‘‘மலர் சாகுபடியை விரும்பும் விவசாயிகள்’’

வணிக மலரான ரோஜா, மல்லி, குண்டுமல்லி, செவ்வந்தி, சாமந்தி, கோழிகொண்டை போன்ற சாகுபடியை இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புவதாகக் கூறுகிறார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மலரியல் மற்றும் நில எழிலூட்டும் துறை பேராசிரியர் டாக்டர் கண்ணன். இதுகுறித்து அவர் கூறிய சுவாரசியமான தகவல்கள்:

மலரியல் மற்றும் நில எழிலூட்டும் துறை?

1972ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 100 வருடம் பழைமை வாய்ந்த துறை இதுவாகும். இத்துறைச் சார்ந்த கல்வி வழங்குதல் மற்றும் மலரியல் துறை ஆராய்ச்சி செய்வது இத்துறையின் முக்கிய நோக்கமாகும். மலர் சாகுபடி குறித்த சந்தேகங்களுடன் வரும் விவசாயிகளுக்கு அனுபவமிக்க அலுவலர்கள் மூலம் உரிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

இத்துறை மூலம் நடத்தப்படும் ஆராய்ச்சிகள்?

மல்லி, முல்லை, ஜாதிமல்லி, செவ்வந்தி, செண்டு மல்லி, சம்பங்கி, கனகாம்பரம், வாடாமல்லி, கோழிக்கொண்டை, கள்ளி வகை செடிகள் குறித்து ஆராய்ச்சிகளும், மேலும் இதன் சாகுபடிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம். இந்த தாவரவியல் பூங்காவில், கிட்டத்தட்ட 800 வகை மரம், செடி, கொடிகள் மற்றும் அழகிற்காக வைக்கப்படும் செடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அத்துடன், இவ்வகை செடி, கொடி வகைகளை விற்பனையும் செய்து வருகிறோம். இங்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

வணிக மலர்களில் அதிகம் விற்பனையாகும் மலர்கள்?

மலர் பயிர்களில் மல்லி, ரோஜா ஆகியவை விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தக் கூடியவை ஆகும். மற்ற மலர்களைவிட இவை இரண்டையுமே மக்கள் அதிகம் உபயோகிக்கின்றனர். அதனால், மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் இம்மலர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். மேலும், இன்றைய இளைஞர்கள் மாடித்தோட்டங்கள் அமைத்து அதில், அழகு செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்காக இங்கு வரும் மாணவர்களுக்கு மாடித்தோட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தோட்டக்கலையில், பழத்துறை, காய்கறி, வாசனை மற்றும் மலைத்தோட்டப் பயிர்கள், மலரியல் மற்றும் எழிலூட்டும் மலர்கள் பற்றி கல்வியை வழங்குவதுடன், ஆராய்ச்சியும் மேற்கொண்டு வருகிறோம்.

உலர்ந்த மலர்கள் மூலம் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள முடியுமா?

நிச்சயமாக. பொதுவாகவே மலர்கள் காய்ந்து உலர்ந்து போய்விட்டால் அவைகளை குப்பைகள் என்று வீசி விடுகிறோம். ஆனால் அவைகளைக் கொண்டும் வருமானத்தை ஈட்ட முடியும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. மேடை அலங்காரம் செய்தல், பூச்செண்டு தொடுத்தல், மேலும் அவைகளில் வண்ணங்கள் பூசி அழகுப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்வது குறித்தும் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறோம். இவைகள் வீட்டை அலங்கரிப்பதுடன், நம் பொருளாதாரத்திற்கும் பேரூதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே தாவரங்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு நிலையும் நமக்கு பயன்படக் கூடியவையே.