அருவி – நவயுக காளி

உங்களுக்கு வாழத் தெரியுமா? நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பது சரியான வாழ்க்கையா? ஒரு படத்தின் மூலம் இக்கருத்தைச் சொல்ல முடியுமா? என்று ஒரு கேள்வி இருப்பின் அதற்கு சரியான விடையைத் தருகிறாள் ‘அருவி’.

ஏன் இன்னும் இப்படத்திற்கு தடை கேட்டு எந்தக் கட்சியும், மத, ஜாதி சங்கங்களும், ரசிகர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை? வழக்குத் தொடுக்கவில்லை? என்பதுதான் 2017 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஆச்சரியம். ஏனெனில், நாம் வாழும் இந்த நடப்பு நவ நாகரிக (?!) சமூகத்தை எல்லாவிதத்திலும் சாடியிருக்கிறது இப்படம். கல்வி, அரசியல், மதம், பெரும் வியாபார முதலாளிகள், ஊடகங்கள், அதன் விளம்பரங்கள், ஏன்? திரைத்துறையையும் விட்டுவைக்கவில்லை. அனைவரையும் சந்திக்கு இழுத்து சவுக்கடி கொடுக்கிறாள் இந்த நவயுக காளி ‘அருவி’.

ஒரு பெண் இந்த சமூகத்தில் தனியாக வாழ முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாகக் காட்சிப்படுத்துகிறது இப்படம். அத்துடன், பெண்மையை, அந்த அற்புதப் படைப்பை அழகாகவும் காட்சிப்படுத்துகிறது. ஒரு பெண், காயாக, கனியாக, பூவாக மலர்வதை, அவளின் சின்னசின்ன ஆசைகளை, அந்த பெண்ணைப் பெற்ற தகப்பனின் உணர்வுகளைக் காட்சிகளில் அழகாக மலர வைக்கிறார் இயக்குநர். ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை இவ்வளவு தூரம் வேறு எந்தப் படமும் வெளிப்படையாக சொன்னதில்லை. அவ்வளவு அழகான காட்சியமைப்புகள். இதுவரை கேமராவில் அழகியலைப் (Aesthetic) படைத்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள். ஆனால் காட்சிகளில், நடிப்பில், வசனங்களில் அழகியலைக் கொண்டுவந்த இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்தான் என்பது மிகையே அல்ல.

திரைத்துறையினர் மட்டுமல்லாது அனைவரும் கொண்டாடும் அற்புதப் படைப்பு ‘அருவி’. ஒரு அழகான குடும்பம், ஆனந்தமயமான வாழ்க்கை என்று சென்றுகொண்டிருக்கும் தருணத்தில், பெற்றவரின் கோபத்திற்கு ஆளாகிறாள் தவறே செய்யாத இளம்பெண். கொடிய நோய் கொண்ட அப்பெண்ணை இதுவரை தேவதையாகக் கொண்டாடிய அக்குடும்பத்தினரே வீட்டைவிட்டு வெளியே துரத்துகின்றனர். தனியாக வாழ எத்தனிக்கும் அந்த இளம்பெண்ணை, அவர் வாழும் சமூகத்தைச் சேர்ந்த மூன்று வெவ்வேறு பாதையைச் சேர்ந்த நம்பிக்கைக்குரிய நபர்கள் பலாத்காரம் செய்கின்றனர். அவர்களைத் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தி, அதில், பலாத்காரம் செய்ததற்காக அவர்கள் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனப் கேட்கிறாள் அந்த இளம்பெண். ஆனால் அந்த நிகழ்ச்சி இயக்குநர், அவளது பிரச்னையைப் பெரிதுபடுத்தி, அதில் விளம்பரம் தேடி புகழடைய நினைக்கிறார். நிகழ்ச்சித் தொகுப்பாளர், அந்தப் பெண்ணிற்கு மன்னிப்பு பெற்றுத்தருவதற்கு பதிலாக, அவரையே சாடுகிறார், திட்டுகிறார், மிரட்டுகிறார். அப்போது அந்தப் பெண் தன் நியாயத்தை பறைசாற்ற அகிம்சையை கையில் எடுக்கிறாள். பின்னர் அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதே கதை.

இது பாதிக் கதைதான். இன்னும் மறுபாதி, சமூகத்தின் முகத்திரையைக் கிழிக்கும் காளியின் ருத்ரம். கதையின் நாயகி அதிதி பாலன், நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். அதற்கும்மேல், ஓர் பெண் போராளி எப்படியிருப்பாள் என்பதைத் தெளிவாகக் காட்டியிருக்கிறார். திரையில் பெண்கள், அழகுப் பதுமையாக, ஆபாச சின்னமாக, வக்கிரங்களின் வண்ணமாக வந்துபோய்க் கொண்டிருக்கும் வேளையில், அருவியாக பாய்ந்தோடியிருக்கிறார் அதிதி (நடிகை என்று எளிய வார்த்தையில் அதிதியை இங்கே குறிப்பிட முடியாது).

ஒளிப்பதிவு, பிற நடிகர்கள் தேர்வு, அவர்களின் இயல்பான நடிப்பு, பாடல் வரிகள், இசை, தொகுப்பு என இன்னபிற எல்லாமே கதைக்கேற்ற கவிதைகள். எதுவும் குறைவில்லை. நிறைவான படைப்பு.

நுகர்வு கலாச்சாரம் எவ்வாறு நமது வாழ்க்கையை அடியோடு மாற்றிப் போட்டிருக்கிறது எனும் கதையம்சத்துடன் வெளிவந்திருக்கும் ‘வேலைக்காரன்’, பெருவாரியான ஜனரஞ்சக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல், ‘இப்போதுதான் பீட்சா சாப்பிடவே ஆரம்பித்திருக்கிறேன். அதுக்குள்ள நிறுத்தச்சொல்லி அறிவுரை சொல்லறானுங்க’ என்று விமர்சிக்கப்படுகிறது. அதே ரசிகர்கள், அருவியைப் பார்த்து திகைத்துப்போய், வாயடைத்துப் போகிறான். பலர் உணர்ச்சிவசப்பட்டு, கைதட்டுகிறார்கள், விசிலடிக்கிறார்கள். இன்னும், ஒட்டுமொத்த சமுதாயமும் நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகவில்லை என்பதற்கு அவையே சாட்சி.

கையில் ஆயுதம் எடுக்கத்தான் வேண்டுமா? என்றால், அதை ஒருவரின் சூழ்நிலைதான் தீர்மானிக்கும் என்பதை ஒரு பெண்ணை வைத்து தீர்க்கமாக சொல்லியிருப்பது இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனின் திறமை, அது அருமை. இதற்குமுன்னர் இதுபோல், ‘இந்தியன்’, முதல்வன்’, ‘ரமணா’ எனப் பல படங்கள், பல நடிகர்கள், பல இயக்குநர்கள் சமூகக் கருத்தைத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். அதுவெல்லாம் நடிகர்களின் அரசியல் பிரவேசத்திற்கும், அடிமட்ட ரசிகனுக்கும் திருப்தி தந்திருக்கும். ஆனால் ஒரு பெண், இந்த சமூகத்திற்கு எதிரான தனது வாதங்களை எடுத்து வைக்கும் தோனியை, நெறியாள்கை செய்த அருண் பிரபு பாராட்டுக்குரியவர். இதுபோன்ற படங்களில் எந்த ஒரு நடிகையும் நடிக்கக் கண்டிப்பாகத் தயங்கவே செய்வார். இதுபோன்ற படம் இயக்கவும், வசனங்கள் வைக்கவும் ஒரு வீரம் வேண்டும். அந்த வகையில் மாவீரனாகவே மிளிர்கிறார் இயக்குநர்.

அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லி, பணத்திற்காக விலைபோய் வெட்கங்கெட்டு வாழும் இந்த சமுதாயத்தில், இன்னும் ஒளிந்துகொண்டிருக்கும் ஈரத்தையும் வெளிப்படுத்தியிருப்பது மற்றுமொரு சிறப்பு. அடுத்தவருக்காக, யாரோ ஒரு பெருமுதலாளிக்காக ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் அழகான வாழ்க்கையை இழந்து, உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை மறந்து, பொய்யான கானலுக்காக அலைந்து கொண்டிருக்கும் மனதிற்கு இந்தப் படம் பார்க்கும்போது, ‘இப்படி ஒரு வாழ்க்கைத் தேவையா?’ என்பதையும் ‘அன்புதான் சிறந்தது’ என்பதையும் எண்ண வைத்திருக்கும் முயற்சியில் இயக்குநர் வெற்றிபெற்றிருக்கிறார்.

சமூகத்தின் மீதான தனது ஆற்றாமையை, கோபத்தை எந்த தருணத்திலும் பின்வாங்காமல் என்ன சொல்ல நினைத்தாரோ அதை ஆணித்தரமாக நெற்றிப்பொட்டில் ஆணியடித்ததுபோல் சொல்லியிருக்கிறார். எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளவில்லை அவர். மேலும், ‘அரவாணி’ எனும் மூன்றாம் பாலினத்தை அன்பின் உருவமாகக் காட்டியிருப்பது இயக்குநரின் கருணை மனதைக் காட்டுகிறது.

ஆனால் ஒன்று, படம் பார்த்துக் கெட்டுப்போனவர்களே அதிகம். படம் பார்த்து திருந்தியவர்கள் யாருமில்லை என்பது நிதர்சனம். ஆகவே, இதுவும் ஒரு படம் என்று தங்கள் யதார்த்த (?!) வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவர் மக்கள். ஆக, இந்தப் படம் மூலம் யாரும் திருந்தப்போவதில்லை என்னவோ உண்மைதான். ஆனால், காளியின் கோபத்தை, தேவதையின் அழகை, அன்பின் ஆர்ப்பரிப்பை ஒருமுறை பார்த்துவிடுங்களேன்.

– கா.அருள்