மாண்பு என்பது யாதெனில்..

இந்திய அரசியல் ஜனநாயகம் என்றுமே பாராட்டுதலுக்கு உரியது தான். அதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ராஜ்யசபா எனும் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் தன்னுடைய அரசியல் முதிர்ச்சியைக் காட்டும் வகையில் ஒரு அற்புதமான உரையை நிகழ்த்தி இருக்கிறார். அதில் குறிப்பிடத் தகுந்த அம்சமாக, “நான் ஒரு இந்திய முஸ்லிம் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

உரையைக் கேட்டுக்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சிவசப்பட்டு கண்களில் நீர் பெருக அமர்ந்திருந்த காட்சி இன்னும் பலருக்கும் நினைவில் நிற்கும் ஒன்றாக இருக்கிறது.

இரண்டு தலைவர்களுமே தேசிய அரசியலில் பல ஆண்டு கால அனுபவமும், பல பதவிகளையும் பல சிக்கல்களையும் எதிர்கொண்ட அனுபவங்களை கொண்டவர்கள். சொல்லப்போனால் அரசியலில் எதிரும் புதிருமாக இயங்கியவர்கள். ஆனால் ஒரு போதும் தரம் தாழ்ந்ததில்லை. கருத்துகளை, கருத்துகளால் எதிர்கொண்டவர்கள்.

இந்தியாவின் உயர்நிலை அரசியலில் பல கோடி மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வுடன், பண்புடன் நடந்துகொண்டவர்கள். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது அவர் குஜராத் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் குலாம்நபி ஆசாத் காஷ்மீர் முதல்வராக இருந்ததையும் அப்போது தங்களுக்குள் நிலவிய நட்பையும் அந்த நேரத்தில் நடந்த சம்பவங்களை இந்தியர்களாக தாங்கள் இருவரும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

இது இந்திய அரசியலில் ஒன்றும் புதிதல்ல. இந்தியாவின் ஜனநாயக மாண்புகளில் ஒன்றாக இது எப்போதுமே தொடர்ந்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தி பங்களாதேஷ் போரின் போது செயல்பட்ட விதத்தை அன்று எதிர்க்கட்சி வரிசையிலிருந்த வாஜ்பாய் பாராட்டி ஆதரித்ததையும், நரசிம்மராவ் அப்போது எதிர்க்கட்சி வரிசையிலிருந்த வாஜ்பாய் மீது கொண்டிருந்த மதிப்யையும் மரியாதையையும் நாடு நன்கு அறியும்.

ஆனால், தமிழகத்தில் சில ஆண்டுகளாக இப்படி ஒரு நிலை இல்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்து காமராஜரை சட்டமன்றத் தேர்தலில் தோற்கடித்த அண்ணாதுரை அதற்காக வருத்தப்பட்டதையும், அது குறித்து கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று அறிவுறுத்தியதையும் நாடறியும். தனது தலைவராக தந்தை பெரியாரை ஏற்றுக்கொண்ட காரணத்தால் தான் தனியாக தொடங்கிய கட்சிக்கு தலைவரே இல்லாமல் பொதுச்செயலாளராக இருந்தபடி ஆட்சியைக் கைப்பற்றியவர் அவர்.

ஆனால், அதற்குப் பிறகு வந்த தமிழக அரசியல் தலைவர்களிடையே முன்பிருந்த அளவு அந்த பெருந்தன்மையான போக்கையும், மாண்பையும் காண முடியவில்லை. கருணாநிதி எம்ஜிஆர், கருணாநிதி ஜெயலலிதா என்று இரு துருவ அரசியல் இங்கு நடந்ததோடு ஒரு இணக்கமான, போக்கைக் காணமுடியவில்லை. இது தலைமை தொடங்கி கீழ் மட்டம் வரை எதிரொலித்தது. இப்போதும் தொடர்வதாகவே தோன்றுகிறது.

முன்பிருந்த அரசியல் முதிர்ச்சியோ, பொது விஷயங்களில் ஆர்வமோ இல்லாதவர்களாக நமது சமூகம் மெல்லமெல்ல மாறிவருகிறது. குறிப்பாக எதிர்கால தலைமுறை எனப்படும் இளைஞர்கள் இந்த ஜனநாயக செய்திகள் மற்றும் மாண்புகள் குறித்து அறிந்துகொள்ள ஆர்வமும் நேரமும் இல்லாதவர்களாகவே உள்ளார்கள். அது ஒரு ஜனநாயக நாட்டுக்கு நல்லதல்ல. சமூக வலைத்தளங்களில் தகாத வார்த்தைகளும், கருத்துகளும், அவதூறுகளும் வலம் வரும் நேரத்தில் அதற்கு எதிர்வினையாற்றி சமூகத்தில் நல்லிணக்கத்தை பேண வேண்டியது பொறுப்புள்ள தலைவர்கள் மற்றும் குடிமக்களின் கடமையாகும்.

இந்த நிலையில் தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத்தும் மாநிலங்களவையில் நடந்துகொண்ட முறை மாண்புக்குரியதாகிறது. ஏனென்றால் பெரும்பாலான இன்றைய இளைஞர்களின் வழிகாட்டுவோர்களாக சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்கள் இருந்தாலும், நாட்டின் உயர்ந்த இடத்தில் அமர்ந்து முடிவெடுத்து வழிகாட்டும் பொறுப்பில் இருப்பது அரசியல் சார்ந்த தலைமைகளே ஆகும்.

அந்த வகையில் பொதுவெளியில் நமது அன்றாட நடைமுறைகளை மாண்பு மிக்கதாக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த மாண்புகளை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றித்தர வேண்டிய கடமை நமக்கு உண்டு. அந்த மாண்பு மிக்க நடைமுறை எனும் தென்றல் காற்று தமிழகத்திலும் வீசட்டும். அந்த நறுமணம் தமிழர் இல்லந்தோறும் கமழட்டும். உலகத்துக்கு பண்பாட்டுத் தளத்தில் பல செய்திகளை உருவாக்கித் தந்த தமிழ்நாடு தனது மாண்புகளை மீண்டும் உயர்த்திப் பிடிக்கட்டும். வள்ளுவர் கூறியதை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்வோம்:

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்ப காய் கவர்ந்தற்று.