திருக்குறளின் அடிப்படையில் நீதி வழங்க வேண்டும்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 5ம் ஆண்டு விழாவில் சிலம்பொலி செல்லப்பனார் பேச்சு

 

டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 5ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீதியரசர் ஆர். மகாதேவன், பேராசிரியர் முனைவர் சிலம்பொலி செல்லப்பனார், பேராசிரியர் சிற்பி பாலசுப்ரமணியம், பேராசிரியர் முனைவர் க. மணி, எழுத்தாளர் வண்ணநிலவன், கே.எம்.சி.எச் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி, டாக்டர் என்.ஜி.பி கல்விக் குழுமங்களின் செயலர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் “உ.வே.சா. தமிழறிஞர் விருது” பேராசிரியர் முனைவர் சிலம்பொலி செல்லப்பனாருக்கும்,” பெரியசாமித்தூரன் தமிழ்ப் படைப்பாளர் விருது” எழுத்தாளர் வண்ணநிலவனுக்கும்,” டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறை தமிழ்த் தொண்டர் விருது” பேராசிரியர் முனைவர் க. மணிக்கும் வழங்கப்பட்டது.

டாக்டர் என்.ஜி.பி கல்விக் குழுமங்களின் செயலர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி வரவேற்புரை வழங்கினார்.

நாட்டையும் நம் மொழியையும் பேணிக்காக்க வேண்டும்

இதில் பேசிய கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் மற்றும் உலகத்தமிழ்பண்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி,” உலகத்திலுள்ள மொழிகளிலே ஒரு சிறந்த செம்மொழியாகத் திகழ்வது தமிழ் மொழி. பழங்கால மொழிகளிலே இன்றும் நிலைத்திருப்பது நம் தமிழ் மொழி ஒன்றே.

“தமிழ் மெல்ல சாகும்“ என்ற நிலை வந்து விடக்கூடாது என்பதற்காகவே இம்மையம் இயங்கி வருகிறது. நாம் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்; ஆனால் அடிப்படை மொழியை மறக்கக்கூடாது. நாம் நம் மொழியைப் பாதுகாக்க வேண்டும். உலகத்தமிழ்பண்பாட்டு மையத்தின் நோக்கம் நம் நாட்டையும் நம் மொழியையும் பேணிக்காப்பதே ஆகும். நம் தமிழ்மொழி தொடர்ந்து மக்களிடம் இயங்க வேண்டும்“ என்று கூறினார்.

பேராசிரியர் சிற்பி பாலசுப்ரமணியம் விருது பெறுபவர்களின் அறிமுகத்தை வழங்கினார். அதில் “ ‘தமிழின் வளம் தமிழர் நலம்‘ என்ற இலச்சியத்தோடு 5ஆம் ஆண்டு விழா நடத்துகிறது இம்மையம். பல்வேறு அரிய நூல்களையும் பல கருத்தரங்குகளையும் இம்மையம் மிகச்சிறப்பாக நடத்தியுள்ளது. இதன் மற்றொரு பரிமாணமாக தமிழ் எழுத்தாளர்களை விரிவாக அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, கொங்குநாட்டுப் படைப்பாளிகள் குறித்த ஆய்வை நடத்தினர்.

அதிலிருந்து தமிழின் மிகப்பெரிய சாதனையாளர்களாக விளங்குவோருக்குக் கடந்த நான்கு ஆண்டுகளாக விருது வழங்கி சிறப்பித்து வருகிறது இம்மையம். இந்த விழாவிற்கு ஒளியும் வலிமையும் ஆற்றலும் சேர்க்கும் வகையில் நீதியரசர் வருகைதந்துள்ளார். இலக்கியங்களை ஆய்ந்த இவர் நாட்டு மக்களின் சுக துக்கங்களில் தானும் பங்கேற்ற காரணத்தினால் தான் தமிழ்நாட்டின் இயற்கை வளம் காக்க ஆற்று மணல் அள்ளுவதை  தடுக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளார். மேலும் இலக்கியங்களை ஆய்ந்த இவர் அண்மையில் வழங்கிய தீர்ப்புகளில் திருக்குறளைக் கட்டாயமாக்கியுள்ளார்.

சிறந்த தமிழ்ப் படைப்பாளர் விருதைப் பெற்ற எழுத்தாளர் வண்ணநிலவன் நீண்ட நெடிய பத்திரிக்கை அனுபவம் உடையவர். இவர் 7 சிறுகதைத் தொகுதிகள், 6 நாவல்கள், 2 கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய நாவல்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. இவரது படைப்பாற்றல் புதுமைப்பித்தனுக்கு அடுத்தப்படி என்பது இலக்கியத்தில் மேம்பட்டவர்களின் கருத்து. டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறை தமிழ்த் தொண்டர் விருது பெறும் பேராசிரியர் முனைவர் க. மணி தமிழில் எழுதும் அபூர்வமான அறிவியல் அறிஞர்களில் ஒருவர்.

இவர் 7000 அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் ஆராய்ச்சித்திறன் அதிகம் பெற்றவர். வழங்கப்பட்ட விருதுகளிலே மிகச்சிறந்த விருதாக “உ.வே.சா. தமிழறிஞர் விருது” பெற்றப் பேராசிரியர் முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் தமிழே வடிவமாக உடையவர். அண்மையில் பல்வேறு தகவல்களைக் கொண்ட மிகப் பெரிய நூலை எழுதியுள்ளார். பல தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். அற்புதமான அறிஞர்களையும், சிந்தனையாளர்களையும் உருவாக்கிய தலைமை ஆசிரியராக சேலம் மாவட்டத்தின் தாமஸ் ஆர்நால்டாக திகழ்கிறார்” என்றார்.

அற்புதமான படைப்பாளிகளோடு நாமும் வாழ்கிறோம் என்பது நமது பெருமை

நீதியரசர் ஆர். மகாதேவன் பேசியதாவது “மூன்று பெரும் ஆளுமைகள் தங்கள் வாழ்க்கையை மண்,மொழி, இலக்கியம் சார்ந்த வாழ்க்கையாகவும், வாழ்க்கை தங்களை எடுத்துச்செல்லும் பாதையைப்பற்றி, பயணத்தைப்பற்றி, துன்பங்களைப்பற்றி கவலைப்படாமல் இந்த உலகின் தலையாய மொழியை தங்கள் வாழ்வின் ஆதாயமாகக் கொண்டு வாழ்க்கை போக்குகளை பதிவுசெய்து, இம்மண்ணிற்கான மகத்துவத்தை மொழிக்கான மகத்துவத்தை எடுத்துச்சென்ற விதத்தை உணர்ந்து விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

மண்ணின் மாந்தர்களை உள்வாங்கி தனிமனித வாழ்க்கை எத்தகையது என்பதை தன் அற்புதமான படைப்பாற்றல் மூலம் பதிவுசெய்தவர் சிலம்பொலி செல்லப்பனார். மாற்றங்களை உள்வாங்கி,  அதனை உட்புகுத்தி, தனது படைப்புகள் மூலம் சிறப்பாக வழங்கியவர். இத்தகைய அற்புதமான படைப்பாளிகளோடு நாமும் வாழ்கிறோம் என்பது நமது பெருமை. பேராசிரியர் முனைவர் க.மணி படைப்பில் உயிரியல் சார்ந்த விஷயமாக மட்டுமல்லாமல், 21ம் நூற்றாண்டைத் தாண்டி உலகத்தின் அறிவியல் விஷயங்கள் பற்றியெல்லாம் பதிவு செய்துள்ளார்.

அறிஞராக தனித்தன்மை மிக்கவராக மாறுகின்ற சமகால உலகத்தின் போக்குகளை அறிந்து அதை தனது படைப்புகளின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். பேராசிரியர் சிற்பி பாலசுப்ரமணியம், ஒரு மனிதன் எந்தெந்த விதத்திலெல்லாம் தனது வாழ்க்கையைப் பார்க்க முடியும் என்ற விஷயத்தை உள்வாங்கி எழுதும் ஆற்றல்பெற்றவர். தாம் சார்ந்த மண் , மொழி மற்றும் தன் வாழ்வின் ஆதாரம் எவற்றையெல்லாம் சார்ந்து இருக்கின்றதோ அதனைச் சார்ந்த ஆளுமைகளின் பதிவுகளையும், அந்த ஆளுமைகள் தமக்கு உணர்த்தியதையும் தெளிவாக உணர்வுப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்” என்றார்.

செயல் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுங்கள் 

பேராசிரியர் க.மணி பேசுகையில்: இந்த உலகத் தமிழ் பண்பாட்டு மைய நிகழ்ச்சியைப் பரிபூரணமான, முழுமையான நிகழ்ச்சி என்பேன். ஏனெனில், தமிழ் மொழியைப் பாதுகாப்பதற்கு அனைவரும் இருக்கிறோம் என்பதை இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாபெரும் நிகழ்ச்சியில் எனக்குக் கிடைத்த விருதினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் திட்டம் தீட்டுகிறோம். ஆனால் கருவில், நம்மை உருவாக்கும் தாய் அதற்காக திட்டம் ஏதேனும் தீட்டுகிறாளா? இல்லை. முற்றுப்புள்ளியை விட சிறிதாக இருக்கும் கருவில் தாய், தந்தை இரண்டு தகவல்களைக் கொடுக்கின்றனர். எந்த ஒரு செயல் திட்டமும் இல்லாமல் உருவாகும் நமக்குள் பாடபேதம் அதிகமாகக் காணப்படுகிறது. நம் பெற்றோர் உண்டாக்கிய இந்த உடலில், 11 மண்டலமும், 200 திசுக்களும் ஒரே மாதிரியாக செயல்படுவதில்லை.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயல்களை எடுத்துக் கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் வேலை செய்கின்றன. ஆகவே “எனது” என்று சொல்வதற்கு இங்கே ஒன்றும் கிடையாது. செயல் சுதந்திரம் மட்டுமே உரிமையுடன் எனது என்று சொல்லக்கூடியது.

மற்றவை எல்லாம் தாய்,தந்தை நமக்கு ஏற்கெனவே கொடுத்தது. எனவே, அந்த “செயல் சுதந்திரத்தை” சரியாக செய்ததால்தான் இங்கு நான் உங்கள் முன்னால் நிற்க முடிகிறது. ஆகவே, ஒவ்வொருவரும் தங்களுடைய செயல் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுங்கள் என்றார்.

வாசிப்புப் பழக்கம் ஒன்றுதான் என்னை எழுத்தாளராக மாற்றியிருக்கிறது

எழுத்தாளர் வண்ணநிலவன் பேசுகையில்: வாசிப்புப் பழக்கம் ஒன்றுதான் என்னை எழுத்தாளராக மாற்றியிருக்கிறது. அதற்குக் காரணம் எழுத்தாளர் வள்ளிக்கண்ணன். அவர், ஒரு சாதாரண மனிதனாக இருந்த என்னை ஒரு நல்ல எழுத்தாளராக மாற்றி ஊக்கப்படுத்தியவர். எனக்கு இது இரண்டாவது விருது ஆகும். எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் படைப்புகளை நான் நினைத்துப் பார்ப்பது உண்டு. அவர்கள் எழுதிய நூல்கள் அனைத்தும் சிறப்பு மிக்கவை. மேலும், தமிழ் மொழியைக் காப்பாற்ற ஒரு மையம் அமைத்துச் செயலாற்றி வருவது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

தற்போது உள்ள சூழ்நிலையில், இன்றைய தலைமுறைகள் வாட்ஸ்ஆப், முகநூல் என மூழ்கியுள்ளனர். குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் பேசுவது கூட கிடையாது. இந்த நிலைமை மாற வேண்டும். நம் தமிழ் மொழியையும், பண்பாட்டையும் காக்க வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்த உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அம்மா என்று அழைத்ததற்கு அடியா?

பேராசிரியர் முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் பேசுகையில்: இவ்விழாவில் எனக்குக் கிடைத்த பரிசுகள் இரண்டு. ஒன்று தமிழ்த்தாத்தா உ.வே.சா. தமிழறிஞர் விருது. மற்றொன்று என்னுடைய புதிய படைப்பாகிய “அகப்பொருள் களஞ்சியம்” புத்தகம் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நீதியரசர் ஆர்.மகாதேவன் வழங்கும் நீதியில் இலக்கியம் இருக்கும். தமிழ்நாட்டில் நீதி வழங்கக் கூடிய நீதிபதிகள் ஒன்றை கட்டாயம் கையாள வேண்டும்.

அவர்கள் வழங்கும் ஒவ்வொரு நீதியிலும் திருக்குறள் சார்ந்த பொருள் இருக்கும். இத்திருக்குறளைத் தாண்டி எதுவும் இருக்காது. ஆகவே, அவர்கள் வழங்கும் ஒவ்வொரு தீர்ப்பிலும், இந்தத் திருக்குறளின் அடிப்படையில் இவ்வழக்கிற்குத் தீர்ப்பை வழங்குகிறேன் என்று கூற வேண்டும். எப்போது இது நடைமுறைக்கு வருகிறதோ, அன்றுதான் தமிழ்மொழி வளர்கிறது என்று அர்த்தம்.

முன்பு தமிழ் மீதும், பாரதியார் மீதும் கொண்ட பற்றினால் பாரதிதாசன் கவிதைகளை எழுதினார். ஆனால், இன்று தமிழைக் காக்க யார் இருக்கிறார்கள்? வீட்டில், பள்ளியில், நீதிமன்றத்தில் என எங்கு சென்றாலும் ஆங்கிலம். தமிழில் பேசினால் இழிவாக நினைக்கிறார்கள், பார்க்கிறார்கள். ஒரு உதாரணமாக, எங்கள் வீட்டுப் பணியாள் தன் குழந்தையை அடித்துக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தை அம்மா…அம்மா என்று அழுதது.

ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் கூறினார், சென்ற வாரம்தான் மிகப்பெரிய பள்ளியில் சேர்த்து 50,000/- தொகையையும் கட்டினேன்.ஆனால் அங்கு படித்தும், மம்மி என்று அழைக்காமல் அம்மா என்று அழைக்கிறான் என்றார். அதைக் கேட்டு உறைந்து போய் நின்றேன். அம்மா என்று அழைத்ததற்கு அடியா? என்ன கொடுமை இது.

இது போன்ற சூழ்நிலைகள் தான் தமிழ்மொழி அழியக் காரணமாக இருக்கின்றது. மேலும், இன்று படித்து பட்டம் பெறும் அனைவரும் படித்துத்தான் பட்டம் வாங்குகிறார்களா? நினைக்கவே மனம் வேதனைக்குள்ளாகிறது. தமிழில் மிகச் சுலபமான கேள்வியைக் கேட்டால் கூட பதில் தெரிவதில்லை.

பட்டம் பெற்றால் மட்டும் போதுமா? அதேபோல், வேலை செய்யும் நிறுவனங்களில், தகுந்த ஊதியம் பெறும் அனைவரும், அதற்கான வேலை செய்கிறார்களா என்று பார்க்க வேண்டும். பூவுடன் சேர்ந்து நாரும் மணக்கும் என்பார்கள். அதுபோல பூவாக மலர்ந்திருக்கும் உங்களைத் தொடுக்கும் நாராக என்றும் நான் இருப்பேன். எப்பொழுதும் என் கடமையைச் செய்து கொண்டிருப்பேன் என்றார்.

எழுத்தாளர் பொன்னுசாமி பேசுகையில்: இதுபோன்ற நிகழ்ச்சிகளால்தான் தமிழையும், பண்பாட்டையும் காக்க முடியும். நம்முடைய சிறு சிறு செயல்களிலும் கூட நம்முடைய பண்பாடு மறைந்திருக்கிறது. அதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

பேராசிரியர் த.ராஜாராம் பேசுகையில்: 15,000 இலக்கிய மேடை கண்ட இமயம் சிலம்பொலி செல்லப்பனார் மற்றவர்களை ஊக்கப்படுத்தித் தட்டிக் கொடுக்கும் பண்புடையவர். ஒழிவு மறைவாக ஒரு கருத்தைக் கூறுவதுதான் தமிழ்ப்பண்பாடு. அதனை எழுத்தாளர்களின் படைப்புகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. ஆகவே அத்தகைய பெருமை வாய்ந்த தமிழையும், தமிழ் பண்பாட்டையும் காக்க வேண்டும் என்றார்.

கல்லூரி முதல்வர் பெ.இரா.முத்துசாமி நன்றியுரை கூற தமிழ் விழா இனிதே நிறைவுற்றது.

படம்: பாலாஜி ரெமி