என்னதான் நடக்கிறது?

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல் தொடர்பாக, இந்தியாவின் உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. சொல்லப் போனால் கொரோனா வைரஸ் பரவல் வேகம், இருக்கிற நிலவரம் எல்லாம் பார்த்தால் கொஞ்சம் கலவரமாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல உயர்ந்து தற்போது நாளொன்றுக்கு மூன்று லட்சத்தை தாண்டி விட்டது. இது எப்போது உச்சம் பெற்று பிறகு படிப்படியாக குறையும் என்ற உறுதியான தகவல் யாருக்கும் தெரியாத சூழ்நிலையில் அனைவருமே ஒரு வித கவலையுடன் இருக்க வேண்டிய சூழல் வந்து விட்டது. இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மாநில அரசுகள் செய்வதறியாது திகைத்துப் போய் இருக்கின்றன : எப்படி இந்த வைரஸ் பரவலை எதிர்கொள்வது என்று அதிர்ந்து போய் நிற்கின்றன.

இந்த வைரஸ் தாக்குதல் சென்ற ஆண்டைக் காட்டிலும் அளவிலும், பரவல் விகிதத்திலும், வீரியத்திலும் என அனைத்திலும் அதிகமாக இருப்பது இதனை எதிர்கொள்ளும் முன் களப்பணியாளர் தொடங்கி, மருத்துவர்கள், அரசாங்கம் என அனைவரையும் திக்குமுக்காட வைத்திருக்கிறது. உயர்ந்து கொண்டே போகும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு  ஏற்ப படுக்கை வசதி இல்லாதது, மருத்துவ வசதி குறைவு, ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு என்று பலவித குறைகளோடு பாதிக்கப்பட்டு நிற்கிறோம். அதிலும் ஆக்சிஜன் தொடர்பாக வரும் செய்திகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன.

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் எங்கு திரும்பினாலும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கதறும் நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும், இன்னொரு புறம் என்ன செய்வது எனத்தெரியாமல் பதறும் மருத்துவர்கள், தவிக்கும் அரசு அதிகாரிகள் என்ற காட்சிகள் செய்தி ஊடகங்களிலம், காட்சி ஊடகங்களிலும் வந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே ஆக்சிஜன் சேமிப்பு கலனில் ஏற்பட்ட பழுதால் பலர் பலியான சோகம் ஒரு புறம், ஆக்சிஜனை அடுத்த மாநிலத்துக்கு கொண்டு போகிறார்கள் என்ற குரல் இன்னொரு புறம், இது போக மண்ணெண்ணெய் வாங்க ரேஷன் கடையில் நிற்பது போல பாதிக்கப்ட்ட நோயாளிகளின் உறவினர்கள் சிறிதும், பெரிதுமாக ஆகச்சிஜன் சிலிண்டர்களுடன் வரிசையில் நிற்பதும் நடந்தேறி வருகிறது. அரசும் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பது போல தோன்றுகிறது. மக்களுக்கு உதவும் வகையில் ராணுவ விமானத்தில் ஆக்சிஜன் கொண்டு வர உதவும் கிரையோஜெனிக் டேங்க் லாரியை ஏற்றிக்கொண்டு மேற்கு வங்காளத்துக்கு பறந்து சென்று, ஆக்சிஜன் நிரப்பி வந்து நோயாளிகளை காப்பாற்றும் நிலையும் ஏற்பட்டு இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் இறக்கும் போது அவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கும் கூட இடப்பற்றாக்குறை, பணப்பற்றாக்குறை, இன்ன பிற என்று மக்கள் கடும் சிரமத்துகுள்ளாகி வருகின்றனர். ஒரு மாநிலத்தில் இறந்தவரின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்வதற்கு பணமில்லாமல் வசதியில்லாமல் தனது தாலியை கழற்றிக்கொடுத்து செல்லும் இந்தியப் பெண்ணின் அவல நிலையை தொலைக்காட்சிகள் காட்டிய போது இந்தியாவே அதிர்ந்து போனது.

இன்னொரு புறம் தடுப்பூசி முகாம்கள் நடத்துவதில் பெரும் சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறது. 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இன்னும் முதல் தவணை தடுப்பூசியே போட்டு முடிக்காத நிலையில், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு தற்போதுதான் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வரும் 1-ம் தேதி` முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கும் போடலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில் இதனை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்று தெரியவில்லை. இதே நேரத்தில் இரண்டாவது டோஸ் போடுபவர்களும் வரும் போது அதனை எதிர்கொள்ள என்ன திட்டம் இருக்கின்றது என்று தெரியவில்லை.

ஏற்கனவே ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே வரும் நோயாளிகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் தடுப்பூசிகளை எவ்வாறு கையாளப் போகிறோம் என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.

கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. அங்கு தினந்தோறும் புதிதாக ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அடுத்து டில்லி, குஜராத் என்று பல மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. தென்னகத்தில் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் ஆக்சிஜன் பெறுவதில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கர்நாடகா, கேரள மாநிலங்களில் ஒருநாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருபத்தைந்தாயிரத்தை தாண்டி விட்டது. தமிழகத்திலும் அது பன்னிரண்டாயிரத்தை தாண்டி இருக்கிறது. மெல்ல மெல்ல படுக்கை மற்றும் மருந்து வசதி குறைபாடுகள் நெருங்கி வருகின்றன.

இந்த நேரத்தில் இன்னும் முழு வேகத்துடன் இந்த கொரோனா வைரஸை எதிர்காள்ள வேண்டும் ஆனால் அதற்கான முழு பலமும், ஆதரவும் விழிப்புணர்வும் இருப்பதாக தெரியவில்லை. ஏற்கனவே சென்ற ஆண்டு இந்த கொரோனா வைரஸ் ஆடிய ஆட்டத்தால் வாழ்வாதாரம் இழந்து, பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இதனை எதிர்கொள்வது மிகப்பெரிய சவால்தான். என்றாலும் அதற்கேற்ப சரியான திட்டமிடுதலும், செயல் திறனும் இல்லை என்றால் தமிழகமும் மற்ற மாநிலங்களைப்போல ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க கியூ, உடல்களைப் புதைக்க சுடுகாட்டில் கியூ, என்று தொடங்கி சொந்த நாட்டிலேயே வாழ்வாதாரத்துக்காக இந்த கொரோனா வைரஸால் கியூவில் நிற்கும் நிலை ஏற்பட்டு விடும்.

அத்தகைய ஒரு கொடிய நிலை வராமல் இருக்க வேண்டிய எல்லா நடவடிக்கைகளும் எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டியது மக்களின் கடமை. அப்போதுதான் இந்த கொரோனா வைரஸ் இண்டாம் அலையை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டு கடக்க முடியும்.