ஒரே சிகரெட் : 18 பேருக்கு கொரோனா

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் வசிக்கும் மார்க்கெட்டிங் மானேஜர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது. இது உறுதி செய்யப்பட்டதால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து அவரது நிறுவனத்தில் பணிபுரியும் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்கு யார் காரணம் என்று ஊழியர்களிடம் விசாரித்தனர்.

இதில், அவர்கள்சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மானேஜர் மூலம் தான் தங்களுக்கு கொரோனா தொற்று வந்தது என்று எல்லோரும் கூறினார்கள்.

அந்த மார்க்கெட்டிங் மானேஜரை நிர்வாகத்தினர் தொடர்பு கொண்டு பேசினார்கள். அவருக்கு எப்படி கொரோனா வந்தது என்பதை யோசித்து பார்க்கச் சொன்னார்கள். அப்போது தான் அவருக்கு அந்த உண்மை தெரியவந்தது.

சில தினங்களுக்கு முன்பு அருகில் உள்ள டீகடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது அவருக்கு எதிரே வந்த ஒருவர் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார். அடிக்கடி லேசாக இருமிக் கொண்டிருந்த அவரிடம் இருந்து சிகரெட்டை வாங்கி தனது சிகரெட்டை பற்ற வைத்தார். எனவே, சிகரெட் புகைக்க கொடுத்தவரிடமிருந்து மார்க்கெட்டிங் மானேஜருக்கு கொரோனா தொற்றி இருக்கலாம் என்று தெரியவந்தது.

தெரிந்தவர் என்பதால் ஒருவரிடம் இருந்து சிகரெட் வாங்கி பற்ற வைத்தது தன்னையும் சேர்த்து 18 பேருக்கு கொரோனா பரவ காரணமாகி விட்டது. இந்த உண்மையை அறிந்த மார்க்கெட்டிங் மானேஜர் மிகவும் வருந்தினார்.

தனது தேவையற்ற நடவடிக்கையால் கொரோனா பாதிப்புக்கு உள்ளான அனைவரிடமும் அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மானேஜர் மன்னிப்பு கேட்டார். ஒருவரிடம் சிகரெட் வாங்கி பற்ற வைத்ததால் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது. ஒவ்வொருவரும் எவ்வளவு கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எச்சரிக்கையாகவும் இந்த சம்பவம் அமைந்துள்ளது.