உடல் உறுப்பு தானம் ஓர் தீக்குச்சி; பலர் வாழ்வில் வெளிச்சம்!

– டாக்டர் சந்திரசேகர், தலைவர், இருதய அறுவை சிகிச்சைத் துறை, கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை

அரிது அரிது மானிடராதல் அரிது

மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு

பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

என்பது ஔவையார் வாக்கு. அதாவது அரியதான இந்த மானிடப்பிறவியில் உடல் உறுப்பில் குறைபாடு என்பது எவ்வளவு துயரம் என்பதை விளக்குவதற்காக அவர் கூறியவை. மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும்  அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

முன்பு உடல் உறுப்புகள் பழுதடைந்தால் முடிந்த வரை மருத்துவம், இல்லையென்றால் இறைவன் விட்ட வழி என்றிருந்த நிலை மாறி இன்றைய நவீன மருத்துவம் அறிவியல் தொழில்நுட்பத்தின் துணையுடன் பல மருத்துவ சாதனைகளை படைத்து வருகிறது. இதனால் மனிதகுலம் பல வகையிலும் பயன் பெற்று பலர் புது வாழ்வு பெற்று வருகின்றார்கள்.

அந்த மனித குலத்துக்கு மிகவும் தேவையான மருத்துவ செயல்பாட்டை,  கோவையில் கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் தகுதி வாய்ந்த நிர்வாகமும், அர்ப்பணிப்பும், திறனும் கொண்ட மருத்துவர்களும் இணைந்து செய்து வருவது குறிப்பிடதக்கது.

இங்கு கடந்த மார்ச் 26 ஆம் தேதி நடைபெற்ற இருதய மாற்று அறுவை சிகிச்சை இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் மிகவும் பாதுகாப்பாகவும், அதே சமயம், உடல் உறுப்பு தானத்தை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இருந்ததாலும், மருத்துவ குழுவினர்களின் ஒரு சேர்ந்த செயலாலும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

மிக உயர்ந்த கட்டணம் என்பதால் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்ற  இந்த இருதய மாற்று அறுவை சிகிச்சையால்  ஒரு ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த 31 வயது ஆண் தற்பொழுது முழுவதும் குணமடைந்துள்ளார்.

இது குறித்து கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் இருதய  அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் மருத்துவர் சந்திரசேகர் கூறுகையில், தற்பொழுது இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவருக்கு, பிறப்பிலேயே இருதயம் பலவீனமாக இருந்ததால் கடந்த 2015 ஆம் ஆண்டு (வயது 25) இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சையை  நமது மருத்துவமனையில் செய்து  கொண்டார். அதன் பின்பு 4 ஆண்டுகள் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் இருந்த அவருக்கு கடந்த ஓர் ஆண்டுகாலமாக இருதயம் பலவீனமைடைந்து பாதிப்புக்குள்ளாகி இருந்தார்.

இதற்கு ஒரே தீர்வு இருதய மாற்று அறுவை சிகிச்சை தான் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஒரு ஆண்டுகாலமாக சரியான  அவருக்கு பொருந்த கூடிய கொடையாளி  கிடைப்பதில் தாமதமானதாலும், மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாகவும் அறுவை சிகிச்சைகள் தள்ளி போடப்பட்டது.

இந்தியாவிலேயே இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் தமிழகம் தான் முதலிடம் என்பது நாம் அறிந்ததே. மேலும் இந்த அறுவை சிகிச்சையில் என்ன சிறப்பம்சம் என்றால் இந்த நபருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவையில் முதல் முறையாக செய்யக் கூடியது என்பதால் மிகவும் பாதுகாப்பான முறையில் செய்யப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் இவருக்கு இது இரண்டாவது அறுவை சிகிச்சை. பொதுவாக இரண்டாவது அறுவை சிகிச்சை என்றால் அவரது உடல் அதனை ஏற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படும் வாய்ப்புகள்  அதிகம். எனினும் கொடையாளியின் இருதயம் சரிவர பொருந்திய காரணத்தால் இது வெற்றிகரமாக முடிந்தது.

மேலும் இவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த அறுவை சிகிச்சைக்கு செலவாகும் கிட்டத்தட்ட 15 லட்சமும் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் நடைபெற்றது.

இது தமிழகத்தின் மேற்கு மாவட்டத்தில் கொரோனா காலகட்டத்தில் நடைபெற்ற முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை என்பதும், கோவையில் முதல்வரின்  விரிவான காப்பீட்டு திட்டத்தில் நடைபெற்ற இரண்டாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சையும் இங்கு தான் நடைபெற்றது.

இது ஒருவரின் பங்கில் நடைபெற்றது கிடையாது. கிட்டத்தட்ட மருத்துவர்கள் உட்பட 60 பேர் கொண்ட குழு உறுப்பினர்களின் முழுமையான பங்கீட்டில் வெற்றிகரமாக நடைபெற்றது.  கொடையாளி உள்ளுரை சேர்ந்தவர் என்பதால் இருதயம் 2 மணி நேரத்தில் எடுத்து, கொண்டுவரப்பட்டது.

கிட்டத்தட்ட 6 மணி நேரம் நடைபெற்ற இந்த இருதய மாற்று அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர்களில் இருந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வரை அனைவரும் தனது பணியை துல்லியமாக செய்ததால் மட்டுமே  சாத்தியமாயிற்று.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒரு மருத்துவமனையில் நடைபெறுகிறது என்றால், அங்கு அனைத்து துறையிலும், அனைத்து விதமான நவீன தொழில்நுட்பங்களும் உள்ளது என்று அர்த்தம். 100 சதவிகித வசதிகள் இல்லாமல் இதனை செய்ய முடியாது. அதை  கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை செய்துள்ளது. தற்பொழுது உறுப்பு பெற்றவரும் குணமடைந்துள்ளார்.

இங்கு சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை அனைவருக்கும் உலகத்தில் உள்ள அனைத்து விதமான சிகிச்சைகளும் செய்ய முடியும் என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

இவற்றில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் இந்த வசதி உள்ளது என்பதும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் நாங்கள் செய்கிறோம் என்பதும், இதையும் தாண்டி  உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு கொண்ட ஒருவரால் இவர் பயன்பெற்று குணமடைந்து சென்றுள்ளார் என்பதே.  கோவை  மற்றும்  அதை சுற்றியுள்ள மாவட்டங்களை  தமிழகத்தின் வட மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும் அது குறைவாகவே உள்ளது. உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்தால் பலரது வாழ்க்கை அவர்களால் தொடரும் என்றார்.

இந்த உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை நாம் ஒவ்வொருவரும் பெற்று விட்டால் நமது சகமனிதர்களுக்கு ஏற்படும் துயரங்களைப் போக்க ஒரு வழி கிடைத்துவிடும். இந்த மருத்துவ முன்னேற்றத்தை செயலாக மாற்றி பலரின் வாழ்வில் ஒளியேற்ற

கோ.குப்பசாமி நாயுடு நினைவு மருத்துவமனை தயாராக உள்ளது.

அதனை உணர்வு பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் புரிந்து கொண்டு ஒத்துழைக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதே இங்கு நாம் அறிய வேண்டிய செய்தியாகும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை  போல மக்களுக்கு செய்யக்கூடிய இந்த உறுப்புதான சேவை மனிதகுலத்தின் உயர்ந்த மாண்புமிக்க சேவைகளில் ஒன்றாகும்.

For details:

Kuppuswamy Naidu Memorial Hospital,

Transplant Coordinator,

Phone: 82200 44838.