‘‘நம் மண்ணின் இசை என்றைக்கும் மாறாது’’

பொதுவாக ஒரு திரைப்படத்தில் அதன் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு ஆகியவற்றிற்கு உயிர் கொடுப்பது இசை. இசையால்தான் ஒரு படம் முழுமை பெறுகிறது என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறாக உலக சினிமாக்கள் காலம்காலமாக திரைப்பட இசையமைப்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. நம் தமிழ் திரையுலகில் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி சகோதரர்கள் தொடங்கி ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் வரைக்கும் இசைத்துறையின் வளர்ச்சியை காண முடிகிறது. பல வெற்றிக் கனவுகளுடன் இளம் சாதனையாளர்கள் தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று அனுதினமும் போராடுவதுண்டு. ஆனால் அதில் வெற்றி காண்பவர்கள் சிலரே.

தன் திறமையை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்பவனே சிறந்த புத்திசாலி. அதனையே முழு மூச்சாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும், ரிச்சி, நிமிர் போன்ற படங்களின் இளம் இசையமைப்பாளர் அஜினிஷ் லோக்நாத், நம்முடன் பகிர்ந்து கொண்ட சில சுவாரசியமான தகவல்களைக் காண்போம்.

‘‘நான் இசை குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பா, அம்மா இரண்டு பேரும் நன்றாக பாடுவார்கள். அவர்களைப் பார்த்து எனக்கும் சின்ன வயதில் இருந்தே இசை மீது ஒரு தனி ஆர்வம் வந்துவிட்டது. அதனால்தானோ என்னவோ நமது இசை ஜாம்பவான்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரது பாடல்கள் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது என்றுகூட சொல்லலாம். எனது இசை மீதான பக்தியைப் புரிந்து கொண்ட பெற்றோர் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினர்.

சின்ன சின்ன இசையைக் கூட அழகாய் எனக்குச் சொல்லிக் கொடுத்து, நீ நிச்சயமாக இசை அமைப்பாளராக வேண்டும் என்று எனக்கு ஆர்வமூட்டினர். இந்நிலையில் கன்னடப் படங்களுக்கு இசை அமைக்கும் சூழல் ஏற்பட்டது. என்னை மேம்படுத்திக்கொள்ள எனக்குள் இருக்கும் இசையைத் தேட ஆரம்பித்தேன். நான் பணியாற்றும் ஒவ்வொரு படத்துக்கும் பல வித்தியாசமான இசை இருக்க வேண்டும் என்பது என் கருத்து. குரங்கு பொம்மை இயக்குநர் நிதிலன், நான் இசையமைத்த கன்னடப் படமான ‘உள்ளடுவரு கண்டதே’ படத்தைப் பார்த்துவிட்டு என்னை அவரது படத்துக்கு இசை அமைக்க சொன்னார். விமர்சன ரீதியாக எனக்கு நல்ல பெயர் கிடைத்தது.

அதற்குப் பிறகு நிவின் பாலி நடித்த ரிச்சி படத்துக்கு இசையமைத்தேன். ரிச்சி படத்தில் வரும் புலி ஆட்டம் இசை எனக்கு பேரும் புகழும் பெற்றுக் கொடுத்தது. கன்னடப் படமான ‘உள்ளடுவரு கண்டதே’ படத்தின் கதையை எடுத்துக்கொண்டு சில மாற்றங்கள் அமைத்து ரிச்சி தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் வரும் புலி ஆட்டதின் இசை தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆற்காட்டில் இருக்கும் தப்பை அடிக்கும் கலைஞர்களை வைத்து தப்பை அடித்து அந்த இசையைப் பதிவு செய்து சினிமாவுக்கு என்ன தேவை என்று புரிந்துகொண்டு படத்தில் சேர்த்தோம். அந்த புலி ஆட்டத்தின் இசைத்தொகுப்பைத் திரையில் பார்த்தபோது நம் மண்ணின் இசை என்றைக்கும் மாறாது என்பதை உணர்ந்தேன்.

அதற்கு பிறகு நிமிர் படம் எனக்கு இன்னொரு திருப்புமுனையாக அமைந்தது. பல வருடங்களாக இந்திய சினிமாவில் கொடிகட்டி பறக்கும் இயக்குநர் பிரியதர்ஷன் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. மெலடி சார்ந்த பாடல்களுக்கு என்றும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். அதனால்தான் இளையராஜா, ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன. அதுபோன்ற பாடல்களைக் கொடுக்க நானும் முயல்வேன்.

தற்போது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மூன்று மொழிகளில் இசை அமைத்து வருகிறேன். 2018 ஆம் ஆண்டு புதுமையான இசையோடு உங்களைச் சந்திப்பேன். அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்’’.

– பாண்டியராஜ்.