அமெரிக்கா பல்கலைக் கழகம் நடத்திய போட்டியில் கே.பி.ஆர் .கல்லூரி  மாணவர்கள் தேர்வு!

கோவையில் இயங்கும் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டடப் பொறியியல் துறையைச் சேர்ந்த மாணவர் குழு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த  பல்கலைக் கழகம் நடத்திய உலகளாவிய புதிய தொழில் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் தகுதி பெற்றுள்ளனர்.

சர்வதேச அளவில் தொழில் முனைவோரைக் கண்டறியும் நோக்கத்தில் ஆசியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கிடையே நடத்தப்படும் இந்தப் போட்டியில் நாடு தழுவிய அளவில் தகுதி பெற்றுள்ள கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் குழு உலகளாவிய போட்டியில் பங்குபெற உள்ளது.

டை பல்கலைக் கழகத்தின் பிராந்திய அமைப்பின் சார்பில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் 17 கல்லூரிகளின் 50 குழுக்களைச் சேர்ந்த 150 இளம் தொழில் முனைவோர் பங்குபெற்றனர்.  இதில் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட11 குழுக்களில் ஒன்றான கே.பி.ஆர் கல்லூரியின் ‘பயோனியர்’ அணி வெற்றி பெற்றுள்ளது.

தொலைதூர அரசுப் பேருந்து மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளில் அமைக்கும் வகையில் நுண்ணுயிர் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பயோ டைஜஸ்டர்  அமைப்பை  உருவாக்கியுள்ள  கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியர் மீனாட்சி தலைமையிலான ஹரிஹரன், பாஹீம் அகமது, ஹரிஷ் நடராஜன் மற்றும் திவ்யபாரதி ஆகியோர் அடங்கிய குழுவினரின் முயற்சியை கல்லூரி முதல்வர் அகிலா பாராட்டினார்.

வெற்றிபெற்ற ‘பயோனியர்’ குழுவினரை,  கே.பி.ஆர்  குழுமங்களின் தலைவர்  டாக்டர். கே.பி.ராமசாமி மற்றும் கல்லூரியின் முதன்மைச் செயலர்  ஏ.எம்.நடராஜன் ஆகியோர் பாராட்டினர் .