உலக சிரிப்பு தினம்

“இன்பத்தில் சிரிப்பவன் அதிஷ்டசாலி, துன்பத்தில் சிரிப்பவன் ஞானி, கற்பனையில் சிரிப்பவன் கவிஞன், தெரிந்து சிரிப்பவன் நடிகன், தெரியாமல் சிரிப்பவன் ஏமாளி, நிலை உணர்ந்து சிரிப்பவன் நிதானமானவன், நிலை உணராது சிரிப்பவன் நிதானமற்றவன், உக்காந்து சிரிப்பவன் சோம்பேறி, ஓயாமல் சிரிப்பவன் பயத்திய காரன், உழைப்பில் சிரிப்பவன் உயர்ந்த மனிதன்” இது நகைச்சுவை நடிகர் குமாரி ஒரு பேட்டியில் கூறியது. இவைகள் நம்மை ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கும் வரிகள்.

ஒருவனை அழ வைப்பது சுலபம், சிரிக்க வைப்பது கடினம். சிரித்தால் துன்பம் தூரப்போகும், கவலை கலைந்து போகும், வறுமை மறந்து போகும், பசி பறந்து போகும், நோய் விலகி போகும். சிரித்த முகமே மகிழ்ச்சியை பெருக்கும். குழந்தையின் சிரிப்பு கொஞ்சும் அழகு, மகனின் சிரிப்பு தாயிற்கு அழகு, ஓயாத சிரிப்பு நண்பனின் ஆளுமை.

குடிசையில் வாழும் ஏழை கூட சிரித்தால் போதும் தன் வறுமையை மறப்பார்கள். நோயுற்று கிடைக்கும் நோயாளிகூட சிரித்தால் தன் நோய் மறப்பான். சிரிப்பு மனிதன் பெற்ற வரம். வற்றாத ஊற்றாய் அதிகம் சிரித்து விட்டேன் இதற்குமேல் என்னிடம் சிரிக்க சிரிப்பு இல்லை என்று யாரும் கூற முடியாது.

மற்றவரை துன்பப்படுத்தி சிரிப்பது மிருகதனம், மற்றவரை சிந்தனையுடன் சிரிக்க வைப்பது மனித தனம். சிரிப்போம் சிரிக்க வைப்போம். ஒருவனை அழவைத்தால் என்றாவது எதிரியாவான், சிரிக்க வை வாழ்நாள் நண்பன் ஆவான்.

இந்த உலக சிரிப்பு தினம் மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இத்தினம் முதல் முதலாக 1988 ஜனவரி 10 இல் உலக சிரிப்பு நாள் (World Laughter Day) கொண்டாடப்பட்டது. இதை இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கதரியா ஆரம்பித்து வைத்தார். இவர் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு சர்வதேச நாடுகள் முழுக்க இயங்கி வரும் ‘லாப்டர் யோகா இயக்கத்தைத் (Laughter Yoga Moveement) தொடங்கியவர்.