ஆசியாவின் வியாபார தலைநகரமாக கோவையை மாற்றுவதே எங்கள் குறிக்கோள்!

– சி.பாலசுப்ரமணியன்,

தலைவர்,

இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை.

கோவையின் தொழித் துறைக்கு 2020 முழு ஆண்டுமே சவாலாகத் தான் இருந்துள்ளது. ஏற்கனவே இருந்த பொருளாதார மந்தநிலையால் வியாபாரத்தில் நலிவு ஏற்பட்ட கணத்தில் கொரோனா, ஊரடங்கு, வட்டி சுமை, இயங்காத தொழிற்கூடம் மற்றும் சொந்த மாநிலங்களுக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பி வராமலிருப்பது, குறிப்பாக தற்போது ஏற்பட்டுள்ள மூலப்பொருள் விலை உயர்வு போன்ற தொடர் சவால்களால் தொழில்துறைகள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவையின் தொழிற்துறைகளின் முன்னேற்றத்திற்கும், பாதுகாப்பிற்கும், வர்த்தக ரீதியான வளர்ச்சிக்கும் துணைநிற்கும் அமைப்புகளில் முக்கியமான ஒன்று, இந்திய தொழில் வர்த்தக சபை.

இந்த சபையின் தலைவர் சி.சுப்ரமணியன் அவ்ரகளிடம் கோவையின் தொழில்துறை முன்னேற்றத்திற்கும், பல துறைகளின் வளர்ச்சிக்கான சபையினுடைய திட்டங்களைப் பற்றியும் நமக்குத்தந்த நேர்காணலின் பதிவு:

அசாத்திய சூழ்நிலையை சமாளிக்கும் வழிகள்?

தற்போது தொழில்துறைக்குத் தேவைப்படும் மூலப்பொருட்கள் – காகிதம், இரும்பு, செம்பு, துத்தநாகம் (ஜின்க்), பவுண்டரிகளுக்குத் தேவையான அமைன் கேஸ் என எல்லாம் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து வருகிறது.

கோவையின் தொழில்துறை அமைப்புகள் எல்லாம் கூட்டுக்குழுவாக நம் அமைச்சர் அவர்களை சந்தித்து, இந்த சூழ்நிலைகளை நிவர்த்தி செய்ய என்ன வழி உண்டு என்பதை சொல்லியிருக்கிறோம். இரும்பை நம்பித்தான் கோவையில் பல சிறு குறு தொழில்கள் இருக்கின்றன.

அவர்கள் பாதுகாப்பைக் கருதி, இரும்பை இறக்குமதி செய்ய அரசாங்கங்கள் அனுமதிக்க வேண்டும். ஒரு ஆறுமாத காலத்திற்கு வரிகள் இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதியும், ஆறு மாதத்திற்கு எந்தவித இரும்பு, இரும்புப் பொருட்களையும் ஏற்றுமதி செய்யத் தடையும் விதிக்க வேண்டும். இப்படி செய்தால் இரும்பின் விலை குறையும்.

இதனை வலியுறுத்தி மத்திய எஃகு அமைச்சர் அவர்களையும் விரைவில் சந்திக்க உள்ளோம். சென்ற வருடம் இவ்வாறு ஒரு சூழ்நிலை இருந்தபோது அவரை சந்தித்தோம், அப்போது வெகு சீக்கிரத்தில் தீர்வு கிடைக்க வழிவகுத்தார். இந்த முறையும் அவ்வாறே செய்வார் என்று நம்புகிறோம்.

தொழில்துறை மீள என்ன உதவி தேவை?

அரசாங்கம் அறிவிக்கும் கடன் மற்றும் சலுகைத் திட்டங்களும், பொருளாதார நிதித் தொகுப்பு வழியாய் அறிவித்திருக்கும் உதவியும் அனைவருக்கும் வந்து சேரவில்லை. இது அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்.

சிறு, குறு தொழில்களுக்குத்தான் கடன் கிடைப்பதிலே சுமை உள்ளது. ஏற்கனவே ஜீ.எஸ்.டி, பண மதிப்பிழக்க நடவடிக்கை, தொழில் மந்தநிலையால் அவர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்குத்தான் கடன் என்று சொல்லாமல், வங்கிகள் இவர்களுடைய இருப்பு நிலைக் குறிப்பையும், சொத்துக்களையும் பார்த்து, கடும் விதிகளை சற்று மென்மையாக்கி கடன் வழங்க முன்வர வேண்டும்.

இந்த காலாண்டு நன்றாக இருக்கிறது, பலரும் பல அறிகுறிகளை (மின்சார உபயோகம், டீசல் உபயோகம், வாங்கும் திறன் அதிகரிப்பு, ரயில் முன்பதிவு) உதாரணம் காட்டி இனி வரவிருக்கும் காலாண்டும் (ஜனவரி – மார்ச்) நன்றாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கொரோனா தடுப்பூசியும் சீக்கிரம் வந்துவிடும் என்கிறார்கள். எனவே வங்கிகள் கட்டாயம் சிறு குறு தொழில்களுக்கு உதவ வேண்டும்.

வளர்ச்சி அடைய டிஜிட்டல் வியாபார முறைக்கு மாறுவது அவசியமா?

அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வியாபார சந்தைகள் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை இணைய வழியே சந்திப்பதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டுகின்றன.

நம்மாலும் அப்படி ஒரு நிலையை அடையமுடியும். அதற்கு நாம் இணைய வழி வியாபார முறையை சிறுது சிறிதாக துவக்க ஆரம்பிக்க வேண்டும்.

தற்போது நாம் ஒரு கட்டடத்திற்குள் இருந்து வியாபாரம் செய்கிறோம். இங்கு நம்மைச் சுற்றி உள்ளோரே நமது வாடிக்கையாளர்கள். ஆனால் இணைய வழி மூலம் நம் வாடிக்கையாளர்களைப் பலமடங்கு உயர்த்த முடியும்.

மெதுவாக, ஆனால் உறுதியாக டிஜிட்டல் உலகிற்கு நாம் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நம்முடைய வியாபாரத்தை இயல்பு முறையிலும், இணைய வழியிலும் செய்யக்கூடிய நிலையை அடுத்த 10 ஆண்டிற்குள் அடைய வேண்டும். இல்லையென்றால் நாம் தொழிலில் நிலைப்பது சந்தேகம்தான்.

பெண்களுக்கு எப்படிப்பட்ட வாய்ப்பு வழங்கப் போகிறீர்கள்?

தொழில் துறை, வியாபாரம், சேவைத் துறை என அனைத்திலும் பெண்களின் பங்கு மிகப் பெரியதாக இருக்கிறது. ஆனால் எங்கும் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை.

எங்கள் சபையிலேயே, 90 ஆண்டுகளில் சமீபத்தில்தான் திருமதி வனிதா மோகன் அவர்கள் முதல் பெண் தலைவராகத் தலைமையேற்றார்.

எங்கள் ஆட்சிமன்றக் குழுவிலே 3 பெண்கள்தான் உள்ளனர். ஆனால் கோவையிலே பல துறைகளிலே முன்னேற்றம் அடைந்த பெண் தொழிலதிபர்கள்/தொழில்முனைவோர்கள் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு, எங்கள் உறுப்பினராக்குவோம். இதை நிச்சயம் செய்வேன். அவர்களோடு சேர்ந்து பணியாற்றினால் எங்கள் சபை மட்டுமல்ல, கோவையின் வளர்ச்சிக்கும் அது வழிவகுக்குமென உறுதியாக நம்புகிறேன்.

விவசாயத் துறை வலுவடைய என்ன திட்டம் உள்ளது?

விவசாயத்தை ஒரு நல்ல லாபகரமான தொழிலாகவும், தரமான இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் கோவையின் இந்திய தொழில் வர்த்தக சபை பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

இன்று நாம் உபயோகிக்கும் செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் உணவுப் பொருட்களில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இதுவே பல உடல் உபாதைகளுக்குக் காரணமாகக்கூட அமைகின்றது எனப் பல மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எங்கள் சபையிலே ஒவ்வொரு ஆண்டும் உழவே தலைஎனும் கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதன் வாயிலாக இந்திய அளவில் உள்ள தரம் வாய்ந்த அறிவியலாளர்களை அழைத்து வந்து நீர் மேலாண்மை, மண் பரிசோதனை, இயற்கை விவசாய முறை, விதைப் பராமரிப்பு மற்றும் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்து வருகிறோம். இதை எங்கள் சங்கத்தின் தற்போதைய பொருளாளர் துரைராஜ் அவர்கள் தலைமை ஏற்று சிறப்பாக நடத்திவருகிறார்.

இயற்கை விவசாயம் நல்ல ஒரு பலனை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் தரும் என்று நம்புகிறோம். இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் சிக்கிம் மாநிலம், லட்சத்தீவுகள் ஆகிய இடங்களுக்கு எங்கள் குழுவினரை அனுப்பி, அவர்களின் யுக்திகளைத் தெரிந்து கொண்டு அதை நம் கோவை விவசாயிகளிடமும், மக்களிடமும், குறிப்பாக இளைஞர்களிடமும் கூறி, எப்படி இயற்கை விவசாயத்தை ஒரு லாபகரமான தொழிலாக மாற்ற முடியும் என்பதைப் பற்றி தெரிவிப்போம்.

மெடிக்கல் டூரிசம் பற்றி:

உலகிலேயே சிறந்த மருத்துவர்கள் பலர் நம் கோவையில் இருக்கிறார்கள். எலும்பு சம்மந்தப்பட்ட மருத்துவ சேவையிலே கோவையின் கங்கா மருத்துவமனையும், லாப்ரோஸ்கோப்பி சிகிச்சையிலே ஜெம் மருத்துவமனையும், இருதய அறுவை சிகிச்சை வழங்குவதில் குப்புசாமி நாயுடு மருத்துவமனை, கே.எம்.சி.ஹெச், கே.ஜி மருத்துவமனை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை போன்ற 10 மையங்கள் உலக அளவிலே தரம் வாய்ந்த மருத்துவர்களையும், உட்கட்டமைப்பையும் கொண்டவை யாகத் திகழ்கின்றன.

நம்மைச் சுற்றியுள்ள ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் மருத்துவ சேவைக்கு ஆகின்ற கட்டணங்களின் அளவைவிட நம் நாட்டில் கட்டணம் மிகக் குறைவே. அந்த நாட்டின் அரசாங்கம் இலவச மருத்துவ சேவை வழங்கினாலும், மக்கள் அங்கு வெகு நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. காத்திருப்பதே சில நேரத்தில் பாதிப்பை அதிகப்படுத்துகிறது.

எனவே, எங்கள் வியாபாரக் குழுக்கள் சர்வதேச தூதரகங்கள் மூலமாக பன்னாட்டு அரசுகளுடன் சந்திப்பு நடத்தி உள்ளன. அவர்களுடன் நல்ல நட்பினை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களிடம் இது சம்மந்தமாக பேசி நம்மால் அவர்கள் மக்களுக்கு உதவ முடியும் என்பதைத் தெரிவிப்போம். நம் கோவை மருத்துவமனைகளின் சேவை உலகெங்கும் கிடைக்க முயற்சிகளை கட்டாயம் எடுப்போம்.

சபையின் 100-ம் ஆண்டு மிக அருகில்:

1929-ம் ஆண்டு துவங்கிய எங்கள் சபை 2029ல் தன்னுடைய நூறாவது ஆண்டை எட்டும். அந்த தருணத்தில் கோவையை ஆசியாவின் வியாபாரத் தலைநகரமாக ஆக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாக உள்ளது.

துபாய் கடைவல விழா போன்று கோவையிலும் ஒரு மிகப்பெரிய கடைவல விழாவை (ஷாப்பிங் ஃபெஸ்டிவல்) இந்த 100-ம் ஆண்டில் அறிமுகம் செய்ய வேண்டும் என ஆவலாக உள்ளோம். எனக்கு முன்னால் இருந்த தலைவர்கள் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள், நானும் அதைச் செய்வேன். இதுவும், மெடிக்கல் டூரிசமும் எங்கள் நீண்ட கால இலக்குகளாய் வைத்திருக்கிறோம்.