யாருக்குத் தேவை முழு உடல் பரிசோதனை?

யார், யார் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை முழு உடல் பரிசோதனை மையத்தின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஜோசப் விளக்கமளிக்கிறார்.

யார், யாரெல்லாம் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்?

பல்வேறு நோய் அறிகுறி உள்ளவர்கள், நோய் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிய விரும்புபவர்கள், புகைப் பிடிப்பவர்கள், மது குடிப்பவர்கள், சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளவர்கள், எந்த நோய் இல்லாவிட்டாலும் 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் துவக்க நிலை மற்றும் முற்றிய நிலையில் உள்ள நோய்களைக் கண்டறிய முடியும். முழு உடல் பரிசோதனை ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் உடனே அறிவிக்கப்படுகிறது.

முழு உடலில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள்…

பொதுவாக இரத்தம், சிறுநீர், மலம், மார்பக எக்ஸ்ரே, காது, மூக்கு, தொண்டை, பல், கண் பரிசோதனைகள், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஈசிஜி, டிஎம்டி, எக்கோ கார்டியோகிராம். மேமோகிராம், ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் உள்ளன. நோயாளியின் பழக்கவழக்கங்கள், சந்தேகங்கள், அறிகுறிகளுக்கேற்ப பரிசோதனைகள் விரிவடையும்.

பரிசோதனைகளில் என்னென்ன நோய்களை கண்டறியலாம்?

இரத்த பரிசோதனையில் இரத்த சோகை, இரத்தப் புற்றுநோய் பாதிப்பு, நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு அளவு கண்டறிவதன் மூலம் இதயத்தின் தன்மையைக் கண்டறியலாம். எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் புரோன்சிட்டிஸ் பரிசோதனை மூலம் நுரையீரல் பாதிப்பு, நுரையீரல் புற்றுநோய் மற்றும் நிமோனியா பாதிப்புகளைக் கண்டறியலாம். இதன் மூலம் ஏற்பட வாய்ப்புள்ள மாரடைப்பு, பக்கவாதத்தையும் கண்டுபிடிக்கலாம். மேமோகிராம் பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோய் கண்டறியலாம். சர்க்கரை பரிசோதனை மூலம் நீரழிவு நோய், இரத்த அழுத்த அளவு பரிசோதனையில் இரத்தக் கொதிப்பு, கொழுப்பு அளவு மூலம் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு மற்றும் மாரடைப்பிற்கான வாய்ப்புகள் கண்டறியலாம். இசிஜி, டிஎம்டி (ட்ரெட் மில் டெஸ்ட்) மற்றும் ஆஞ்சியோ மூலம் மாரடைப்பு நோய் கண்டுபிடிக்கலாம்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கல்லீரல் இயக்கம், கொழுப்பு படிந்த கல்லீரல், கல்லீரலில் ஹெபடைடீஸ் பாதிப்பு, கல்லீரலில் சிரோசிஸ் மற்றும் புற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறியலாம். மேலும் இத்தகைய பரிசோதனை மூலம் பித்தப்பை கற்கள், குடல் மற்றும் குடலுக்கு வெளியே உள்ள பாகங்கள், கிட்னி, மூத்திரப்பை, அப்பகுதிகளில் பிராஸ்டேட் புற்றுநோய் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய், கர்ப்பப்பை ஆகியவற்றில் சாதா கட்டி முதல் புற்றுநோய் கட்டிகளைக் கண்டறியலாம். பரிசோதனையில் கண்டறியப்படும் நோய்களுக்கேற்ப துறை ரீதியான மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் உரிய சிகிச்சைகள் மேற்கொண்டு குணம் பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு, முழு உடல் பரிசோதனை மையத்தின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஜோசப், கே.எம்.சி.எச்.மருத்துவமனை, அவினாசி ரோடு, கோவை.

மொபைல்: 98940-08800, இ-மெயில் : drjoseph@kmchhospitals.com ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.