புற்றுநோய் பாதிப்பில் கோவை நான்காவது இடம்!

மருத்துவர் குகன் பேச்சு

தமிழகத்தை பொறுத்தவரை புற்றுநோய் பாதிப்பில் கோவை 4வது இடத்தில் உள்ளது என்றும் கடந்தாண்டு 3 ஆயிரத்து 800க்கும் அதிகமானோர் கோவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மற்றும் குகன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் புற்றுநோய் தொடர்பாக இலவச தொலைபேசி சேவை அறிமுகபடுத்த பட்டது. இதில் தமிழுக்கு 1800 547 2800 என்ற எண்ணுக்கும், ஆங்கிலத்திற்கு 1800 547 5900 என்ற எண்ணுக்கும் மிஸ்டு கால் கொடுத்தால் புற்று நோய் குறித்த குறுஞ்செய்திகள் ஒலி வடிவில் கிடைக்கும்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மற்றும் தலைமை மருத்துவ சிகிச்சை நிபுணர் குகன் கூறியதாவது: மரபணு மாற்றத்தால் 10லிருந்து 20 சதவீதம் பேருக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. உடலியல், உணவியல் சார்ந்து வரும் புற்றுநோய் சதவீதம் தான் அதிகம்.

புகையிலை, மசாலா அதிகமுள்ள மற்றும் கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவுகள், சரியான உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், மலக்குடலில் ரத்தம் வடிதல் உள்ளிட்ட பல காரணங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. கடந்தாண்டு இந்தியாவில் 12 முதல் 13.5 லட்சம் பேரும், தமிழகத்தில் 78 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை புற்றுநோய் பாதிப்பில் கோவை 4வது இடத்தில் உள்ளது. கடந்தாண்டு 3 ஆயிரத்து 800க்கும் அதிகமானோர்  புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் இடத்தில் சென்னையும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளன.

வயிறு, கழுத்துப்பகுதி, நுரையீரல் புற்றுநோயால் ஆண்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர். பெண்களில் பெரும்பாலானோர் வாய் மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என அவர் கூறினார்.