தமிழகத்தில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், பிரதமர் சென்னை வந்த போது பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் இணைந்து கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர் எனவும் குறிப்பிட்ட சாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளளர் மசோதா நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்படும் என பிரதமர் உறுதியளித்து உள்ளதாகவும் தெரிவித்தார். மதுரையில் நடந்த தாமரை சங்கமம் மாநாட்டின் போதே இதனை மாநில பாஜக ஆதரித்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது தேவேந்திர குல மக்களின் அங்கீகாரம் மீட்கப்பட்டுள்ளது என்றார். தேர்தல் பணிகள் திட்டமிட்டு நடைபெற்று வருகின்றது என தெரிவித்த எல்.முருகன், வரும் 25 ம் தேதி அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கோவை வரும் பிரதமர் மோடி, பாஜக சார்பில் நடைபெறும் பிரச்சார கூட்டத்திலும் கலந்து கொள்ள உள்ளதாக கூறினார். 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள பாஜக இளைஞர் அணி மாநாட்டில் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்த அவர், பா.ஜ.க அதிமுக கூட்டணி ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், இரட்டை இலக்கத்தில்இருப்பார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். வெற்றிவேல் யாத்திரையின் மூலம் எல்லா கட்சிகளையும் வேலை தூக்க வைத்துள்ளதாக தெரிவித்த அவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு விலைவாசி  கட்டுக்குள் இருக்கிறது என பதிலளித்தார்.