காதலர் தினம்; எதிர்ப்பும்… ஆதரவும்…

பல நூறு ஆண்டுகளுக்கு முன் ’வேலண்டைன்ஸ்  டே’ எனும் வெளிநாட்டில் தோன்றிய கொண்டாட்ட தினம் நம் நாட்டில் வெகு சில ஆண்டுகளாய்  காதலர் தினமாக பெரும்பாலும் இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளுக்கு  ஆதரவாக சிலரும், எதிர்ப்பாக சிலரும் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். மேற்கு இந்தியாவில் இதற்கான எதிர்ப்பை எதிர்ப்பாளர்கள்  மிக தீவிரமாய் செலுத்துவதை நாம் அனைவரும் அறிவோம்.

தமிழகத்தை பொறுத்தவரை எதிர்ப்பாளர்களின் நிலைப்பாட்டை அறியவும், ஆதரவாளர்கள் ஏன் ஆதரவு வழங்குகின்றனர் எனவும் தெரிந்து கொள்ள முக்கிய பிரமுகர்களிடம்   நாம் நிகழ்த்திய நேர்காணலின் தொகுப்பு உங்களுக்காக:-

காதலுக்கு அல்ல, காதலர் தினத்திற்கே எதிர்ப்பு!

அர்ஜுன் சம்பத்,

தலைவர், இந்து மக்கள் கட்சி

 

நீங்கள் காதலர் தினத்தை ஆதரிப்பவரா அல்ல எதிர்ப்பவரா? ஏன் ?

நாங்கள் காதலர்  தின எதிர்ப்பாளர்கள்…  பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு  வேலண்டைன் எனும் ஒரு பாதிரியார்  ரோம் நாட்டின் சட்டத்திற்கு புறம்பான  காதலுக்கு துணைநின்றார், அதற்காக  அவர் தண்டிக்கப்பட்டார். அவரின் நினைவாய் இந்நாளை கிறிஸ்தவ மதத்தை சார்ந்த ஒரு பிரிவினர் மட்டுமே ’வேலண்டைன்ஸ்  டே’ யாக கொண்டாடி வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாய் இந்த வேலண்டைன்ஸ்  தின கொண்டாட்டத்தை இங்கு  ’காதலர் தினம்’ என்ற பெயரில்  பல்வேறு விதமான பண்பாடு சிதைவு, கலாச்சார சீரழிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

உண்மையில் நம் தமிழ் சமூகம், இந்திய சமூகம் காதலை போற்றுகின்றது. ”காதல்,காதல்,காதல்; காதல் போயிற் சாதல்,சாதல்,சாதல்” என பாரதியார் குயில் பாட்டில் கூறியிருக்கின்றார். அகநானூறு பாடல்கள்  நம் பண்டைய தமிழர்களின் காதலையும் வீரத்தையும் பற்றி நமக்கு சொல்கின்றது.

நம் சமூகத்தில் காதல் என்பது மனைவியோடு பகிர்ந்துகொள்வதாகும். அப்படிப்பட்ட காதலை புனிதமாகவே பார்க்கின்றோம். காதலை போற்றக்கூடிய, கொண்டாடக்கூடிய ஒவ்வொரு நாளையும் காதலர் தினமாக கடைபிடிக்கக்கூடிய நம் நாட்டில்  ஒரு வியாபார உள்நோக்கத்துடன், கலாச்சார மற்றும் பண்பாடு சீரழிவு உள்நோக்கத்துடன் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதே போல தான் ஆங்கில புத்தாண்டும். அது நம் தமிழர் புத்தாண்டு அல்ல. அது ஆங்கிலேயர்களின் முறை.

நட்சத்திர விடுதிகளில் கேளிக்கை, மது விருந்து ஆட்டம் பாட்டம் என இந்த நாளில் (காதலர் தினம்) இளைஞர்கள் வழிதவறி செல்லக்கூடிய சூழல் ஏற்படுகின்றது. எனவே இந்த நாளை நாங்கள் எதிர்க்கின்றோம்.

கலாச்சார சீரழிவு, பண்பாடு சிதைவேற்படுத்தும் முறைகளுக்கு எங்கள் எதிர்ப்பே தவிர,  உண்மை காதலை நாங்கள் போற்றுகின்றோம்.

எப்படிப்பட்ட காதல் ஏற்கத்தக்கது ?

காதல் ராமருக்கும் -சீதையுக்கும் இருந்ததை போல் இருக்க வேண்டும். ’ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதே நம் நாட்டின் பண்பாடு. இதை சிதைக்காத வண்ணம் காதல் இருக்கவேண்டும். ’காதல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்’, இதை பற்றி  மிதவாத கோட்பாடுடையவர்கள் அதிகம் பேசுவார்கள் ஆனால் இப்படிப்பட்ட சிந்தனைகள் சமூக, குடும்ப அமைப்பை சீர்குலைத்து விடுகின்றது.

வாலிப வயதில் பரஸ்பரம் வரக்கூடிய பருவ ஈர்ப்பை காதல் என தவறாக புரிந்து கொள்ள  கூடாது. திருமணத்திற்கு ஒரு தகுந்த வயது உள்ளது. தன்  சொந்த காலில் நிற்கின்றபோது  தாராளமாக  காதலியுங்கள், திருமணம் செய்யுங்கள். உங்களை யாரும் ’செய்யாதீர்’ என சொல்லப்போவதில்லையே.

காதல் இல்லாமல் யார்  இருக்க முடியும்? யாராலும் இருக்க முடியாது ஆனால் அதற்கென சில நெறிமுறைகள் உள்ளது. காதலுக்கும் காமத்திற்கும் சின்ன வேறுபாடுதான் உள்ளது. பருவ ஈர்ப்பினால் இளைஞர்கள் இதை காதலென நினைத்து எதிர்காலத்தை பாழாக்கிக்கொள்ள வேண்டாம்.  பெற்றோர்கள் தங்களது மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், கனவையும் பற்றி இளைஞர்கள் சிந்திக்கவேண்டும்.

காமம், காதல், திருமணம் போன்ற விஷயங்கள் அனைத்தும் ஒருவரின்  எதிர்காலத்தோடு தொடர்புடையவை. காதல் உணர்வு வேண்டாம் என கூறவில்லை, கண்ணியத்துடன் தகுதியோடு இருக்கக்கூடிய காதலுக்கு எப்போதும் எதிர்ப்பில்லை.

இளைஞர்களுக்கான உங்கள் செய்தி

இளமை பருவத்தில் வரக்கூடிய கவனச்சிதறல்களில் இளைஞர்கள் சிக்கிவிடக்கூடாது  என விரும்புகிறோம்.உலகத்திலேயே இளைஞர்களை அதிகம் கொண்டது நம் நாடு தான். இளைஞர்கள் வீரம், விவேகம், ஆண்மை என்பதையெல்லாம் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.  இளைஞர்களின் சக்தி ஒரு தேசிய சக்தியாக உருவாக வேண்டும் என விரும்புகின்றோம்.

நம் நாட்டில் சுவாமி விவேகானந்தரின்  பிறந்தநாளை தான் நாம் இளைஞர்கள் தினமாக கொண்டாடுகிறோம். அவர் இளைஞர்களின் அடையாளமாக இருக்கின்றார்.  அவர் வழியை பின்பற்றுவோம்.

காதலை நம் மகா கவி பாரதி போல எவரும் போற்றியதில்லை. காதலென்பதை சரியாக புரிந்து கொள்ளவேண்டும். காதல், நம் குடும்ப அமைப்பை வலிமைப்படுத்துவதாய் இருக்கவேண்டும் என விரும்புகின்றோம்.

இளையவயதில் பெற்றோரையும், எதிர்காலத்தையும் மனதில் கொண்டு கவன சிதறல்களை தாண்டி, முதலில் சாதிக்கவேண்டும். நம்முடைய ஹிந்து சமூகத்தில், இந்திய சமூகத்தில் வாழ்க்கை துணை என்பவர் நம்மில் பாதி, நாம் செய்யும் தர்மத்தில் பாதி. எனவே அப்படி பட்ட ஒருவரை தேர்ந்தெடுக்கும் பொது கவனமாக இருக்க வேண்டும். இதையெல்லாம் இளைஞர்கள் புரிந்து கொண்டு செயல் பட வேண்டும்.

 

காதலர் தினம் சீர்கேடா?

-கு.ராமகிருட்டிணன்,

பொது செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

 

காதலர் தினத்தை ஆதரிப்பவரா நீங்கள்? அப்படியென்றால் ஏன் ஆதரிக்கிறீர்கள்?

நாங்கள் காதலர் தினத்தை ஆதரிக்கக் கூடியவர்கள். இது இயற்கையான உணர்வு. உயிர்கள் தோன்றிய காலத்திலிருந்து நிகழக் கூடிய இந்த காதல் என்பது மனித சமூகத்தில் தவிர்க்க முடியாதது. இது அனைத்து சமூகத்திலும், குடும்பங்களிலும், அனைத்து நிலைகளிலும் இருக்கக்கூடியது. இதனை சமூகத்தில் மதவாதிகள், சாதியவாதிகள் எதிர்க்கின்ற காரணத்தால் நாங்கள் பொதுத் தளத்தில் விளம்பரப்படுத்திக் கொண்டாடுகிறோம்.

காதலர் தினம் சமுதாய சீர்கேடு என்கின்றார்களே?

சாதிய கட்டுமானம் உடைந்துவிடும் என்று அஞ்சுவோர் சொல்லக்கூடிய வார்த்தை தான் இது. இதனால் எந்த நிலையிலும் சமுதாயச் சீர்கேடு நடக்காது. வீடுகளில் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், சமூகம் அங்கீகரிக்காத நிலையில் வயது வந்த ஆணும், பெண்ணும் பொது இடங்களில் கூடி தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர்.  ஆணும், பெண்ணும் இணைந்து நின்று பேசிக் கொண்டிருப்பதோ, அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதோ கூட இந்த சமூகத்தில் சமூக சீர்கேடு என்று கூறுவது நியாயமில்லை.

தோல்வியில் முடிந்த காதல் திருமணத்தை சில பெற்றோர்கள் உதாரணம் காட்டி பேசுகின்றார்களே?

அனைத்து காதல் திருமணங்களும் தோல்வியடைவது என்பது இல்லை. நாங்கள் நடத்தி வைத்திருக்கக்கூடிய திருமணங்களில் கூட 95 சதவீதம் பேர் வெற்றிகரமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களிலும் தோல்விகள் ஏற்படுகின்றது. பெற்றோரால் நிச்சயக்கப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்களே பெரும்பாலும் நீதிமன்றங்களில் விவாகரத்து கோரி செல்கின்றனர்.

கலப்பு திருமணம் செய்து கொள்கின்றனரே, அதை ஆதரிப்பீர்களா?

நிச்சயமாக. கலப்பு திருமணம் என்பது சாதி மறுப்பு திருமணம். மனிதர்களுக்குள் நடக்கும் திருமணம் கலப்பு திருமணம் அல்ல சாதி மறுப்பு திருமணம் அல்லது மத மறுப்பு திருமணம் என்கிறார் பெரியார்.

அப்படியான திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உதவுவீர்களா?

ஆம். கருத்து வேறுபாடு உள்ளவர்கள் எங்களிடம் வருவார் கள். அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். பணப் பிரச்சனை, பெற்றோர் அழுத்தம், சமுதாயத்திற்கு பயந்து பிரிந்து செல்பவர்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்குகிறோம்.

 

காலப்போக்கில் கரைவது காதல் அல்ல

 

சோனாலி பிரதீப்,

நிறுவனர்,

அம்மா சேவா அறக்கட்டளை.

 

காதலர் தினத்திற்கு உங்கள் ஆதரவு உண்டா?

இல்லை, இந்த நாளை நான் எதிர்க்கிறேன். வெளிநாடுகளில் கொண்டாடப்படும் இந்த நாள் 1990களில் நம் நாட்டிற்குள் நுழைந்தது. மாணவ சமுதாயத்திடம் இந்நாள் ஒரு விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது, அவர்களுடைய மனநிலையை வேறுவழியே எடுத்து செல்ல காரணமாக இருக்கின்றது.

அன்பும் காதலும் நம் சமுதாயத்திற்கு நிச்சயம் தேவை தான் ஆனால் இந்த காதலர் தினத்தில் கொண்டாட்டம் என்ற பேரில் நடைபெறும் நிகழ்வுகள் சமுதாய சீர்கேட்டிற்கு வழி வகுக்கின்றதாக அமைவதால் நான் இந்நாளை எதிர்க்கிறேன்.

எல்லா நாளையுமே நம் அன்பிற்குரியவர்களுக்கு அர்பணிக்கலாமே! நாம் தமிழ் நாட்டில் வாழ்கிறோம், நமக்கென ஒரு கலாச்சாரம் உள்ளது, அதை மறந்துவிடக்கூடாது.

இந்த ஒரு நாளை எதிர்ப்பதால் என்ன மாற்றம் நிகழ்ந்து விடும்?

ஏதோ ஒரு நாள் காதலை, அன்பை கொண்டாடுவது  நம் கலாச்சாரம் அல்ல என்று இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதை அவர்களிடம் வெளிப்படுத்த, எடுத்து சொல்ல, இந்த எதிர்ப்பு உதவும்.

காதல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

‘இதுதான் காதல்’ என்று வரையறைக்குள் காதலை கொண்டுவர முடியாது. ஆனால் எதை  செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்ற மனதளவில் தெளிவு கொண்ட பருவத்திற்கு பின் அவரவர் காதல் தேவையா தேவையில்லையா என தீர்மானித்து கொள்ளட்டும்.

காதல் ஏதோ காலப்போக்கில் கரைந்து போய்விடுவதாய்  இருக்கக்கூடாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஆழமாய் உறுதியாய்  இருக்க வேண்டும்.  ஏதோ ஒரு சில வயதில் வருவது தான் காதல் என்பது கிடையாது. இதையெல்லாம் புரிந்து கொள்ள தெளிவான மனம் வேண்டும்.

இப்படி பட்ட தெளிவை இளைஞர்களிடம் ஏற்படுத்த பெற்றோரின் வளர்ப்பிற்கு ஒரு முக்கிய பங்கு இருக்கின்றது. அதே போல் நம் பாடத்திட்டத்திலும் கவனத்தை சிதறாமல் இருக்கும் வழிமுறைகள், மனநிலையை சமன் செய்யும் வழிகள் மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை  மாணவர்களிடம் சேர வழிசெய்தால்  நிச்சயம் வலுவான, தெளிவான மனம் கொண்டவர்களாக இளைஞர்கள் இருப்பார்கள் என நம்புகிறேன்.