கொரோனா 2.0

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவிலும் பரவத்தொடங்கி விட்டது. இந்த முறை அதன் பரவல் வேகம் சற்று அதிகமாகவே இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. ஏற்கனவே சென்ற ஆண்டு பட்ட துயரங்கள், மறையும் முன்பு, துன்பத்தின் வடு இன்னும் மறையாத நிலையில் இரண்டாம் அலை பரவத் தொடங்கி விட்டது.

இந்த முறையும் மகாராஷ்டிரா மாநிலம் தான் அதன் இலக்கு என்பது போல அந்த மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று தலை விரித்து ஆடத் தொடங்கி இருக்கிறது. வெகு வேகமாக உயர்ந்து ஒரு நாளைக்கு ஐம்பதாயிரம் பேருக்கு மேல் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரு மோசமான சூழல் அங்கு உருவாகி இருக்கிறது. அதே அளவு வேகத்துடன் சீராக இந்தியா முழுவதும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது. அரசின் இந்த வார மருத்துவ குறிப்பின்படி ஒரு நாளைக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டி இருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இதனால் மரணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது. தற்போது ஒரு நாளைக்கு மரணமடைவோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.

என்ன தான் சென்ற ஆண்டு இந்த கொரோனாவை நாம் கையாண்டு இருந்தாலும் மீண்டும் இந்த இரண்டாம் அலை ஒரு அச்சுறுத்தலாகவும், பெரும் சவாலாகவும் தான் இருக்கிறது என்பதே நடைமுறை உண்மை. இன்னும் சொல்லப்போனால் இப்போது கோவிட் 19 நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி வந்து விட்டது. அந்த தடுப்பூசி போடும் பணி ஒரு புறம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. என்றாலும் இந்த இரண்டாம் அலை ஒரு பயமுறுத்தலாகத் தான் உள்ளது. ஏனென்றால் இதன் பரவல் வேகம் சென்ற ஆண்டை விட அதிகமாக இருப்பதை காண முடிகிறது. சென்ற ஆண்டு கிட்டத்தட்ட ஆகஸ்டு, செப்டம்பரில் வந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை ஒப்பிடும் போது இப்போது ஏப்ரல் மாதத்திலேயே ஒரு இலக்கை எட்டிவிட்டது போலத் தோன்றுகிறது. கூடவே சென்ற ஆண்டைக்காட்டிலும் மற்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு எட்டாயிரம், பத்தாயிரம் என்ற அளவிலேயே இது மெல்ல, மெல்ல உயர்ந்து வருவது ஒரு ஆறுதல் அளிக்கும் செய்தி. அதற்கடுத்து தடுப்பூசி போடும் பணி இங்கு முழு வீச்சில் நடந்து வருவதை காண முடிகிறது. கோவையைப் பொறுத்தவரை தொழில் நிறுவனங்களும், கொடிசியா போன்ற தொழில் அமைப்புகளும், மற்ற தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என பலரும் இந்த தடுப்பூசி விஷயத்தில் நல்ல அக்கறை காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா சிகிச்சை மையங்கள், சிறப்பு மருத்துவ மையங்கள், மருந்துகள், ஆக்சிஜன் மற்றும் இது சார்ந்த உபகரணங்கள் எல்லாம் தயார் நிலையில் இருப்பது சிறிது நம்பிக்கையைத் தருகிறது.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும் தகவல்களை வைத்து பார்க்கும் போது இதை எவ்வாறு ஜாக்கிரதையாக கையாள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு வருகிறது. அந்த வகையில் கண்டிப்பாக இந்த கோவிட் 19 இரண்டாம் அலையில் இருந்து நாம் வெளிவருவதற்கு அரசாங்கம் மட்டும் போதாது. கூடவே பொதுமக்களின் இடையறாத ஒத்துழைப்பும் மிக முக்கியம்.

கொரோனா நோய்த்தொற்றை எதிர்க்கும் மும்மூர்த்திகளான முகக்கவசம், கை கழுவுதல், சமூக விலகல் இவற்றை கடைபிடிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. கூடவே சுகாதாரத்துறை செயலாளர் சொன்னது போல வெளியே சுற்றாமல் இருப்பது, அதாவது வெளியே செல்வதை அவசியத்துக்காக மட்டும் என்று வைத்துக்கொள்வது, முடிந்த வரை பணியை வீட்டில் இருந்து செய்ய முடியும் என்றால் அதனை கடைபிடிப்பது என்ற இரண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இனி வரும் காலத்தில்தான் அது அதிகரித்து உச்சத்தை எட்டும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும், கொரோனா சார்ந்த தேவையான மருத்துவ முறைகளையும் கடைபிடிப்பது ஒன்றே நம்மை இந்த கொரோனா கிருமியிடம் இருந்து காப்பாற்றும்.

புதிய விடியல் கிடைக்கும் வரை விதிகளை கடைபிடிப்போம்!.