தமிழ்நாட்டின் இதயக்கனி எடப்பாடியாரா ?

இதுவரை தமிழக முதலமைச்சர் பதவி வகித்தவர்களில் வித்தியாசமானவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள். இதற்கு முன்பு இப்பதவி வகித்தவர்களில் வி.என். ஜானகி தவிர மற்ற எல்லோருமே வலுவான அரசியல் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள். எழுத்து, பேச்சு, நடிப்பு, அரசியல் சாணக்கியத்தனம், அறிவாற்றல் என்று தனி குணாதிசயங்கள் கொண்டவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல் களம் பல கண்டதோடு, தேர்தல் களங்களிலும் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தமிழக முதலமைச்சர் பதவிக்கு வந்தவர்கள்.

ஆனால், இதில் எடப்பாடி அவர்கள் வித்தியாசமானவர். பல ஆண்டுகள் அரசியலில் இருந்தாலும் முன்களப் பணியாளராக, தமிழக அளவில் தலைவராக களம் கண்டு மோதியதில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை அரசியலில் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்ட ஒரு அதிமுக தொண்டர் எப்படி இருப்பாரோ அப்படியே அரசியலில் செயல்பட்டு வந்தவர். தனி கோஷ்டி சேர்ப்பது, உட்கட்சி அரசியல் இதெல்லாம் இவரிடம் இல்லாத பழக்கங்கள். இவரிடம் கவர்ச்சிகரமான அரசியல் செயல்பாடுகள் என்றுமே இருந்ததில்லை. யதார்த்தமாக பழகக்கூடியவர். எளிமையானவர். அணுகுவதற்கு எளிதானவர்.

இந்த நிலையில்தான் ஜெயலலிதா மறைந்து, தமிழகத்திலும், அதிமுக தலைமையிலும் ஒரு வெற்றிடம் உருவானது. அதே காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு அடுத்து, அவரது நிழலாகக் கருதப்பட்ட சசிகலா தலைமைப் பொறுப்புக்கு வருவார் என்ற நிலை மாறி எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சரானார். பொதுவாக அரசியல் ஆர்வம் உள்ளவர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லோருமே யார் இந்த எடப்பாடி பழனிசாமி, எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கப் போகிறார் என்றுதான் பார்த்தார்கள்.

அதற்கேற்ப அதிமுக அணிகள் பிரிந்து ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் என்று அரசியல் களம் சூடுபிடித்தது. இந்த சூழலை இவர் எப்படி தாக்குப்பிடிக்கப் போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் பார்த்திருந்த நிலையில் அற்புதமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு தன்னுடைய அரசியல் செயல்பாடுகள்,  நகர்வுகள் மூலம் தான் யார் என்பதையும் நிரூபித்தார்.

அரவணைக்க வேண்டியவர்களை அரவணைத்தார். அதிமுக தொண்டர்கள், பழைய செயல்வீரர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் என்று படிப்படியாக கட்சியை தனது கட்டுக்குள் கொண்டு வந்தார். ஜெயலலிதா இருக்கும்போதே முதல்வராக பொறுப்பு வகித்த பன்னீர்செல்வத்தின் அதிருப்தியை நீக்கி, அவரைத் துணை முதலமைச்சராக பொறுப்பு வகிக்கச் செய்ததோடு, கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்க செய்தார். இதனால் அதிமுக கட்சி உடைந்து சிதறும் என்று எதிர்பார்த்தவர்கள் எல்லாம் ஏமாந்தனர்.

அவ்வப்போது உரசல்கள் வருவதுபோல தோன்றினாலும் அது தோன்றிய சுவடே இல்லாமல் செய்து விடுவதில் எடப்பாடி பழனிசாமி வல்லவராக மாறியிருந்தார். பல நேரங்களில் அவர் பேசுவதில்லை; அதற்கு பதிலாக தனது அமைதியான, ஆனால் உறுதியான செயல்பாடுகள் மூலம் தன் முடிவைச் சொல்லி செயல்படுத்தினார். சில வாரங்களுக்கு முன்பாக வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற பலத்த விவாதம் தொடங்கியபோது அந்த வேட்பாளர் நான்தான் என்று சொல்லாமல் சொன்னார். தமிழக அரசியலில் இல்லாத புதுமையாக தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தேர்தல் பிரச்சாரத்துக்கு முதலமைச்சரே கிளம்பியது அவரது செயல்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

இதற்கு முன்பாக நீட் தேர்வு விவகாரம், தமிழகத்தை உலுக்கி எடுத்தபோது தமிழகத்தின் நலனை மத்திய அரசிடம் அடகு வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அதிலும் வெற்றிவீரராக தன்னை நிலைநிறுத்தினார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்ததன் மூலம் பல மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய பெருமையும் கிடைத்தது.

ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பல பிரச்னைகள் தமிழகத்தை உலுக்கி எடுத்தபோதும் அரசாங்க இயந்திரத்தை எப்படி செயல்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்தி அந்த சிக்கல்களில் இருந்தும் வெளியே வந்தார்.

இன்னொருபுறம் ஒக்கி, கஜா, நிவர், புரெவி புயல்கள் தமிழகத்தை பெரிதாகத் தாக்கியபோது அவற்றில் இருந்து மீண்டு, படிப்படியாக தனது செயல்திறனைக் காட்டினார். ஒக்கி புயலுக்கு முதலமைச்சர் வந்து பார்க்கவில்லை என்ற பலத்த கண்டனக் குரல் தமிழகத்தில் எழுந்தது. கஜா புயலை சரியாக கையாளவில்லை என்ற குரலும் எழுந்தது. ஆனால் அடுத்து வந்த புயல்களை தமிழக அரசு கையாண்ட விதம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. நிவர் புயல், புரெவி புயல் ஆகியவை தமிழகத்தை தாக்கியபோது அரசு இயந்திரம் உடனடியாக விரைந்து செயல்பட்டு வருவது கண்கூடாக வெளியே தெரிந்தது. புயல் பாதித்த பகுதிகளில் சேதத்தை மதிப்பிட்டு இழப்பீடு வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன.

அதைப்போலவே அரசுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்போதெல்லாம் தகுந்த திறமை வாய்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து அந்த சூழ்நிலைகளைக் கையாளுவதிலும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்ந்தவராக மாறியிருப்பது தெரிகிறது. கடலூர் போன்ற பகுதிகளில் புயல் வெள்ளம் தாக்கியபோது ககன்தீப் சிங் போன்ற அதிகரிகளையும், கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்கியபோது இராதாகிருஷ்ணன் போன்ற அதிகாரிகளையும் நியமித்து நிலைமையை வெற்றிகரமாக சமாளித்ததை தமிழகம் பார்த்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்திய நாடே பாதிக்கப்பட்டபோது, அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழகத்தை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் படிப்படியாக முன்னேற்றி கிட்டத்தட்ட சிக்கல் இல்லாத நிலைக்கு கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது.

இவர் முதலமைச்சராக பதவி ஏற்ற காலகட்டத்தில் எவ்வளவு நாள் நீடிப்பார், எப்படி சமாளிப்பார் என்ற எண்ணமே பலரிடம் மேலோங்கி இருந்தது. ஆனால் தற்போது அந்த எண்ணங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி வெற்றி நடைபோடும் தலைவராக எடப்பாடி பழனிசாமி பரிணமித்திருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற கவர்ச்சிகரமான ஆளுமை மிக்க தலைவராக இல்லாமல் இருந்தாலும் இன்று தனது திறமையான அரசியல் செயல்பாடுகளால் தன்னை அனைவரும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார்.

அனைத்திற்கும் மேலாக நமது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தன்னை ஒரு விவசாயி என்பதாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார். அதற்கேற்ப கடந்த 3 ஆண்டுகளிலும் இயற்கையின் கருணை தமிழகத்திற்கு மழையாகக் கிடைத்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில்கூட பாதிக்கப்படாத துறை ஒன்று இருக்கிறது என்றால், அது விவசாயத்  துறையே எனும் அளவுக்கு முதலமைச்சருக்கு ‘தண்ணீர் ராசி’.

உட்கட்சி சிக்கல்கள், அதிருப்திகள், பாரதிய ஜனதா போன்ற மத்திய ஆட்சியில் இருக்கும் கூட்டணி கட்சிகள், ஸ்டாலின் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள், நீட் தேர்வு, ஸ்டெர்லைட் போன்ற பொது சிக்கல்கள், வரிசையாக தாக்கிய புயல், வெள்ளம், கொரோனா வைரஸ் பெருந்தொற்று போன்ற பேரிடர்கள் என்று எல்லாவற்றையும் வெற்றிகரமாக கடந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி ஒரு மக்கள் தலைவராக,  ஒரு பெரும் அரசியல் தலைவராகவே உருவெடுத்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை.. மேலும் அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆராக இருந்தார், தற்போது தமிழ்நாட்டின் இதயக்கனி எடப்பாடியாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.