கொரோனாவால் ஆதரவின்றி நிற்கும் ஏழை குழந்தைகள்

இந்தியாவில் கொரோனா எனும் பெருந்தொற்றால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர். ஒரு சில வடமாநிலங்களில் இறந்தவர்களை எரிப்பதற்கூட இடமில்லாமல் பொது இடங்களில் எரியூட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த கொரோனாவால் பலர் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலையே கொடூரமானது என்றால் அதையும் தாண்டி வட மாநிலங்களில் பல குழந்தைகள் தங்களது தாய் மற்றும் தந்தையை கொரோனாவால் இறந்து யாரும் ஆதரவு அளிக்காத நிலையில் தெருக்களில் இருக்கிறார்கள் என்பது எத்தகைய கொடூரமானது. இன்னும் சிலர், பெற்றோரில் யாரேனும் ஒருவரை இழந்து, பொருளாதார ரீதியாகவோ, மனநலன் சார்ந்தோ பாதிக்கப்படுகின்றனர் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சமீபத்தில் கொல்கத்தாவில், பிறந்து சில தினங்களேயான ஒரு குழந்தை, கொரோனா இரண்டாவது அலையில் தனது பெற்றோரையும், தந்தை வழி பாட்டி – தாத்தாவையும் இழந்திருக்கிறது. தொடர்ந்து அக்குழந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இக்குழந்தையை, உறவினர்கள் யாரும் வளர்க்க முன்வரவில்லை.

அதனால் குழந்தை ஆதரவற்ற நிலையில் தவித்தது. இறுதியாக, குழந்தையை, வேறு நகரத்தில் வசித்து வந்த அதன் தாய்வழி பாட்டி – தாத்தா எடுத்து வளர்க்க சம்மதித்து வாங்கிக் கொண்டனர். அவர்களும் காவல் துறையினரின் தொடர் அறிவுறுத்தலின்பேரில் தான் பெற்றுக்கொண்டனர் என்பது மிகவும் வருத்தமளிக்கும் செய்தியாக உள்ளது. இக்குழந்தை போல கொரோனாவால் கைவிடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது.

இதே போல் கர்நாடகா, டெல்லி போன்ற பெருநகரங்களில்கூட பெற்றோரை இழந்த குழந்தைகள், ஆதரவின்றி வீதியில் நின்ற செய்திகள் வெளிவந்துள்ளன. ஆதரவற்று நின்ற அக்குழந்தைகளை காவல்துறையினர் மீட்டெடுத்ததாக, அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகின.

இப்படி மீட்டெடுக்கப்படும் குழந்தைகளை, காவல்துறையினர் முதற்கட்டமாக அவர்களின் உறவினர்களிடம் விட்டு வளர்க்கச்சொல்லி அறிவுறுத்துவதாக சொல்லப்படுகிறது. உறவினர்கள் தயக்கம் காட்டும்பட்சத்தில், மாநில அரசுகள் அக்குழந்தைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்ட முன்வருகிறது.

இப்படி ஆதரவற்று விடப்படும் குழந்தைகள் பற்றி டெல்லியை சேர்ந்த தன்னார்வு அமைப்பை சேர்ந்த ஒருவர் அங்கிருக்கும் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “நிறைய குழந்தைகளுக்கு, பெற்றோர் இருவருமே கொரோனாவால் உயிரிழந்து விடுகின்றனர். வருங்காலத்தில் குழந்தைகள் தத்தெடுத்தலை ஊக்குவிக்கும் விதத்தில் அரசு தீவிரமாக செயல்பட்டால், இக்குழந்தைகளின் வாழ்வில் நல்வழி பிறக்கும்” எனக் கூறியுள்ளார்.

குழந்தைகள் தத்தெடுக்கப்படுவது என வரும்போது, நடைமுறையில் அதிலும் பல சிக்கல் இருப்பதாக சொல்லப்படுகிறது. நிறைய பேர் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுவருகிறது. ஆகவே தத்தெடுத்தல் விஷயத்தில் மட்டும், அனைத்தும் சட்டப்படி நடக்க வேண்டும் என்பதை காவல்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எந்தப் பகுதியை சேர்ந்த குழந்தை என்றாலும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என டெல்லி கமிஷன் கூறியுள்ளது.

இத்தகைய சூழலில் ஆதரவின்றி விடப்படும் குழந்தைகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தை சேர்த்த நடுத்தர வயதிலுள்ள குழந்தைகளுக்கு கூடுதல் சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்பட்டுகிறது. ஏனெனில், இவர்களை தத்தெடுக்கும் உறவினர்கள், முடிந்தவரை விரைந்து இவர்களுக்கு திருமணம் செய்துவைத்து, இவர்களை தங்களிடமிருந்து தள்ளிவைக்க எண்ணுவதாகவும், இதனால் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஒரு சிலர் இக்குழந்தைகளை வேலைக்கு அனுப்பி, தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள அந்த உறவினர்கள் நினைக்கின்றனர். இது, குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே, அக்குழந்தைகளுக்கான சேவைகளை மாநில அரசுகள் கவனிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கொரோனா உயிரை குடிப்பதோடு விட்டுவிடாமல் பலரது வாழ்க்கையையும் கேள்வி குறியாக்கி அவர்களை இந்த சமூகத்தின் மத்தியில் தனித்து விட்டுவிட்டு செல்கிறது. கொரோனா ஆபத்தானது, அதிலும் அது ஏற்படுத்தும் இதை போன்ற சமூக தாக்குதல் மிகவும் ஆபத்தானது. கொரோனாவிடம் நாம் சிக்காவிட்டாலும், அதனால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் அடுத்த தலைமுறையை நிச்சயம் கேள்விக்குறியாக்கும் என்ற அச்சம் தற்பொழுது எழுந்துள்ளது.