கட்சி முகவர்கள் 116 பேருக்கு கொரோனா  தொற்று

கோவை:வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் கட்சி முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 116 பேருக்கு தொற்று பாதிப்பும், பத்திரிகையாளர்களில்   4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இங்குள்ள 10 தொகுதிகளுக்கும் சேர்த்து 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு நடத்தப்பட்டது.

தேர்தல் முடிந்த அன்றைய தினமே வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவை ஜி.சி.டி வளாகத்தில் காப்பு அறையில் பத்திரப்படுத்தப்பட்டன.

10 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணும் மையமாகவும் இந்த கல்லூரி உள்ளது. எனவே பல்வேறு கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் இரவு பகலாக ஜி.சி.டி வளாகத்திலேயே வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணித்து வந்தனர்.

இந்த சூழலில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனைத்து கட்சி முகவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்பேரில், கடந்த 2 நாட்களாக அனைத்து கட்சி முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  மொத்தம் 3 ஆயிரத்து 208 பேருக்கு பரிசோதனை செய்ததில், 116 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.