சில மாதங்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடாகும் – ஆதர் பூனவல்லா

இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அடுத்த சில மாதங்களுக்கும் தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாகி ஆதர் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

ஜனவரி 16 ம் தேதியில் இருந்து இந்தியாவில் இரு தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டு வருகிறது. சீரம் நிறுவனத்தின் கோவிஷில்ட்  மற்றும் பாரத் பயோ டெக்கின் கோவாக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன. கொரோனா இரண்டாம் அலையின் பிடியில் இந்தியா சிக்கியுள்ள இந்த நேரத்தில், கடந்த சில வாரங்களாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது.  45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற நிலையில் தடுப்பு மருந்து இல்லாமல் மக்கள் திரும்பி செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. தற்போது ஸ்புட்னிக் வி ரஷ்யாவில் இருந்து இறக்குமதி ஆகி பயன்பாட்டிற்கு வர உள்ளது.

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாகி ஆதர் பூனவல்லா கூறுகையில்:

6-7 கோடி டோஸ் தடுப்பு மருந்து மட்டுமே மாதம் ஒன்றுக்கு தற்போது தயாரித்து வருவதால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், ஜூலை மாதத்தில் இருந்து இந்த தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கை 10 கோடியாக உயர்த்தப்படுவதாகவும்  அதுவரை ஒரு சில மாதங்கள் இம்மாதிரியான தடுப்பூசி பற்றாக்குறை தொடரும்  என தெரிவித்தார்.

மேலும் அவர், ஜனவரியிலேயே கொரோனாவின் பாதிப்பு குறைந்த நிலையில் தற்போது இந்த இரண்டாம் அலையின் தாக்கத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை எனக் குறிப்பிட்டார்.