முன்கள பணியாளர்களுக்கு முதல் வணக்கம்

தொழிலாளர்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்படாத காலகட்டத்தில் அவர்களுக்கான உரிமைகளை ஆளும் வர்க்கத்தினரிடம் இருந்து போராடி குறிப்பிட்ட சட்ட விதிமுறைகளை அமல் படுத்தி தங்களது வாழ்வியலை மீட்டு எடுத்தற்காக கொண்டாடப்படும் இந்த மே தினம் தற்பொழுது அனைத்து தரப்பு உழைப்பாளர்களையும் கெளரவப்படுத்தும் நாளாக மாறியுள்ளது.

இந்த தினத்தின் ஒரு வரி பின்னணி, முந்தைய காலகட்டத்தில் பணியாளர்களின் பணி நேரம் என்பது 18 மணி நேரம் வரை இருந்ததாலும், இயந்திரமயமாதலால் பணியாளர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டதாலும், இயந்திரங்களால் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலும் அவர்களுக்கு எந்த பயனும் பெறாததால் தங்களது உரிமைகளுக்காக பல நாடுகளில் பல கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்திவந்தனர். அதன் வெற்றி தான் தற்பொழுது நாம் பெற்றிருக்கும் இந்த 8 மணி நேர பணி மற்றும் சில சலுகைகள்.

ஒரு முதலாளி அவனது தொழிலில் வெற்றி கண்டான் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவனிடம் பணியாற்றும்  தொழிலாளர்கள் தான். ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பாள் அதே போல், ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு பின்னால் நிச்சயம் தொழிலார்கள் இருப்பார்கள். பொங்கலுக்கு சூரியனை வணங்குகிறோம், ஆயுத புஜைக்கு பணியாளர்கள் பயன்படும் கருவிகளை வாங்குகிறோம், அதேபோல் மே தினத்தன்று முதலாளிகள் தொழிலாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

தற்பொழுதைய சூழ்நிலையில் கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக முன்கள பணியாளர்கள் தான் பல கோடி மக்களுக்கு அரணாக இருக்கிறார்கள். இன்று மற்றும் அல்ல நம் உயிரை காப்பாற்றும் இவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். மே தினத்தில் முன்கள பணியாளர்களுக்கு எங்களது முதல் வணக்கம்.