விதையானார் விவேக்!

நடிகர் விவேக் தமிழ் திரையுலகில் நகைச்சுவை ஜாம்பவான்கள் மத்தியில், சிரிக்க மட்டும் வைக்காமல் பலரையும் ஒரு நொடி சிந்திக்க வைத்தவர். அதுமட்டுமில்லாமல் பலர் மனதிலும் மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றவர். நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி சமூக ஆர்வலர்கள் பட்டியலில் முதலில் இருப்பவர். கலாம் மனதில் நீங்காத இடம் பிடித்த புண்ணியவான். இவர் நல்லவர் என்று எதை எதை வைத்து குறிப்பிடுவோமோ அவைகள் அனைத்தும் இவருக்கு பொருந்தும்.
90களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர். நகைச்சுவை நடிகராக பெயர்கொண்டு ஒரு சிந்தனைவாதியாக தான் வலம் வந்தார். அறியாமை, மூட நம்பிக்கை, போட்டி, பொறாமை, பேராசை போன்ற எண்ணங்களும் குணங்களும் ஒரு நல்ல மனிதனுக்கு தேவையில்லை என்பதை மிகவும் ஆழமாக திரையில் மக்களுக்கு விதைத்தவர்.

நகைச்சுவை என்பது திரையுலகை பொறுத்த வரையில் தன்னைத்தானே வருத்தி கொண்டு மற்றவர்களை மகிழ்விப்பதும், சகமனிதரை புண்படுத்தி அதை நகைச்சுவையாக திரித்து வழங்குவதுமாக தான் இருந்தது. சமீப காலமாக இரட்டை அர்த்தங்கள் கொண்ட நகைச்சுவைகள் சற்று தலைதூக்கியுள்ளது.
சூழ்நிலை காரணமாக சொந்த வாழ்க்கையில் பல்வேறு பணிகள் செய்திருந்தாலும், நடிகனாக வேண்டும் என்ற அவரது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். தான் ஒரு நகைச்சுவை நடிகர் என்றாலும் அதில் யாரையும் புண்படுத்தாமல் திரையில் எந்த கதாபாத்திரம் எடுத்துக்கொண்டாலும் அவரின் பணி சமூகத்தை சீர்திருத்துவதாகவே இருக்கும்.


உச்ச நட்சத்திரம் என்று பெயர் பெற்ற பிறகும் திரையில் மட்டுமல்லாது பொது வாழ்விலும் ஒரு மகானின் நிழல் போல் வாழ்ந்து வந்தார். கலாம் மீது கொண்ட பெருங்காதலால் அவரின் வழியில் பெருமையாக நடந்து வந்தவர். இளைஞர்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு ஊக்கமும் உதவியும் கொடுத்தவர். சமூகத்தை சீர்திருத்த புண்படுத்தாத வார்த்தைகளும், பூமிக்கு புத்துயிர் ஊட்ட லட்சக் கணக்கில் மரங்களையும் நட்டு வளர்த்து அவரது வாரிசுகளுக்கு மட்டுமல்லாது அடுத்த சில தலைமுறைகளுக்கும் விதைத்து சென்றுள்ளார். அவர் விட்டு சென்ற அனைத்தும் சிதைந்தாலும் மக்கி உரமாகவே மாறும்.
1961 நவம்பர் 19 ஆம் தேதி கோவில்பட்டியில் பிறந்து 2021 ஏப்ரல் 17ல் மறைந்த இவர் விதைத்த விதை நிச்சயம் விருச்சமாகும் என்ற நம்பிக்கையுடன் மீளாதுயில் கொண்டார்.