ஆக்ஸிஜன் உற்பத்தி:  ஸ்டெர்லைட் ஆலைக்கு  4 மாதங்கள் மட்டும் அனுமதி

ஆக்ஸிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையை திறக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்த ஆலோசனை தமிழக முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தினர் பங்கேற்ப்பில் இன்று (26.4.2021)தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் சூற்றுசூழலால் பாதிப்பு ஏற்படுவதின் காரணமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு, இறுதியில் கலவரமாக மாறி  போலீசாரின் துப்பாக்கி சூட்டினால் 13 உயிர்கள் பலியாகின.  பல்வேறு எதிர்பலைகளினால்  ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து மருத்துவமனைகளில் படுக்கை வசதியும், ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் இல்லாமல் வட மாநிலங்களில்  கொரோனா நோயாளிகள் பலர் இறந்து வருகின்றனர்.

தமிழக அரசு ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மூன்று தனியார்  நிறுவனங்களையே  நம்பியுள்ளது. ஆனால் அங்கும் ஒரு நாளைக்கு 400 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய்யப்படுகிறது. இதற்கு அதிகபட்சமாக 450 மெட்ரிக் மேல்,  தமிழகத்திற்கு தேவைப்பட்டாலும் நம்மிடம் இல்லை. டெல்லியில் நிலவுவது போன்று இங்கும் தட்டுப்பாடு ஏற்பட்டால்  உயிரிழப்பு பெருமளவில் இருக்கும்.

இந்நிலையில் தான் வேதாந்த நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை  ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறக்கலாமா அல்லது வேண்டாமா என அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தரப்பினர் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக  ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சியினர் ஆதரவு :

திமுக எம்.பி கனிமொழி : ஆக்ஸிஜன் தயாரிப்பிற்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என்றும் அரசின் முழு கண்காணிப்புடன்  செயல்படலாம் என கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் : ஸ்டெர்லைட் ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். ஆலை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் என்றும் திறப்பதில் ஆட்சேபனை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் :உயிர் பிரச்னை என்பதால் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஆலையை திறக்கலாம்.

மதிமுக பொதுச் செயலாளர்: ஆக்ஸிஜன் தேவை ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசே ஆலையை தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டு ஆக்ஸிஜன் உற்பத்தியை நடத்த வேண்டும். மேலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை இயங்க அனுமதிகக்கூடாது.

தமிழக அரசு அனுமதி :

தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய  4 மாதங்களுக்கு மட்டுமே அனுமதி. குறிப்பிட்ட கால வரம்பிற்கு மட்டுமே ஆலை இயங்கும். மேலும் ஸ்டெர்லைட் ஆலை தனது சொந்த மின்சாரத்தை பயன்படுத்த அனுமதி இல்லை. தமிழக அரசே ஆலைக்கு மின்சாரத்தை  வழங்கும் . மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் மீண்டும் கூட்டம் நடத்தி இது குறித்து முடிவு எடுக்கப்படும்.