சாலை கூறும் சரித்திரம் – டிஸ்பென்சரி தெரு

மருத்துவத் துறையைப் பொறுத்தவரை அதற்கென்றே உரித்தான பல்வேறு சொற்பிரயோகங்கள் உண்டு. தமிழில் சித்த மருத்துவத்தில் சூரணம், குடிநீர் போன்ற வார்த்தைகளும், ஆயுர்வேதத்தில் பிழிச்சல் உள¤ச¢சல¢ போன்ற வார்த்தைகளும் அதற்கென்றே பயன்படுபவை. அதைப்போல உள்ளூரில் மருத்துவமனையை டிஸ் பென்சரி, கிளினிக், நர்சிங் ஹோம், ஹாஸ்பிடல் என்று பல ஆங்கில வார்த்தைகளில் அழைக்கிறார்கள். சாதாரண மனிதருக்கு இவை கிட்டத்தட்ட ஒரே பொருள் தந்தாலும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு தனிப¢ பொருளும், வரலாறும் உண்டு.

இவ்வளவு மருந்து கம்பெனிகள் உருவாகாத அந்தக் காலத்தில் மருத்துவர்களின் அறிவுரைப்படி இரண்டு அல்லது மூன்று அடிப்படை மருந்துகளைக¢ கலந்து நோயாளிக்கு தேவையான அளவில் மருந்தைக் கொடுப்பது வழக்கம். அப்படி கலந்து கொடுக்கப்படும் அந்த இடம்தான் டிஸ்பென்சரி எனப்பட்டது. பொதுவாக இந்தப் பணி மற்றும் மருந்துகள் பற்றி தெரிந்திருக்கும் ஒரு கம்பவுண்டர் போன்ற மருத்துவப் பணியாளர் இந்த பணியைச் செய்வார்.

காலப்போக்கில் மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் மருத்துவ ஆலோசனை வழங்கும் இடங்களும் டிஸ்பென்சரி என்று அழைக்கப் பட்டன. நகராட்சி போன்ற அமைப்புகள் நடத்திவந்த அரசு மருந்தகங்களும் டிஸ்பென்சரி என்று அழைக்கப்பட்டன. இன்றும் கூட ஆர்.எஸ்.புரத்தில் மெக்ரிகர் வீதியில் உள்ள மாநகராட்சி தியாகராயர் மருந்தகத்தில் டிஸ்பென்சரி என்ற வார்த்தையைக் காணலாம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பீளமேட்டில் நாராயணசாமி நாயுடு டாக்டர் ரொம்ப பிரபலம். நோயாளிகளைப் பார்த்து மருத்துவ ஆலோசனை கூறி மருந்து கொடுப்பதற்கு நோயாளிக்கு ஏற்றவாறு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் பெற்றுக்கொள்வார்.

இதுபோக பீளமேட்டில் உள்ள ரொட்டிக்கடை மைதானத்துக்கு அருகில் ஒரு டிஸ்பென்சரி இயங்கி வந்தது. அந்த டிஸ்பென்சரி அமைந்திருந்த காரணத்தால் அது அமைந்திருந்த தெருவுக்கு இடுகுறிப் பெயராக டிஸ்பென்சரி தெரு என்று பெயரும் வழங்கப்பட்டது. ஆனால் இந்த பீளமேடு டிஸ்பென்சரி எந்த டாக்டராலும் நடத்தப்படவில்லை. ஒரு கம்பவுண்டர்தான் அங்கு வந்து மருந்து கொடுப்பார். வெகுநாட்களாக அந்த டிஸ்பென்சரி நடந்து வந்தது. சித்த மருத்துவர்கள் போன்ற நாட்டு வைத்தியர்கள் குறைந்து ஆங்கில முறை மருத்துவம் வளரத்தொடங்கிய காலத்தில் இந்த டிஸ்பென்சரியின் சேவை குறிப்பிடத்தக்கது.

இன்று பீளமேட்டில் புதிதாக பல டாக்டர்கள் வந்து விட்டார்கள். சொல்லப்போனால் டாக்டர்களை உருவாக்கும் மருத்துவக்கல்லூரியே இங்கு இயங்கி வருகிறது. தற்போது அங்கு மேற்சொன்ன டிஸ்பென்சரியும் இல்லை. கம்பவுண்டரும் இல்லை. அந்த தெரு மட்டும் டிஸ்பென்சரி வீதி என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது.