சாலை பாதுகாப்பு குறித்து போலீசாரின் பைக் பேரணி

கோவை: சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலீசாரின் பைக் பேரணி கோவையில் புதன்கிழமை இன்று நடைபெற்றது.

சாலை விபத்துக்களை குறைத்து பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 7 நாட்கள் மட்டுமே நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி நடப்பு ஆண்டில் ஒரு மாதம் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் கடந்த மாதம் 18ம் தேதி சாலைபாதுகாப்பு வாரம் துவங்கி வரும் 17 வரை நடத்தப்படுகிறது. இதில், பல்வேறு சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு மாநகர போலீசார் சார்பில் பைக் பேரணி நடத்தப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இந்த பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு துவங்கிய இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாநகரில் பேரணியாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.