்கு நல்ல விசயங்களை கற்று கொடுத்து சிறந்த மனிதராக வளர்க்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

 

கண்டிப்பும், அரவணைப்பும்!

டாக்டர் எஸ். ராஜசபாபதி, தலைவர், பிளாஸ்டிக் சர்ஜரி,

கை மற்றும் புனரமைப்பு அறுவை சிகிச்சை, கங்கா மருத்துவமனை

அம்மா என்றாலே அன்பு, அக்கறை, கவனிப்பு தான். இப்பண்புகள் தாய்மைக்கே உரித்தானது. அம்மாக்கள் அனைவருமே தன் குழந்தைகளை மிகவும் நன்றாக பார்த்துக் கொள்ளகூடியவர்கள்.

குழந்தைகளின் முன்னேற்றத்தில் தாயின் பங்கு தனித்துவமானது. என் அம்மா நான் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்ற வழிகாட்டியாக இருந்தார். ஒரு குறிக்கோள் வைத்து, அதை அடைய நீ கடினமாக உழைக்க வேண்டும்  என அவர் ஊக்குவிப்பார்.

யாரோடு நம்மை ஒப்பிட்டு பார்க்கிறோம் என்பது முக்கியம். நம்மை சார்ந்த சிறு வட்டத்திற்குள் ஒப்பிடாமல், இந்த உலகத்தோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என கூறுவார். அடைய நினைக்க கூடிய இடத்தை நாம் திருப்திபடுவதற்கு ஏற்ப சிறியதாக வைக்கக் கூடாது என்றும்  நம்முடைய முழு ஆற்றலுக்கும் தகுத்தாற் போல நாம்  அதில் சாதிக்க வேண்டும் என கூறுவார். எதை செய்தாலும் முழுமையாகவும் நல்லதாகவும்  செய்ய வேண்டும் என்ற அறிவுரையை வழங்குவார்.

என் அம்மா பள்ளி வரை மட்டும் தான் படித்துள்ளார். ஆனால் அவருக்கு இருக்கக்கூடிய திறமை மிகவும் அதிகமானது.  குழந்தைகளை அரவணைத்தே செல்ல வேண்டும் என அனைவரும் கூறுவார்கள்.

அன்றைய காலத்தில் எல்லாம் பிள்ளைகளை அடித்து தான் வளர்த்தார்கள். ஆனால் அப்படி அடித்தது எல்லாம்  குழந்தைகளின் நன்மைக்கு தான். இப்பொழுது உள்ள குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ உடனே  கோபித்துக் கொள்கிறார்கள். அடித்தாலும் கூட கண்டிப்புடன் சேர்ந்த அரவணைப்பு இருக்கும்.

85 வயதாகும் என் அம்மா காலத்திற்கு ஏற்பவும், எங்களின் தேவைக்கு ஏற்பவும் அவர்களை அதற்கேற்ப  மாற்றி கொண்டே தான் இருந்தார். கங்கா மருத்துவமனையின் வளர்ச்சிக்காக இன்றளவும் அவர் யோசிக்கிறார்.  20 வருடம் கழித்து மருத்துவமனை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி சிந்திக்கிறார்.அவர் நலமுடனும், மகிழ்ச்சியாக இருக்கவும் நான் என்றும் கடவுளை வேண்டுகிறேன்.

நம் தாய், தந்தையரை தேர்தெடுப்பதற்கான வாய்ப்பு இல்லையென்றாலும், அவர்கள் நமக்கு கடவுளால் அளிக்கப் பட்ட பரிசு.

 

என் தாய் பற்ற வைத்த விறகடுப்பு இந்த ஹரிபவனம்

ஆர்.பாலச்சந்தர், நிர்வாக இயக்குநர், ஹோட்டல் ஹரிபவனம்

தாயினுடைய அற்புதம், மதிப்பு, அவர் எவ்வளவு முக்கியம் என்பதை தாயை இழந்த எல்லோரும் முழுமையாக உணர்ந்திருப்பார்கள். ஏனெனில் இவ்வுலகில் ஒரு பெரிய இழப்பு எது எனில் அது தாயின் இழப்பாக தான் இருக்கும்.

அம்மாவின் மதிப்பு தெரியாமல் அவர்களை திட்டுகிறோம், அவர் மீது கோவம் கொள்கிறோம். ஆனால் தாயை இழந்த ஒருவர் நிச்சயமாக அவரின் மதிப்பை அவரின் இழப்பிற்கு பின் உணர்ந்து இருப்பார்.

எனக்கு அனைத்தையும் சொல்லி கொடுக்க வேண்டிய வயதில் என் தாயை இழந்து விட்டேன். என் அம்மாவின் இறப்பிற்கு பிறகு எனக்கு எல்லாமுமாக இருந்தவர் என் தந்தை தான். அந்த ஸ்தானத்தில் இருந்து இன்று வரை அனைத்தையும் சரியாக செய்து கொண்டிருக்கிறார்.

என் அப்பா, அம்மாவிற்கு திருமணம் ஆகி 4- அல்லது 5 வருடங்கள் குழந்தைகள் இல்லாமல் தவமிருந்து என்னை என் தாய் பெற்றெடுத்தார் என்பதை என் தந்தை எனக்கு கூறியுள்ளார். நான் சிறு வயதில் இருக்கும் போது என் தாயை அனைவரும் மரியாதையாக கையெடுத்து கும்மிட்டு, வாழ்த்திவிட்டு போவார்கள். காரணம் உணவோ அல்லது பொருளோ இல்லை என்று யாராவது கேட்டால் அவர் மனம் பொறுக்காமல் உடனே எடுத்து கொடுத்து விடுவார்களாம் என் தாய். இவ்வளவு நல்ல குணம் கொண்டவருக்கு (சரஸ்வதி) பிறந்த மகன் என்பதில் எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.  என்னால் முடிந்த அளவு அவர்களின் குணத்தை என் வாழ்விலும் கடைபிடிப்பேன்.

அவர் கையால் நான் கடைசியாக உண்ட உணவு எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. என் தாய் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு எனக்கு பூரி செய்து கொடுத்தார். அதை சாப்பிட்டு விட்டு உறங்க சென்றேன். அன்று தான் நான் அவர்களை இறுதியாக பார்த்தேன். என் அம்மா செய்த உணவிலே எனக்கு மிகவும் பிடித்தமானது அவரின் கையில் நான் உண்ட கடைசி உணவுதான்.

இன்று சமைப்பதற்கு இருக்கும் வசதியை போன்று எல்லாம் அன்றைய காலங்களில் இல்லை. வெறும் விறகு அடுப்புதான்.  அப்பா தங்கி இருந்த இடத்தில் இருந்தவர்களுக்கு தற்காலிகமாக இரண்டு நாள் மட்டும் உணவு செய்து கொடுக்க என்  அப்பா கேட்டதற்கு இணங்க என் அம்மா செய்து கொடுத்தது தான் இன்று இந்த ஹரிபவனமாக வளர்ந்துள்ளது.

ஹரிபவனத்தின் வளர்ச்சியை இப்பொழுது என் அம்மா கண்டு இருந்தால் அவர் எந்த அளவு மகிழ்ச்சி கொள்வார் என எனக்கு தெரியவில்லை. அவர் முதன்முதலில் பற்ற வைத்த விறகு அடுப்பு தான் இந்த ஹரிபவனம்.   உணவை அளந்து போடக்கூடாது என்று என் தாய் கூறுவார். அவர் சொல்லின் படி ஹரிபவனத்தில் அன்னத்தை நாங்கள் அளந்து பரிமாறியதில்லை. இதனை ஒரு தார்மீக மந்திரமாக கொண்டு செயல்படுகிறோம்.

இந்த அன்னையர் தினத்தில் அன்னை இருப்பவர்களும் சரி, இல்லாதவர்களும் சரி அன்னையை நேசித்து, அவரை அரவணைத்து மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

 

அம்மாவின் மதிப்பை அளவிட முடியாது !

டாக்டர் ஏ.ஜெயசுதா, முதல்வர், பிஎஸ்ஜி செவிலியர் கல்லூரி.

என் அம்மா மூக்கம்மாள் ஆரம்ப பள்ளி தலைமையாசிரியராக இருந்தார். என் அம்மா எனக்கு ஆண்டவன் கொடுத்த பரிசு, மற்றவர்கள் அவர்களது அம்மாவை பற்றி கூறுவார்கள், இருப்பினும் என் தாய் எனக்கு கிடைத்த அதிசயம். நான் தைரியமுடனும், தன்னமிக்கையுடனும் இருப்பதற்கு காரணம் என் அம்மா தான்.

அம்மாவை பற்றி நான் நினைக்கும் போது நிறைய நிகழ்வுகள் அவரை பற்றி தோன்றும். நாங்கள் ஆரம்ப காலகட்டத்தில் கிராமத்தில் தான் இருந்தோம். அங்கு யார் வீட்டில் என்ன விசேஷ நிகழ்வுகள் நடத்தாலும் என் அம்மா அவர்களை தேடி சென்று, அவர்களது தேவையை கேட்டு அதனை செய்து தருவார். அதுமட்டுமல்ல யாருக்கு என்ன தேவை என்றாலும் உடனே உதவி செய்வார். அவரின் அந்த மனம் எனக்கு ரொம்ப பிடித்தது.

அம்மா தலைமையாசிரியர் என்பதால் அவர் எனக்கு வாழ்க்கை குறித்து கற்று கொடுத்த பாடம் மற்ற பாடங்களை விட வேறு விதமானது. இதுமட்டுமல்லாமல் எனக்கு எந்த விதமான பிரச்சனைகள் இருந்தாலும் அம்மா என் முன்னாடி நிற்பார். எனக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் உடனே உதவ தயாராக இருப்பார்.

நான் கல்லூரியின் முதல்வராக இருந்தாலும் என் அம்மா கற்று கொடுத்த பாடம் தான் என் மாணவர்களை வழிநடத்த உதவுகிறது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இரண்டாம் பெற்றோர்கள் என்பதை தான் நானும் கடைபிடிக்கிறேன், மற்ற ஆசிரியர்களுக்கும் அதை தான் உணர்த்துகிறேன்.  குழந்தைகளை எப்படி பார்த்து கொள்வோமோ அதேபோல் எங்கள் மாணவர்களையும் பார்த்து கொள்வோம். தவறு செய்தால் மாணவர்களை கண்டிப்பது எங்கள் கடமை, அதே சமயம் அவர்களை அரவணைப்பதும் எங்கள் உரிமை. இவற்றையும் என் அம்மாவிடம் இருந்துதான் நான் கற்றுக் கொண்டேன் .

பொதுவாகவே அம்மாவின் மதிப்பை அளவிட முடியாது. அவர்களிடம் நமது எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியும், ஆனால், மற்றவர்களிடம் சுலபமாக நம் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது. அதனை நான் என் தாயை இழந்தபொழுது உணர்ந்தேன். அது என்னை எப்பொழுது கண் கலங்க வைக்கும்.

அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பெரும் பாடம் எந்த சூழ்நிலை வந்தாலும், எப்பொழுதும் கடமையை தவறக்கூடாது என்பது தான். இதுவரை நான் அதை மறந்ததும் இல்லை, பின்பற்ற தவறியதுமில்லை.

 

பிரதிபலனை எதிர்பாராதவர்

டி.சீனிவாசன், நிர்வாக இயக்குநர், ஸ்ரீ அன்னபூர்ணா

என் தாயார் லட்சுமிக்கு என்னையும், என் சகோதரரையும் சேர்த்து இரண்டு ஆண் குழந்தைகள். என் அம்மா பள்ளிக்கு சென்று படித்தது கிடையாது. அவருடைய வாழ்க்கை ஒரு கிராமிய முறை வாழ்வாகத்தான் இருந்தது.

பள்ளி பயிலும் காலங்களில் நான் நன்றாக படிக்க மாட்டேன். நிறைய குறும்பு செய்வேன். விளையாட்டின் மீதே என் கவனம் இருக்கும்.

நான் நன்றாக படித்து மிகப்பெரிய ஆளாக வேண்டும் என என் தந்தை  ஆசைப்பட்டார். அதனால் அவர் என்னை கண்டிப்போடு படிக்க வேண்டும் என சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் ஒரு நாள் கூட என் தாயார்  நான் ஏன் படிக்கவில்லை, ஏன் குறைந்த மதிப்பெண் பெற்றேன் என கேட்டதில்லை. நான்  நன்றாக படிக்க வேண்டும் எனக் கூறியதும்  இல்லை.  படிப்பு வரவில்லை என்றாலும் கூட இந்த சமுதாயத்தில்  நான் ஒரு நல்ல மனிதனாக வரவேண்டும், நல்ல பழக்க வழக்கங்களை கொண்டிருக்க  வேண்டும் என என் தாய் கூறுவார்.

படிப்பை விட நான் ஒரு முழுமையான  மனிதனாக  வரவேண்டும் என்று தான் அவர்  விரும்பினார்.   இந்த சமுதாயத்தில் உன்னை சுற்றியிருக்கக்  கூடியவர்களுக்கு  உதவிகள் செய்யக்கூடிய மனப்போக்கு வரவேண்டும் என கூறுவார்.  அவரின் சொல்லை நான் இன்றளவும் நினைத்து பார்க்கிறேன். ஒரு சில காரியங்களை செய்யும் பொது என் தாயாரின் அந்த சொல் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆனால் இன்றைய  காலகட்டத்தில் படிப்பு மிக அவசியம். படிப்பு இல்லை என்றால் நிறைய விசயங்களை சாதிக்க முடியாது.

அன்னபூர்ணாவின் வளர்ச்சியிலே மிகப்பெரிய பங்களித்தவர் என் தாயார். ஏனென்றால் நாங்கள் ஒவ்வொரு கடை ஆரம்பிக்கும் போது  10-20  நாள்கள்  அங்கு இருக்கக்கூடிய சமையல் கலைஞர்களிடம் சக தொழிலாளியாக  இருந்து  சுவை நன்றாக வரவேண்டும் என்று கற்றுக் கொடுப்பார். நல்ல முறையில் செய்து வாடிக்கையாளர்களுக்கு  போய் சேர வேண்டும் என்பது அவருடைய மிகப்பெரிய ஆசையாக இருந்தது .

நாங்கள் கூட்டு குடும்பமாக  இருந்த போது  அனைவருக்குமே அவர் தான் சமைப்பார்.  ஒவ்வொருவரின் சுவையையும் கேட்டு சமைப்பார். முகம் சுளிக்காமல் குடும்பத்தினரை  திருப்திப்படுத்தும் வகையில் உணவளிப்பார். விருந்தாளிகள் வரும்போதும் சிறிதும் சலனமில்லாமல் சந்தோசத்துடன் உணவளிப்பார். இவ்வாறு விருந்தாளிகள் வருவது உங்களுக்கு சலிப்பாக இல்லையா என நான் என் அம்மாவிடம் கேட்டதுண்டு,  அதற்கு அவர் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் கடவுளுக்கு சமம் ஆனவர்கள். விருந்தாளிகள் ரூபத்தில் தான் கடவுள் வீட்டிற்கு வருவார். அவர்களை நன்றாக பார்த்து கவனித்து கொள்ள வேண்டும். என கூறினார்.

இந்த பழக்க வழக்கம் எங்கள் தலைமுறைக்கும் வந்துள்ளது. எங்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு உணவளிக்காமல் நாங்கள் அனுப்பியதில்லை. அவர்களுக்கு விருந்தளிப்பதற்கான ஒரு வாய்ப்பை கடவுள் தருகிறார். இதை மனம் மகிழ்ந்து செய்ய வேண்டும்.

கிராமிய முறைப்படி சமைக்கும் என் அம்மாவின் கைப்பக்குவம் மிக அருமையாக இருக்கும். அவர் வைக்கும் கத்திரிக்காய் குழம்பு, களி, கீரை வகைகள், சுண்டைக்காய் குழம்பு, ரசம், மழைக்காலங்களில் செய்யும் பொறி, முறுக்கு போன்றவை எனக்கு மிகவும் பிடித்தமானவை. அவரின் அன்பும் அதில் இருப்பதால் அதன் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.

வாரத்தில் மூன்று நாள் அன்னபூர்ணாவில் இருந்துதான்  என் தாயார்   உணவு சாப்பிடுவார்கள். அதில் உள்ள குறைகளை தெரிந்து கொள்வதற்கு வேண்டி, சுவைத்து பார்ப்பார். ஆனால் எங்கள் உணவை பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைக்கும் அவரிடம் இருந்து பாராட்டை  பெறுவது மிகக் கடினம். உணவின் சுவையை எவ்வாறு மேம்படுத்துவது பற்றிய ஆலோசனைகளை வழங்கி கொண்டே இருப்பார்.

ஒரு சமயம் நாளிதழில் வந்த ஒரு கீரை பற்றிய செய்தி அவரை மிகவும் வருத்தத்திற்கு ஆளாக்கியது. அதில் கீரைகள் விளையும் இடத்தில்  கழிவு நீர் கலந்து அக்கீரைகள்  விற்பனைக்கு வருவதாக செய்தி வெளியாகியிருந்தது.  அன்றிலிருந்து அன்னபூர்ணாவிற்கு தேவையான கீரைகளை அவரே தோட்டத்தில் விளைவித்தார். இயற்கை முறையில், சுத்தமான தண்ணீர் விட்டு, ஒரு குழந்தையை பராமரிப்பது போல அந்த கீரைகளை அவர் வளர்த்தார். இன்றும் நாங்கள்  சுத்தமான முறையில்  கீரைகளை  உற்பத்தி செய்கிறோம். இவ்வாறு சுத்தமான  கீரைகளை கொடுப்பது எங்களுக்கு மன நிறைவாக உள்ளது.   இதை ஆரம்பித்தது என் தாய் தான்.

உடம்பையும், உயிரையும் கொடுத்து நம்மை உருவாக்கியவர் தான் அம்மா. உலகத்தில் பல மொழிகளில் பல வார்த்தைகளில் தாயை அழைக்கின்றனர். ஆனால் ”அம்மா” என்று அழைக்கும் போது அதில் உள்ள ஜீவன் வேறு எம்மொழியிலும் இல்லை. நம்மை படைத்த கடவுளால் நம் அனைவரையும்  பார்த்துக் கொள்ள முடியாது. அதனால் தான் ஒவ்வொரு வீட்டிலேயும் அம்மா என்ற கடவுள் இருக்கிறார்.

அம்மாவிற்கு குழந்தையை தவிர வேறு சிந்தனையே இருக்காது. தன் உடல்நலனில் பெரிதாக அக்கறை கொள்ளாமல், தன் பிள்ளைக்கு ஒரு சிறிய தலைவலி என்றாலும் துடித்து போய்விடுவார்கள். மாறாக குழந்தைகளிடம் இருந்து எந்தவொரு பிரதிபலனையும் அவர் எதிர்பார்ப்பதில்லை. நம்மை படைத்து நம்முடன் வாழும் தெய்வம் தான் அம்மா. அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாலே போதும் எக்கோவிலுக்கும் செல்ல வேண்டாம்.

 

மருத்துவர் கனவை எனக்குள் விதைத்தவர்

டாக்டர் எஸ். ராஜசேகரன், தலைவர், எலும்பியல் மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை, கங்கா மருத்துவமனை.

பொதுவாகவே அனைவரது வாழ்விலும்  அம்மா என்பவர் முக்கிய பங்கினை வகித்தும், ஒரு பெரிய தாக்கத்தை நமக்குள் ஏற்படுத்தியும் இருப்பார்கள். என் வாழ்விலும் என் அம்மா கனகவள்ளி சண்முகநாதன் அவர்களின் பங்கு மிக முக்கியமானது.

பள்ளியில் பொது அறிவு, அறிவியல் சார்ந்த அறிவு போன்றவற்றை நாம் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஒருவரின் வாழ்வில் வெற்றிக்கு எது முக்கியம், அதை நோக்கி பயணிக்கும் பாதை, நற்பண்புகள் போன்றவற்றை புத்தகத்தில் இருந்து படிக்க முடியாது. பெற்றோர் மூலமாகவே இதை நாம் அறியமுடிகிறது.

ஒரு மருத்துவராக இருப்பதற்கு வெறும் மருத்துவம் சார்ந்த அறிவு மட்டும் போதாது. அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, நோயாளிகளிடம் அன்பாக நடந்து கொள்ளுதல், ஒவ்வொரு நோயாளியையும் நம் குடும்பத்தார் போல மதிக்கும் விதம் ஆகிய பண்பினை பாட புத்தகத்தில் இருந்து கற்று கொள்ள முடியாது.இது மாதிரியான செயல்களையும், குணங்களையும் நம் பெற்றோர்களிடம் இருந்து தான் கற்று கொள்ள முடியும்.

மருத்துவராக நான் வர வேண்டும் என்ற கனவை எனக்குள் விதைத்தவர் அம்மா தான். என்னிடம் எப்போதும், மருத்துவரானால் மட்டும் போதாது, இருப்பதிலேயே சிறந்த மருத்துவர் ஆக வேண்டும் என  ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார்.

நோயாளிகளுக்கு மிகச் சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் இதை விட சிறந்த சிகிச்சையை யாராலும் கொடுக்க முடியாது என்பதை போல உன் மருத்துவம் இருக்க வேண்டும் என சொல்லுவார். புதியதாக ஒரு செயலை செய்வதற்கு ஊக்கப்படுத்தி நல்ல முறையில் செய்ய வேண்டும் என அறியுறுத்தி அறிவுரை வழங்குவார்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் நல்ல குணங்களை எடுத்து சொல்லி எங்களை நெறிப்படுத்துவார். அவருடன் நான் இருக்கக்கூடிய ஒவ்வொரு நிமிடமும் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். அவரிடம் இருந்து ஏதோ ஒன்றை கற்று கொண்டே தான் இருக்கிறேன். கடவுள் எங்களுக்கு கொடுத்த வரம் அவர்.

வயதான காலங்களில் அவர்களின் தனிமையை போக்கி, நேரத்தை செலவிட்டு, அவர்களுடன் உறு துணையாக  நிற்பது நம் கடமை.