மூளைச்சாவு  அடைந்தவரின்  உடல் உறுப்புகள் தானம்

ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த 59 வயதான ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஜீவானந்தம், வீட்டில் கீழே விழுந்து மூளைக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஆழ்ந்த கோமா நிலையில் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கடந்த மார்ச் 15  ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு  சிகிச்சை அளித்தபோது மூளையின் இருபுறமும் பெரிய கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவரைக் காப்பாற்றும் முயற்சியில் அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகும்  காப்பாற்ற முடியாமல், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

இந்நிலையில், அவரது மகன்  தனது தந்தையின் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார். இதனை ஜீவானந்தத்தின் குடும்பத்தினரும் முழுமனதோடு ஏற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து மூளை இறப்பை உறுதிப்படுத்துவதற்கான கட்டாய சட்ட செயல்முறை  மருத்துவமனையின் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டது,  தொடர்ந்து தமிழகத்தின் உறுப்பு மாற்று ஆணையத்திற்கு (TRANSTAN) உறுப்புகளை தானம் செய்ய குடும்பம் எடுத்த முடிவு குறித்து தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று  சிகிச்சைக்கான காத்திருப்பு பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு ஜீவானந்தத்தின் உறுப்புகள்  ஒதுக்கப்பட்டது.   அவரின்  கல்லீரல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இறுதி நிலை கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட 55 வயதான  ஒருவருக்கும், மேலும் அவரது ஒரு சிறுநீரகம்  மாற்று அறுவை சிகிச்சைக்காகவும்  பயன்படுத்தப்பட்டது.