மத வழிபாட்டு தளங்களுக்கு விதித்த நேர கட்டுப்பாடுகளில் தளர்வுகள் செய்ய கோரிக்கை 

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு சில புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. அதில் மத வழிபாட்டுத்தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில், பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவரும், சமூக ஆர்வலருமான, முகம்மது ரஃபி,மத வழிபாட்டு தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நேர கட்டுபாட்டில் தளர்வு அளிக்க கோரி,தமிழக அரசுக்கு    கோரிக்கை  விடுத்துள்ளார்.

இது குறித்து அவர், பல்சமய நல்லுறவு நிர்வாகிகள் முகம்மது இஸ்மாயில், பாபுலால் ஆகியோருடன் இணைந்து,செய்தியாளர்களிடம் பேசினார். அதில் அவர் கூறியதாவது:

மத வழிபாட்டு தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நேர கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் தேவைப்படுவதாக கூறிய அவர்,குறிப்பாக வரும் 14 ஆம் தேதி  இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கும் சமயத்தில், இரவு 8 மணி வரை மட்டுமே வழிபாட்டுத்தலங்கள் செயல்பட வேண்டும் என்ற அறிவிப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக ரமலான் நோன்பு சமயத்தில்,இஸ்லாமியர்கள்  இரவு 8 மணி முதல் 10 மணி வரை சிறப்பு தொழுகைகள் செய்யும் இரவு நேர வழிபாடுகள் குறித்து கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்  எனக் கூறினார்.

மேலும் அதிகாலை, 3:30 முதல் 5.30 வரை, உணவு அருந்துவது மற்றும் அதிகாலைத் தொழுகை போன்ற வணக்கங்களுக்கு எந்த இடைஞ்சல்களும் இல்லாத வகையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகள் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

இதே போல பங்குனி,சித்திரை மாதங்களில் இந்து மதத்தினருக்கும்  பிரத்யேக வழிபாடு மாதமாக இருப்பதால் கோவில்களில் வழிபாடு செய்ய அனுமதிக்கும் வகையில்  தளர்வுகள் அறிவிக்க வேண்டுமாறு அவர் கேட்டு கொண்டார்.