வனத்துக்குள் ஒரு விடுமுறை!

பள்ளிக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பமாகும் நிலையில், விடுமுறையை பெற்றோர்களும் குழந்தைகளும் இயற்கையுடன் அனுபவித்து மகிழ்வதற்கான ஒரு உத்வேகத்தை தருகிறது சத்குருவின் இந்த பகிர்வு! சத்குரு தனது இளமைக்காலத்தில் காடுகளில் தங்கியிருந்த நாட்களின் சுவாரஸ்ய அனுபவங்களை இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

சத்குரு : உங்களால் மரங்களின் ஓசை, தென்றல், நீர், இயற்கையின் சப்தங்களை அமைதியாகக் கேட்க முடியுமென்றால், உங்களால் போதுமான கவனம் செலுத்த இயன்றால், அபாரமான விஷயங்கள் உங்களுக்கு நிகழத் துவங்கும்.

தென்னிந்திய மலைக்காடுகளுக்குள் நான் பலமுறை சென்றிருக்கிறேன். அதிகபட்சம் 23 நாட்கள் வரை அங்கு தங்கி இருந்திருக்கிறேன், தன்னந்தனியாக. எந்த உதவியும் கிடையாது, அலைபேசிகள் அந்நாட்களில் கிடையாது, டார்ச் லைட் கூட கிடையாது. காட்டிற்குள் நுழைந்த நாலாவது நாளில் கைவசம் இருக்கும் உணவு தீர்ந்துவிடும். எட்டாம் நாளிற்குள், நான் வைத்திருந்த சட்டையும் குளிருக்கான ஆடையும் ஏதோவொரு விலங்கு விரட்டியபோது பாதி கிழிந்து விழுந்தது. யானை, புலி, சிறுத்தை மற்றும் பல விலங்குகளை நான் பார்த்திருக்கிறேன்.

இவை அத்தனையையும் மீறி, கடந்த காலத்தை அசை போட்டால், நம் மீது பலத்த தாக்கம் ஏற்படுத்துவது என்னவோ பூச்சிகள்தான். இருண்ட இரவில், பூச்சிகளின் இசைக் கச்சேரி அரங்கேறிக் கொண்டிருக்கும். அட ளிவிநி! நம்பமுடியாத அனுபவம். நம்பமுடியாத நேர அமைப்பு. ஒவ்வொரு நாளும் இரவு 2.15 மணிக்கு ஒரு கூட்டம் முடிக்கும், மற்றொரு கூட்டம் துவங்கும். அவர்களின் நேர கணக்கு அசாத்தியமானது. சரியாக குறிப்பிட்ட நொடிப்பொழுதில் ஒரு கூட்டம் நிறுத்தும், மற்றொரு கூட்டம் துவங்கிவிடும். உங்களுக்கு புரியாத ஏதோவொன்றை அவர்கள் பேசிக்கொள்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம். அவர்கள் வெறுமனே காட்டுக் கத்தல் கத்தவில்லை.

அங்கே சும்மா உட்கார்ந்து, அவர்களது சப்தத்தை கேட்டுக்கொண்டே, கேட்டுக்கொண்டே, கேட்டுக்கொண்டே இருந்தால்…. மெல்ல… அதில் ஒரு அமைப்புமுறை இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். இதுவரை மனித சமூகம் அடைந்திருக்கும் எந்தவொரு சிம்பனியையும்விட அது மகத்தானது. அவற்றை எல்லாம் விட மிகச் சிக்கலானது, மிகத் தீவிரமானது.

இயற்கையில் நம் விடுமுறை நாட்களைக் கழிப்பது எந்தவொரு மனிதனுக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு மிக மிக முக்கியம். உங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒரு வனத்திற்குள் நடந்து செல்லுங்கள், விடுமுறை விடுதிக்குள் அல்ல. ஒரு மலையில் வாழுங்கள், இயற்கைக்கு அவர்களைப் பரிட்சயப்படுத்துங்கள். இப்படிச் செய்யும் பட்சத்தில், உடலளவில் மனதளவில் ஆரோக்கியமான குழந்தைகளை மட்டும் நீங்கள் வளர்க்காமல், மிகுந்த நுண்ணுணர்வோடு கூடியவர்களாக, அற்புதமான மனிதர்களாக அவர்கள் வளர்வார்கள்.

நீங்கள் இயற்கையில் இருக்கும்போது, நீங்கள் யாருடைய மகன், யாருடைய மகள் என்பவை எல்லாம் பொருட்படாது. அனைவரும் அப்படியொரு அனுபவத்தை பெறுவது மிக மிக முக்கியம். இல்லையென்றால், நீங்கள் யார், எப்படிப்பட்ட மனிதர் என்பவை குறித்து போலிக் கற்பனைகளை நீங்கள் உருவாக்கிக் கொள்வீர்கள். மரணமும் வியாதியும் மட்டுமே அவர்கள் யாரென அவர்களுக்கு உணர்த்தும் நிலை ஏற்படும். விடுமுறை என்றால் திரைப்படங்களுக்கு செல்வது என்று அர்த்தமல்ல. விடுமுறை என்பது அர்ப்பமான பொழுதுபோக்குகளுக்கு மட்டுமல்ல. நீங்கள் யார் என்பதன் அடிப்படை வேர்களுடன் நீங்கள் தொடர்பில் இருப்பது மிக மிக முக்கியம்.