தேசியளவிலான கிரிக்கெட் போட்டியில் ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் சாதனை!

 

2021 ஜனவரி மாதம் அகில இந்திய அளவில் சிறந்த கிரிக்கெட் அணிகளுக்காக நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி சுழற்கோப்பைக்கான போட்டியில் கோவையை சேர்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இக்கல்லூரியின் எம்.பி.ஏ. மாணவர் ஜெகதீசன் மற்றும் எம்.காம்.ஐ.பி மாணவர் ஹரி நிஷாந்த் ஆகியோர் தமிழ்நாடு கிரிக்கெட் அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஜனவரி 31ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி வெற்றி வாகை சூடியது. தமிழக அணியின் சார்பாக விளையாடிய இக்கல்லூரி மாணவர் ஜெகதீசன் தொடரின் அனைத்து சுற்றுக்களையும் சேர்த்து 364 ரன்களைக் குவித்து இந்தியாவிலேயே அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதே கல்லூரியினைச் சேர்ந்த மாணவர் ஹரி நிஷாந்த் மொத்தம் 246 ரன்களை எடுத்து தமிழ்நாடு அளவில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையினைச் செய்துள்ளார்.

அகில இந்திய அளவில் தொடர் சாதனை படைத்துவரும் இவ்விரண்டு மாணவர்களுக்கும் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லக்ஷ்மிநாராயணசுவாமி மற்றும் கல்லூரியின் முதல்வர் செயலர் சிவக்குமார் ஆகியோர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். நடைபெற்ற சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் கால் இறுதிச்சுற்று, அரை இறுதிச்சுற்று, இறுதிச்சுற்று என்று அனைத்திலும் பெரும்பாலும் விக்கெட்டுகளை இழக்காமல் தொடர்ந்து அதிக ரன்களை குவித்து மாணவர் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகிய இருவரும் தமிழக கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு வலுசேர்த்துள்ளனர். குறிப்பாக மாணவர் ஜெகதீசன் பங்கேற்ற எட்டு போட்டிகளில் நான்கு சுற்றுக்களில் 70க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து விளையாடியுள்ளார். அதேபோல் ஹரி நிஷாந்த் முதல் போட்டியிலேயே 92 ரன்களைக் குவித்து அதிரவைத்துள்ளார்.

தமிழக அணி தகுதிச்சுற்றில் ஜார்கண்ட், அசாம், ஒடிசா, ஹைதராபாத், பெங்கால் ஆகிய மாநிலங்களோடு விளையாடியது. பின்னர் கால் இறுதிச் சுற்றில் ஹிமாச்சலபிரதேசத்தோடும், அரை இறுதியில் ராஜஸ்த்தானோடும் விளையாடி ஜனவரி 31ம் தேதி அகமாதாபாத்தில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் பரோடாவோடு களம் கண்டு தமிழக அணி வெற்றிக் கோப்பையையும் பறித்து வந்துள்ளது. 2006-2007ல் நடைபெற்ற போட்டிக்குப் பிறகு தமிழகம் இந்த சையத் முஷ்டாக் அலி கோப்பையை இரண்டவது முறையாக வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். தேசிய அளவில் கிரிக்கெட் விளையாட்டில் தமிழக அணியின் இந்த பெருமைமிக்க வெற்றிக்கு துணைநின்று, தமிழகத்திற்கும் கோவைக்கும் தங்கள் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ள இவ்விரு மாணவர்களுக்கும் கல்லூரிப் பேராசிரியர்களும், சக மாணவர்களும், கோவை மக்களும் தொடர்ந்து தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.