தள்ளாத வயதிலும் மாறாத அன்பு….

கோவையில் நடக்க முடியாமல் இருக்கும்  தனது மனைவியை சுமந்து சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு மருத்துவமனைக்கு வந்த  கணவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவையில் முதியவர்கள் பலரும் கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.  துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ காலனியில் வசிக்கும்  ஜெகநாதன் (76) என்ற முதியவரும்  இவரது மனைவி விஜயலட்சுமி (69) தடுப்பூசி செலுத்த கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

காரில் இருந்து இறங்கியதும், தனது மனைவியை தூக்கிச் சுமந்தபடி மையத்திற்குள் நுழைந்த முதியவர், இருவருக்கும் தடுப்பூசி செலுத்திய பின், மீண்டும் தூக்கிச் சென்று காரில் அமரவைத்து ஏறிச்சென்றார்.

தள்ளாத வயதிலும் மாறாத அன்புடன் நடந்து கொண்ட முதியவரின் புகைப்படம் தற்போது வைரலாகி வரும் சூழலில், மாற்றுதிறனாளிகளுக்கான வீல் சேர் கூட இல்லாமல் தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.