இரண்டாம் அலையை சமாளிக்குமா கோவை?

கொரோனாவின் சீற்றத்தின் இரண்டாம் அலையில் நாடே தத்தளித்து வருகின்றது. இது வரும் என்பது அனைத்து வல்லுநர்களும் சொன்னது தான். ஆனால் இவ்வளவு உக்கிரமாய் வரும் என்றுதான் நமக்கு தெரியவில்லை.

சென்ற முறை வெறும் சோப்பு, முகக் கவசம், சமூக விலகல் என்பன மட்டுமே நமக்கு துணைநின்றது, இம்முறை நம்மிடம் தடுப்பூசி இருந்தும் பரவல் முன்பைவிட  பன்மடங்கு அதிகரித்துள்ளது நாம் அனைவரும் வருந்தவேண்டிய ஒன்று.  இருப்பினும் அரசும், மருத்துவத்துறையினரும் தொடர்ந்து இந்த பெருந்தொற்றிடமிருந்து மக்களை காக்கவும், பாதிப்படைந்தவர்களை குணப்படுத்தவும் பெரும்பாடு பட்டு வருகின்றனர்.

இரண்டாம் அலையை சமாளிக்க மருத்துவமனைகள் வட இந்தியாவில் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில், கோவையின் நிலைமை என்ன, மருத்துவமனைகள் எவ்வாறு தயாராக உள்ளது என கோவையின் முன்னணி  மருத்துவமனைகளின் இயக்குனர்கள் மற்றும் டீன் ஆகியோரிடம்  நாம் நிகழ்த்திய நேர்காணலின் தொகுப்பு

 

பயமும் விழிப்புணர்வும் அவசியம்!

Dr.நிர்மலா, டீன், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

கொரோனா-வின் இரண்டாம் அலையில் தற்போது  கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். தொற்று ஏற்பட்டும்  தாமதமாக வரும் நோயாளிகளும் உள்ளனர்.  இவ்வாறு வருவதால் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்த நிலை இவர்களுக்கு ஏற்படுகிறது.

இவ்வாறு வருபவர்களில் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறவேண்டிய அவசியம் இல்லை.  இங்கு வரும் 100 நோயாளிகளில் சராசரியாக 25-50 பேர் இங்கு அனுமதிக்கப்படவேண்டிய நிலையில் வருகின்றனர்.அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளும் தொற்று லேசாக உடையவர்களும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர்.

தொற்று மிதமான மற்றும் தீவிரமான நிலையில் உள்ளோர்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.   நாள் ஒன்றுக்கு 25 பேர் சராசரியாக இங்கே குணமடைந்து வீடு திரும்புகிறார்கள்.

இங்கு கொரோனா தாக்குதலால் பாதிப்படையும் நோயாளிகளுக்காக  முதலில் 250  படுக்கைகள் மட்டும் இருந்த நிலையில், இரண்டாம் அலையில் அதிகம் மக்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்பதால்  இதை 800 ஆக உயர்த்தியிருக்கிறோம்.

இதில் 100 தீவிர சிகிச்சை படுக்கைகள், தோராயமாக 450–500 படுக்கைகள் பிராணவாயு செலுத்தும் வசதி  கொண்ட படுக்கைகளாக உள்ளன. 40–45 மருத்துவர்கள் கொரோனா சிகிச்சைக்கெனவே இங்கு உள்ளனர். இவர்களின்  கீழ் துணை மருத்துவர்கள் மற்றும்  செவிலியர்கள் செயல் பட்டு வருகின்றனர். இவர்கள் கொரோனா சிகிச்சைக்கெனவே செயல்படும் மருத்துவர்களாக உள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கும், பிறநோய்க்கான சிகிச்சை பெறுபவர்களுக்கும் எந்த வித தொடர்பில்லாத வகையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் நுழையும் வழி, செல்லும் வழி இரண்டும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. சென்ற முறை கொரோனாவின்  சீற்றம் வயதானோர் மேல் அதிகமாக இருந்த நிலையில் இம்முறை நடுத்தர வயதினரை இந்நோய் தாக்கிவருகிறது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

கொரோனா பற்றிய பயமும், விழிப்புணர்வும்  மக்களிடையே அதிகமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். இவை இரண்டும் இருந்தால் தான் தினசரி ஏற்படும் புதிய நோயாளிகள் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

இன்று சில நோயாளிகளுக்கு இயல்பாக ஏற்படும் அறிகுறிகளை தாண்டி சில வேறு வகைகளில் கொரோனா தென்படுகிறது, எனவே ஏதாவது உடல் நல குறைபாடு இருந்தால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது சிறந்தது. மக்கள் கட்டாயம்  தமிழக அரசு அறிவித்துள்ள தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.  இப்பொழுதும் முகக் கவசம் அணிவதில் மக்கள் பலர்  அலட்சியம் காட்டுவது வருத்தத்திற்குள் ஆழ்த்துகிறது.

தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் கொரோனா தொற்று முற்றிலுமாக ஏற்படாது என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். முகக்கவசம் அணிய, கைகளை சுத்தமாய் வைக்க தவறவேண்டாம்.

 

நாம் பல சவால்களை சந்தித்தவர்கள், இதிலிருந்தும் மீள்வோம்!

Dr.அருண் பழனிச்சாமி, இயக்குனர், கே.எம்.சி.ஹெச்.

யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை நேர்ந்து அனைவரையும் அதிரவைத்துள்ளது. மிக வேகமாக அதிகரித்து வரும் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை தான்  மக்கள் அதிர  முக்கியமான காரணம்.

முதல் அலை இந்தியாவில் தீவிரமாக ஏற்படுவதற்கு முன்னரே மார்ச் மாதத்திலிருந்து நாம் தயாராகிக் கொண்டிருந்தோம். ஜூலை–யில் தான் அதிகரிக்கத் தொடங்கியது அப்போது. ஆனால் இரண்டாம் அலையோ வெறும் ஒரு மாத காலத்திற்குள் அசுர வேகத்தில் வந்து, பலமடங்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை சமாளிக்க மருத்துவமனைகள் தங்களுக்கு தேவையான மருந்துகளை, மருத்துவ துறை சார்ந்த பணியாட்களை அதிகரிக்க, படுக்கை வசதிகளை உயர்த்த, திடீர் என போர்க்கால அடிப்படையில் செயல்பட    குறுகிய காலமே இருந்த நிலையில், தங்களால் முடிந்த வேகத்தில் மிகவும் துணிவுடன் செயல்பட்டு வருகிறார்கள்.

எங்கள் மருத்துவமனையை பொறுத்தவரை சராசரியாக ஒரு நாளைக்கு 40–50 பேர் கொரோனா சிகிச்சைக்காக வருகிறார்கள். அவர்களில் 5 பேருக்கு மட்டுமே தீவிர நிலை சிகிச்சை தேவைப் படுகிறது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களில் 90%–95% குணமடைந்து வீடு திரும்புகின்றனர். சென்றமுறை கொரோனாவை கையாண்டதில் கிடைத்த அனுபவம், எங்கள் மருத்துவர்களின் அனுபவம், எங்கள் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு அனைத்தும் இம்முறை இரண்டாம் அலையை அணுகுவதில் எங்களுக்கு உறுதுணையாக இருந்துவருகிறது.

நோயாளிகளுக்கு ஏற்படும் முதல் கட்டத் தொற்றிலிருந்தே  நாம் வேகமாக செயல்பட்டால் உயிரிழப்பை நன்கு குறைத்திட முடியும் என்பதை தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அனைத்து மருத்துவர்களும்  சொல்கிறார்கள்.

நாங்கள் நோயாளிகளை தனிமைப் படுத்த எங்கள் மருத்துவக் கல்லூரியின் ஒரு பிரிவை உபயோகித்து வருகிறோம். இதைத் தவிர தற்போது எங்கள் 2 புதிய ப்ளாக்குகளில் ஒன்றை கொரோனா நோயாளிகள் நலனுக்காக வழங்கியுள்ளோம்.. மொத்தம் 250 படுக்கைகளை சிகிச்சைக்காக ஒதுக்கியுள்ளோம், இதில் 30-40 படுக்கைகள்  தீவிர சிகிச்சை சேவைக்கு வைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2020 முதலே நாங்கள் அதிகமான செவிலியர்களை பணியில் அமர்த்தியுள்ளோம்.  500க்கும் அதிகமான செவிலியர்கள், 15–20 சுவாச சிகிச்சையாளர்கள், தேவையான டயாலிசிஸ் தொழில்நுட்பவியலாளர்கள், துணை மருத்துவ ஊழியர்களையும் பணியமர்த்தியுள்ளோம். சென்ற ஆண்டு இவ்வாறு பலத்துறையை சேர்ந்த மருத்துவ ஊழியர்களை நியமனம் செய்தது தற்போது எங்களுக்கு உதவியாக உள்ளது.  இருப்பினும் எதிர்பார்த்திராத அளவில் நோயாளிகளின் எண்ணிக்கை  உயர்ந்து வருகிறது.

ஆனால் இந்த நிலையை கட்டுப்படுத்த தடுப்பூசி நிச்சயம் உதவும் என்று சொல்லுவேன். அதற்கென தடுப்பூசி செலுத்திக்கொண்டால் அதற்கு பின் கொரோனாவால் எந்த பாதிப்பும் இருந்துவிடாது என்று நினைப்பது தவறு. அரசு காட்டியுள்ள சரியான வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் அறிகுறி இல்லாத வகையில் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் பிறருக்கு  தொற்று ஏற்பட  நாம் காரணமாக அமையலாம்.

பல இடங்களில் நடத்திய ஆய்வுகளில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் அஜாக்கிரதையாகவும்,  பிறருக்கு ஆபத்தாக செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.  எனவே தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இந்த தருணத்தில் பலருக்கும் தடுப்பூசி குறித்து கேள்விகள் இருக்கும். தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் ஏற்படும் தாக்கம் என்ன என்பதையும், செலுத்தாவிட்டால் என்ன ஏற்படும் என்பதையும் மக்கள் சற்று ஒப்பிட்டு பார்க்கவேண்டும். நாடு இருக்கும் தற்போதைய நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அனைவரின் கடமையாக மாறியுள்ளது.

தடுப்பூசியையோ கொரோனாவையோ கண்டு அஞ்சவேண்டாம். அரசு காட்டியுள்ள வழிமுறைகள் மற்றும் மருத்துவர்கள் சொல்லும் அறிவுரைகளை பின்பற்றினால் பாதுகாப்பாக இருக்கலாம். நம் நாடு இதற்கு முன்பு மிக பெரிய சவால்களை சந்தித்து வெற்றிபெற்றுள்ளது. இதிலிருந்தும் மீள்வோம், வெல்வோம்.

 

தீவிர பாதிப்பை தடுப்பூசி தடுக்கிறது!

Dr.A.முரளி, தொற்று நோய் சிறப்பு மருத்துவர், பி.எஸ்.ஜி மருத்துவமனை

கோவையில் கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையை ஒப்பிடும் போது, இரண்டாம் அலையிலும் தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் ஏறக்குறைய ஒரே மாதிரியான நிலையில் தான் உள்ளது. மும்பை, டெல்லி போன்ற மாநிலங்களில்  கொரோனா நோயாளிகளின் தினசரி பாதிப்பு எண்னிக்கை  போன்று  இங்கு அதிகளவில் இல்லை.

கொரோனாவின் முதல் அலையில் அறிகுறியற்ற பாதிப்படைந்தவர்கள் அதிகளவில் இருந்தனர். ஆனால் இந்த இரண்டாம் அலையில் கொரோனாவின் முழு அறிகுறிகளை உடைய நோயாளிகள் அதிகம் காணப்படுகின்றனர். லேசான அறிகுறி கொண்டவர்கள் மிகக் குறைந்த அளவிலே உள்ளனர்.

கடந்த வருடம் தொற்றின் பாதிப்பு உச்சத்திலிருந்த போது மருத்துவமனைக்கு வந்த கொரோனா நோயாளிகளின் என்ணிக்கையின் அளவிலேயே தற்போதும் வருகிறார்கள். இம்மாதிரியான அதிக எண்ணிக்கையை சமாளிக்கக் கூடிய வகையில் இம்முறை இதற்காக சிகிச்சை அளிக்கும்  மருத்துவமனைகளும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கென 440 படுக்கை வசதிகள் உள்ளன. இதற்கும் அதிகமான படுக்கைகள் தேவைப்படும் பட்சத்தில் அதிகரிக்கவும் தயாராக உள்ளோம்.  இந்த பெருந்தொற்றின் ஆரம்ப காலகட்டத்தில்  இருந்து தற்போது வரை 9700 – க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளித்துள்ளோம். இது தமிழ்நாட்டில்  உள்ள  தனியார் மருத்துவமனைகளிலேயே  அதிகம் எனக்கூறலாம். தற்போது உள்ள சூழலை சமாளிக்க  பணியாளர்களையும் எங்கள் மருத்துவமனையில் அதிகப்படுத்தியுள்ளோம்.

கொரோனாவின் இரண்டாம் அலையில் வயதானவர்களை விட மத்திய வயதுடையோருக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுவதாக ஒப்பீட்டளவில் தோன்றலாம். வயதானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருவதால் கொரோனாவை எதிர்க்கக் கூடிய எதிர்ப்பு சக்தி அவர்களின்  உடலில் அதிகரித்திருக்கும். குழந்தைகளை பொறுத்தவரை  அறிகுறியற்ற அல்லது லேசான கொரோனா தொற்று பாதிப்புகளே வருகின்றன. பொதுவாக தீவிர பாதிப்பு குழந்தைகளுக்கு வருவதில்லை.

தற்போது இந்த கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து வருகிறது. இதனால்  தடுப்பூசி முழுமையாக பயனளிக்காது என்று கூற முடியாது. வைரஸின் உருமாற்றத்தைப் பொறுத்து தடுப்பூசி வேறுபடலாம். இவ்வாறு உருமாற்றம் அடைந்த வைரஸ்க்கு தடுப்பூசியின் திறன்  சிறிது குறையலாம். ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி உடையவர்கள் அனைவரும் அதனைப்   போட்டுக் கொள்ளவேண்டும்.

பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படும்  என்கின்ற அச்சத்தால் இதனை தவிர்க்காமல் இருக்க வேண்டும். தடுப்பூசி நிச்சயம் உதவும். சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதினால் தடுப்பூசியால்  பலனில்லை என்று கூற முடியாது. தடுப்பூசியின் பக்க விளைவுகளையும், அதன் நன்மைகளையும் ஒப்பிடும்போது  நன்மையே அதிக அளவு உள்ளது. தடுப்பூசியினால் 95% கொரோனாவின் தீவிர பாதிப்பு குறைகிறது. அதே சமயம், தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் 100% தொற்று பாதிப்பு ஏற்படாது என்றில்லை. அதன் பாதிப்பு மிக அதிக அளவு என்றில்லாமல் குறைவான பாதிப்பே ஏற்பட்டு பின்பு சரியாகி விடும். இதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

கொரோனாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை  கடைப்பிடித்தல், கை கழுவுதல் போன்றவற்றையும் முறையாக பின்பற்ற வேண்டும்.

 

இம்முறை நடுவயதினரிடம் கொரோனா தொற்று அதிகம் காணப்படுகிறது!

Dr.P.சுகுமாரன், டீன் மற்றும் இயக்குனர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

சென்ற முறை வயதானோரிடம் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த வைரஸ் இம்முறை 20 முதல் 40 வயது கொண்டவர்களை சீண்டியுள்ளது.  அறிகுறியில்லாத தொற்று உடையவர்களை அதிகம் இம்முறை காணமுடிகிறது.

இந்தியாவில் பி-111 எனப்படும் ரகமான கொரோனா வைரஸ் பரவல் அதிகமாய் காணப்படுவதாக சொல்கின்றனர். இது பெரிய அளவிற்கு 20–40 வயதினரிடம் காணப்பட்டாலும் பெரிய  பாதிப்பை ஏற்படுத்துவதில்லை ஆனால் 60–65 வயதானோரிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த கொரோனா காலத்தில் நாள் ஒன்றிற்கு 5 முதல் 6 பேர் தான்  நோய் தொற்று பாதிப்புக் குள்ளாவார்கள். இரண்டாம் அலை ஏற்பட்ட பின்பு, தினமும் எங்கள் மருத்துவமனைக்கு வரும் வெளி நோயாளிகளில் 15–20 பேரிடம் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.

நாங்கள் காய்ச்சல், சளி போன்ற அறிகுறியோடு வரும் நோயாளிகளை buffer ward என்ற ஒரு வார்டில் அமரவைத்து அவர்களை ஆய்வு செய்த பின்னரே  அடுத்தகட்ட சிகிச்சை நடவடிக்கைகளுக்கு எடுத்து செல்கிறோம்.

ஒருவேளை தொற்று உறுதிசெய்யப்பட்டால், அவர்களை தனிமைப் படுத்தி, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்போம். தொற்று இல்லையென உறுதி செய்த பின்னரே பொது வார்டுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தொற்றின் வேகம் மிகுதியாய் இருப்பதால் இவ்வாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. எங்கள் பொது மருத்துவப் பகுதியில் இருந்து கொரோனா சிகிச்சை மையம் முற்றிலும் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே மற்ற நோய்சிகிச்சைக்காக வரும் மக்கள் அஞ்ச வேண்டியதில்லை. இந்த தருணத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 8 முதல் 12 பேர் குணமடைந்து  வீடு  திரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா  நோயாளிகளுக் கென 153 படுக்கைகளை இரண்டாம் அலை காலத்தில் ஒதுக்கியிருந்தோம். இந்த படுக்கைகளில்  80  பிராணவாயு செலுத்தும் வசதி கொண்டவை மற்றும்  70 தனி  அறை வசதிகள் கொண்டவை. இதைத் தவிர தற்போது 5 தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. தேவைகள் எழும் பட்சத்தில் எங்களால் பொது ஐ.சி.யு வில் உள்ள 25 படுக்கைகளை இங்கு கொண்டு வரமுடியும்.

கொரோனா  சிகிச்சைக் கென மொத்தம் 70 மருத்துவர்கள் இங்கு உள்ளனர். இவர்களின் வழிகாட்டுதலில் 90 செவிலியர்கள் சிகிச்சைக்கு உதவி வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் சுழற்சி முறையில் நாங்கள் பணியமர்த்தி வருகிறோம்.

1 வார வேலைக்கு பின் 2 வாரம் தனிமைப் படுத்தப்பட்டு இவர்களால் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்த பின்னரே இவர்கள் இங்கிருந்து தங்கள் இல்லங்களுக்கு அனுப்பி  வைக்கப்படுகிறார்கள். அதன் பின் ஒரு வாரம் கழித்து மீண்டும் சேவைக்கு வருவார்கள். நாங்கள் இவர்கள் அனைவர்க்கும், தடுப்பூசி மட்டுமல்லாது காப்பீடு எடுத்துள்ளோம், இவர்களுக்கு தேவையான  றிறிணி களை வழங்குகின்றோம்.

எங்கள் மருத்துவமனையில் தினசரி 300–400 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. உண்மையி லேயே தடுப்பூசி நன்றாகவே இந்நோயை சமாளிக்கிறது. ஆனால் மக்கள் ஒன்றை தெரிந்துகொள்ளவேண்டும். தடுப்பூசி செலுத்திய 2 வாரங்களுக்கு பின் தான் உடம்பில் இந்த வைரஸை எதிர்க்கும் சக்தி உருவாகத் தொடங்கும். அதன் பின் இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக்கொண்டாலும் அது உடலை வலிமை படுத்த 15 நாட்கள் ஆகும்.

தடுப்பூசி மட்டுமே நம்மை இந்த பெருந்தொற்றிலிருந்து காத்துவிடும் என்று நினைக்கக் கூடாது. எல்லா தடுப்பூசிகளும் 75%–85% எதிர்ப்புசக்தியை தருமே தவிர 100% என்பதற்கு வாய்ப்பு இல்லை என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. எதிர்ப்பு சக்தி உருவாகும் தருணத்திற்கு இடையே முகக்கவசம், சமூக விலகல், கை சுத்தம் இல்லாமல் இருப்பது நல்லதல்ல.

தற்போது தடுப்பூசி பற்றி பல சிந்தனைகள் பலருக்கும் மனதிற்குள் இருக்கும். தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலர் மரணித்திருப்பது தற்செயலாக தான் பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசி  மட்டுமல்ல பொதுவாகவே எந்த தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் உடல் வலி, தலைவலி, காய்ச்சல் போன்ற சில அறிகுறிகள் இருக்கும். இவை மருந்து உடம்பில் செயல்படுவதையே காட்டுகிறது.

மே 1 முதல் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. அனைவரும் இதை செலுத்திக் கொள்ளலாம். இளைஞர்கள் நமக்கு தொற்று ஏற்படாது என அலட்சியமாக இருக்க வேண்டாம். இம்முறை இளைய, நடுத்தர வயதினருக்கும் தொற்று அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதை மனதில் கொண்டு செயல்படவேண்டும்.

 

நம்மிடம் தடுப்பூசி இருப்பது மிகப்பெரிய வரப்பிரசாதம்!

Dr.M.செந்தில் குமார், மருத்துவ ஆலோசகர் & சர்க்கரை நோய் நிபுணர், இந்துஸ்தான் மருத்துவமனை.

முதல் அலையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல  உயர்வதை பார்த்த நமக்கு இரண்டாம் அலையின் வேகத்தைப் பார்த்தால் அச்சமாக தான் உள்ளது. முதல் அலையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளித்து நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளோம். அதன் பின்பு அதனால் வரக்கூடிய பக்க விளைவுகளுக்கும் சரியான மருத்துவ சிகிச்சை அளித்துள்ளோம்.

இரண்டாம் அலையை பொறுத்தவரை  கோவை நகரத்தில் இருந்து தொற்றின் அறிகுறிகளோடு சிகிச்சைக்கு வருபவர்களை விட புறநகர் பகுதிகளில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரண்டாம் அலையின் ஏற்றம் மேல் நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது. நாங்கள் பார்த்தவரையில் தற்போது இறப்பு விகிதம்  என்பது குறைவாக தான் உள்ளது.

தற்போது எங்கள் மருத்துவமனையில் 75 உள் நோயாளிகளுக்கு தனி அறை கொடுத்து சிறப்பான சிகிச்சை அளித்துக் கொண்டு வருகிறோம். அரசாங்கம் 50% படுக்கை வசதியை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க அறிவுறுத்தியிருக்கும் நிலையில் நாங்கள் இங்குள்ள 200 படுக்கைகளில் 120 படுக்கைகளை ஒதுக்கும் பணியை  செய்து வருகிறோம்.

இங்கு 7 சிறப்பு அனுபவம் வாய்ந்த நிபுணர்கள், 5 மருத்துவ அதிகாரிகள் வழிநடத்துதலில் 60 செவிலியர்கள் கொரோனா சிகிச்சைக்கென செயல்பட்டு வருகிறார்கள்.  இதற்கு முன்பு 3 அதிக தீவிர கண்காணிப்பு கொண்ட படுக்கைகள் இருந்தது. இதை தற்போது 5 ஆக உயர்த்தியுள்ளோம்.

முன்பு 4 தீவிர சிகிச்சை படுக்கைகள் இருந்தது, இதையும் 8 ஆக உயர்த்தியுள்ளோம். இந்த சிகிச்சைக்கு தேவையான அனைத்து முக்கிய மருந்துகளையும் கையிருப்பில் வைத்துள்ளோம்.

ஒரு தனி செயற்குழு ஒன்றை ஏற்படுத்தி, சென்ற முறை அளித்த சிகிச்சைகள், நோயாளிகளை கையாண்ட விதம், மருத்துவமனை கட்டுப்பாடுகள் என பலவற்றை இம்முறை எவ்வாறு சிறப்பாக செய்திட முடியும் என ஆலோசித்து அதன்படி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

1918-ல் ஏற்பட்ட பெருந்தொற்றான ஸ்பானிஷ் ஃப்ளு வை சற்று நினைவுபடுத்தி பார்த்தால், அதுவும் தன் இரண்டாம் அலையில் மிக தீவிரமாக தான் இருந்தது. உலக அளவில் பெரிய அளவு உயிரிழப்பை ஏற்படுத்தியது. எந்த பெருந்தொற்றாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையை பாதித்து, அதன் பின்னே அந்த மக்களுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகிய பின்  தானே குறைந்து,  காணாமற் போகும்.

இந்த கொரோனா இரண்டாம் அலை காலத்தில் நம்மிடம் தடுப்பூசி இருப்பது மிகப்பெரிய வரப்பிரசாதம். இதை நம்பிக்கையுடன் அரசு அறிவித்திருக்கும் வயதினர் அனைவரும் தடுப்பூசி மையங்களுக்கு சென்று செலுத்திக்கொள்ளலாம். நோய் தொற்றின் தீவிரத்தைக் குறைக்க இது நிச்சயம் உதவும்.  சமீப கால நிகழ்வுகள் மற்றும் தடுப்பூசி குறித்த சில வதந்திகள்   மக்களிடையே பல அச்சங்களை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசியை பொதுமக்கள் செலுத்திக்கொள்ளும் முன்னரே இந்தியாவில் உள்ள மருத்துவர்கள், செலுத்திக்கொண்டனர் என்பதை ஒருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மருத்துவர்களிலும் வயது முதிர்ந்தவர்கள், இருதய நோய் உடையவர்கள், இரத்த அழுத்தம், கொலெஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் கொண்டவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் இவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் மரணிக்கின்றனர் என்ற செய்திகள் பதிவாகவில்லை.

இந்தியாவில் இதுவரை 100 மில்லியன் மக்களுக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வதந்திகளை கண்டு அஞ்சாமல் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுங்கள், சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் எடுங்கள்.