துணை நடிகர் சம்பத் ராமிற்கு, “கலாபவன் மணி நினைவு” விருது  

காஞ்சனா மூன்றாம் பாகத்தில் அகோரி வேடத்தில் நடித்த பிரபல துணை நடிகர் சம்பத் ராம் கேரளாவின் கலாபவன் மணி நினைவு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்,மலையாளம் என தென்னிந்திய படங்களில் வில்லன், குணசித்திர நடிகர் என துணை நடிகர் வேடங்களில் நடித்து வருபவர் சம்பத் ராம். கடந்த 2019ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ்  இயக்கத்தில் வெளியான “காஞ்சனா 3” திரைப்படத்தில் சம்பத் ராம் “அகோரி” கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக “சிறந்த துணை நடிகர்-2019” க்கான “கலாபவன் மணி நினைவு விருது” கேரளாவில் இவருக்கு அறிவிக்கப்பட்டது. கொரானா முடக்கம் காரணமாக சிறிது தாமதமாக கலாபவன் மணி அவர்களின் பிறந்த நாளான 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி எளிய முறையில் கேரளாவில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறந்த துணை நடிகர் விருது பெற்ற சம்பத் ராம் விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கான விருதை,”கலாபவன் மணி சேவன சமிதி ” தொண்டு நிறுவனம் சார்பாக இஸ்மாயில் மற்றும் குழுவினர் நேரடியாக சென்னை வந்து சிறந்த துணை நடிகர் விருதை வழங்கி கவுரவித்தனர்.