முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு!

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நாடு முழுதும் தினமும் 4 லட்சத்திற்கு அதிகமானவர்கள் தினம்தோறும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் சதவிகிதமும் அதிகரித்து வருகிறது.

டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இரவு ஊரடங்கு, குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் நடக்கவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு 4 மாதங்கள் வரை ஒத்திவைக்கப்படுவதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் பணியாற்ற அதிக மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் தேவைப்படுவதைக் கருத்தில்கொண்டு இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளையில் பயிற்சி மருத்துவ பணியாளர்களாக பணிபுரிவோர் உரிய அதிகாரிகளுடைய மேற்பார்வையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படலாம் என்று இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 100 நாட்கள் கொரொனா தொற்று சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு வரும் காலங்களில் அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.