குழந்தைகள் கவனத்தை எதில் வைக்க வேண்டும்?

கேள்வி:  வளரும் வயதிலேயே குழந்தையின் கவனத்தை எதில் திருப்ப வேண்டும்?

சத்குரு: வளரும் வயதில் குழந்தைக்குக் குறிப்பிட்ட எந்த நோக்கமும் தேவையில்லை. முக்கியமாக பெற்றோர்மீது குழந்தையின் கவனம் இருக்கத் தேவையில்லை. அவர்கள் இயல்பாக வளர வேண்டும். வளர்ச்சி என்பது உடலைப் பொறுத்தது மட்டுமல்ல. எல்லாத் தரப்பிலும் எதுவும் திணிக்கப்படாமல், அவர்கள் வளர வேண்டும். ‘நீ நல்லவனாக வளர வேண்டும். தப்பான வழிகளில் போகாதே, போகாதே’ என்று சொல்லத் தேவையில்லை.

அவர்களுடைய மூளை, மனம், உணர்ச்சிகள், உயிர் சக்தி என¢று எல்லாமே முழுமையாக வளர்ச்சி கண்டால், தானாகவே அவர்கள் மிக ஆனந்தமானவராகத்தான் வளர்வார்கள். நல்லவனாக வளர வேண்டும் என்று அறிவுறுத்துவதால் மட்டும் அப்படி வளர்ந்துவிட முடியாது. ‘நல்லவனாக இரு, நல்லவனாக இரு’ என்று அறிவுறுத்திக் கொண்டேயிருக்கும் பெற்றோரைப் பார்த்தால், அவர்களுக்குத் தங்களைப் பற்றிய நம்பிக்கையே இல்லையா என்ற கேள்வி எழுகிறது. விதை தன் மீதே சந்தேகம் கொண்டிருந்தால் செடி எப்படி ஒழுங்காக வளரும்? வளரும் குழந்தைகளுக்கு டாக்டராக வேண்டும், இன்ஜின¤யராக வேண்டும் என்றெல்லாம் ஐந்து வயதிலிருந்தே கனவு இருக்கத் தேவையில்லை. அவர்களுக்குத் தங்கள் வளர்ச்சி பற்றி கவனம் இருந்தால் போதும்.

சமூகம், மிகப் பெரியதாகக் கொண்டாடுவதைத்தான் நாமும் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஒரு குழந்தை இசையில் ஆர்வம் கொள்கையில், ‘நீ அரசனாக வர வேண்டும்’ என்று பெற்றோர் தங்கள் விருப்பத்தைத் திணிப்பது புத்திசாலித்தனமல்ல. எத்தனையோ அரசர்களை நாம் மறந்து விட்டாலும், தான்சேன் என்ற இசைக்கலைஞனை மறக்கிறோமா? சமையல் என்றால், நளன் என்று பெயர் வாங்கியுள்ளானே, அவன் சமைத்ததை நாம் உண்டு ருசித்தோமா, இல்லை. ஆனால், செய்வதை முழுமையான ஈடுபாட்டுடன் அவன் செய்ததால், தலைமுறைத் தலைமுறையாக அவன் பெயர் நிலைத்துவிட்டது.

உடல், மனம், உயிர் சக்தி இவை முழுமையாக வளர்ந்தால் போதும். இயற்கை மற்ற வளர்ச்சியை கவனித்துக் கொள்ளும். உயிர், அதன் உச்சத்தில் இயங்க வேண்டுமானால், அதற்கான முழுமையான வளர்ச்சியை அது கண்டிருக்க வேண்டும். வேறு எதில் கவனம் பதிந்து விட்டாலும், சுய வளர்ச்சி பற்றிய கவனம் சிதறிவிடும். செய்வதை முழுமையாகச் செய்தால், ஒரு புல்லை வளர்த்தால்கூட அது பிரமிப்பூட்டும் விதமாக அமைந்து காட்டும்.