அரசு கலைக் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி மையம்

கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையம், கூட்டத்தை தவிர்க்கும் வகையில் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு இன்று (30.4.2021) மாற்றப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள  நிலையில் கொரொனா தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது.  கோவை அரசு மருத்துவமனையிலும் தடுப்பூசி மையம் செயல்பட்டு வந்த நிலையில் கூட்டத்தை தவிர்க்கும் வண்ணம் தடுப்பூசி மையம் கோவை அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வரும் நிலையில் இதர நோயாளிகளும் இங்கு அதிகளவு வருவதால்  மருத்துவமனையில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையம் இன்றிலிருந்து கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் செயல்படும் என்றும் இனிவரும் நாட்களில் கல்லூரியிலேயே இந்த தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கோவை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்படாது என்றும் மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளான இன்று இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் மட்டும் போடப்பட்டன.   முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தியவர்கள் ஓய்வு எடுப்பதற்கு படுக்கை, தேவைபடுவோருக்கு ஆக்சிஜன் வசதி,  வெளியில் அமர்ந்து கொள்ள மேசைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.