நல்லாட்சி; கனவு அல்ல நனவு

மாணிக்கம் அத்தப்ப கவுண்டர், தலைவர், மனுநீதி அறக்கட்டளை

உலக நாடுகளில்  உள்ள அனைத்து குடிமக்களும் எதிர்பார்ப்பது நல்லாட்சியே. நல்ல தலைவன் கிடைத்துவிடமாட்டானோ, நம் தலையெழுத்து மாறாதோ என்று எண்ணாத மக்கள் எவரும் இல்லை.

மக்கள் எதிர்பார்க்கும் அப்படிப்பட்ட  நல்ல தலைவர்கள் தமிழ்நாட்டில் இருந்தனர், இப்போதும் உள்ளனர். ஆனால்  அனைவரும் அரசியல் ஏணியில் ஏறுவதில்லை; வேறு பாதையை தேர்ந்தெடுத்து செல்கின்றனர். சிலருக்கு ஏற வாய்ப்பு கிடைத்தாலும் அதைக் காணாதது போல் சென்றுவிடுகின்றனர்.

ஆனால்… சிலர், தலைவர்களை உருவாக்க, அவர்களுக்கு உறுதுணையாய் நிற்க, மக்களுக்கு நல்லாட்சி வழங்க தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்குவார்கள். அப்படிப்பட்ட அரிய மனிதர்களுள் ஒருவர்தான் மாணிக்கம் என்று அழைக்கப்படும் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர்.

மனுநீதி மாணிக்கம் யார் ?

இவர் நம் நாட்டின் பாதுகாப்பு துறைக்கு தேவையான இராணுவ விண்வெளிசாதனங்களை உருவாக்குவதில் நிபுணர், சிறந்த பொறியாளர், தொழிலதிபர், டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் நண்பர்,  இயற்கையாளர், சீர்திருத்தவாதி என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால்  ஒரு  உழவனின் மகன் என சொல்வதையே பெருமையாக கருதுகிறார். நம்மிடம் பேசுகையில் “என் வாழ்க்கையில் பலவற்றை நான் சாதித்து இருந்தாலும், நல்லாட்சியை மக்களுக்கு கொண்டுவந்து சேர்ப்பதையே மிகப்பெரிய இலக்காக கருதுகிறேன். அதற்காக உழைத்து வருகிறேன்”, என்றார்.

எதை நல்லாட்சி  என்கிறார் இவர்?

“அரசு மக்களுக்கானது. அந்த அரசு செய்யும் சேவைக்காக மக்கள் காத்து நிற்க கூடாது. மக்களிருக்கும் இடம் தேடி அது வரவேண்டும். அதுவே நல்லாட்சி” என்கிறார். நீதி தவறாத மனுநீதி சோழனையும்,பாண்டிய  மன்னர்கள் சிலரையும் உதாரணம் காட்டி அவர்கள் போல் மக்கள் குறை தீர்ப்போராகவும், நீதியையும், நிவாரணத்தையும் வழங்கி மக்களுக்காய் வாழ்பவன் தான் நமக்கு தலைவனாக வேண்டும் என்கிறார் ஆணித்தரமாக.

தமிழகத்தில் நல்லாட்சி இல்லையா?

“இந்தியாவிலேயே இல்லை” என்கிறார் மாணிக்கம், ஆனால்  “அதை கொண்டுவருவது ஒன்றும் பெரிய சவால் கிடையாது”  என பதிவிட்டார்.  நல்லாட்சி இல்லை என கூறும் பலரைப் போல் இவர் யாரையும் (அரசியல்வாதிகள் உட்பட) குறையாக சொல்லவில்லை. மாணிக்கம் நல்லாட்சி கிடைக்காமல் இருப்பதற்கு ஆட்சிமுறையில் உள்ள பிழைகள் தான் காரணம் என்கிறார்.

அது என்ன ஆட்சிமுறையில் பிழை?

நம்மை நம் அரசர்கள் ஆண்டனர், பின் முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என அவர்கள் நம்மை ஆளும்போது அவர்கள் ஏற்படுத்திய ஆட்சிமுறை மாற்றங்கள் சில தற்போது நிகழும் லஞ்ச பழக்கவழக்கத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது என்கிறார். வெள்ளையர்கள் தங்களுக்கு ஆதரவாக அதிகாரிகள், ஜமீன்தார்கள் போன்றோரை உருவாக்கி, வரி வசூல் செய்து தருவோர்க்கு ஒரு பங்கு என்று பழக வைத்தார்கள், பின் அந்த பழக்கம் இந்தியா சுதந்திர நாடாக உருவெடுத்த போதும் தொடர்ந்து வருகிறது.

“மக்கள் பிரதிநிதிகள் இந்த முறையை பின்பற்ற தொடங்கினர். இது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. அன்று அதற்கு பெயர் கமிஷன் இப்போது லஞ்சம் என்கிறோம், அவ்வளவுதான்.” என்றார்.

அப்போது மக்களின் தேர்வில் பிழை இருக்கிறதா ?

நம்மை ஆளும் தலைவர்களை மக்களாகிய நாம் தானே தேர்வு செய்கிறோம், அப்போது நாம் தான் தரமான தலைவர்கள் கிட்டாமல் இருக்க காரணமா என்று கேட்டதற்கு:-

“மக்கள் என்றுமே நல்ல தலைவர்கள்தான் தேவை என்கிறார்கள், விரும்புகிறார்கள்.  ஓட்டிற்கு காசு வாங்கினாலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அவர்கள் சற்று யோசித்து தான் செயல்படுகிறார்கள்.

ஆனால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாய் தேர்தலில் முன் நிற்பவர்கள் யார் என்று சற்று பார்த்தால் பணம் படைத்தோரே தவிர, தகுதியான, நல்லாட்சி தர விரும்புவோருக்கு வாய்ப்பு தருவதில்லை, இதுவே உண்மை. மக்களுக்கு இப்படிப்பட்ட பிரதிநிதிகளை தந்தால் அவர்களால் என்ன செய்ய முடியும்?. பெரும்பான்மையான போட்டியாளர்களின் எண்ணம் பணம், புகழ் சம்பாரிப்பதே தவிர, நல்லாட்சி வழங்குவதில் இல்லை. மக்கள் என்ன செய்வார்கள்.?”

சரி, இவ்வளவு சிந்தித்திருக்கும் நீங்கள், நல்லாட்சிக்கு வழியை தான் சொல்லுங்களேன் என்று கேட்டதற்கு, உற்சாகமாக இவர் கூறியவை:

நல்லாட்சிக்கான முதல் வழி:

நல்லாட்சிக்கான வழிகளை தேடும் வேளையில் நான் தெரிந்து கொண்டது திரு. நரேந்திர மோடி அவர்கள் ஒரு மாற்றத்தை இந்த நாட்டிற்கு வழங்க ஆழ்ந்த விருப்பமுடையவராய் இருக்கிறார் என்று. என்னுடைய இளைய சகோதரனாகவே நான் அவரை பார்க்கிறேன். நல்ல மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஆனால் அவரிடம் வேகத்தை எதிர்பார்க்கிறேன்.

அவர் நினைத்தால் ஒரே நாளில் நல்லாட்சி வழங்க முடியும், தமிழகத்தையும் சேர்த்து ! அது மிகவும் சுலபம்.

நம்முடைய  ஜனாதிபதி மற்றும் ஆளுநர் ஆகிய இருவர் மிக சக்திவாய்ந்த அரசியலமைப்பு அதிகாரிகள். நீதித்துறை, இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, பொதுப்பணி துறை என அரசாங்கத்தின் பலதுறைகளில் பணிபுரிவோர் நிர்வாக ரீதியாக ஆளுநரின் கீழ் தான் செயல் படுகின்றனர்.

செயல்பாட்டு ரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோர் சட்டத்தை பின்பற்றி, மக்களுக்கான நலத்திட்டங்களை ஆளுநர் ஒப்புதலோடு இயற்றுவார்கள். அதை தான் அதிகாரிகள் நிறைவேற்றுவார்கள்.

அரசியலமைப்பில் ஆளுநருக்கு மிகப்பெரிய சக்திகள் வழங்கப்பட்டுள்ளன. மோடி அவர்கள் நாட்டிற்கு நல்ல ஆளுநர்களையும், அவர்களுக்கு இருக்கும் அதிகாரத்தை இயக்க முழு ஒப்புதல் அளித்தாரென்றால், நல்லாட்சி சாத்தியம். இதை என் சகோதரரான மோடி அவர்களிடம் வழங்க கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டாம் வழி :

மக்கள் பிரதிநிதிகளாக ஆள வருபவர்களுக்கு சில தகுதிகள் கட்டாயம் வேண்டும். கட்சி தலைமை அப்படிப்பட்ட நபர்களைத் தான் முன்னிறுத்த வேண்டும். தலைவனாக வருபவன் நல்ல தகப்பனாக முதலில் இருக்கவேண்டும். ஒரு குழந்தையை கஷ்டப்பட்டு நல்ல மனிதனாய் உருவாக்கியவராக இருக்க வேண்டும். சமகால தொழிநுட்பத்திலும், படிப்பிலும் திறமையானவராக, தன் குடும்பத்தை காக்க வல்ல நபராகவும், ஒரு மக்கள் சேவகனிற்கு கிடைக்கும் சம்பளத்தில் வாழ விரும்பும் பக்குவப்பட்ட மனிதனாக இருக்கவேண்டும்.

இப்படிப்பட்ட பல தகுதிகள் உடைய நபர்களை மக்கள் பிரதிநிதிகளாய் முன்னிறுத்த வேண்டும் என தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுதல் அளிக்கப்போகிறேன்.

இது சாத்தியமா என்றால், “இந்த தகுதிகளோடு இருக்கக்கூடிய நபர் தான் பிரதிநிதிகளாக இருக்கவேண்டும் என்பதை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தப்போகிறேன்”, என்கிறார்.

எனக்கு எந்த கட்சியும் எதிரி இல்லை. யாராக இருந்தாலும் நல்லாட்சி வழங்க உறுதி அளித்தால் அவர்களோடு துணையாக நிற்பேன்.

இந்த அரசியல் கட்சிகள் தன் அரசியல் வாக்குறுதிகளாக குறைந்தபட்சம் முனைவர் பட்ட படிப்பு வரை திறமைசாலிகளுக்கு இலவச கல்வி, அரசாங்க சேவைகள் மக்களை தேடி செல்ல, அனைவர்க்கும் சுத்தமான குடிநீர் 24-மணி நேரமும் கிடைக்க வாய்ப்பு, அனைத்து வீடுகளிலும் கழிப்பறை, சுற்றுசூழலை மாசு படுத்துவோருக்கு கடும் தண்டனை வழங்க முன்வர வேண்டும்.

இவர் சொல்வது சாத்தியமா?

” திறமைசாலிகள் அனைவருக்கும் இலவச கல்வி, அதை முனைவர் பட்டம் வரை வழங்குவது முடியுமா என்றால் அது மிக சுலபம். சுத்தமான குடிநீர் தினமும் தமிழ் நாடு மக்களுக்கு வழங்க முடியுமா என்றால் அது எளிது. இவை அனைத்தையும் எப்படி செய்துமுடிக்க வேண்டும் என்பதற்கான திட்டம் என்னிடம் உள்ளது” என்றார்.

இந்த வயோதிகர் சொல்வது சாத்தியமா என்று அனைவர்க்கும் கேள்வி பிறக்கும். இவர் நாம் அன்றாடம் பார்க்கும் முதியவர்களில் ஒருவர் அல்ல. இவர் சொல்லும் பல திட்டங்களுக்கான செயல்கள் தற்போது இவரால் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

இவரின் மேக் இண்டஸ்ட்ரீஸ் மூலம் அதை தமிழ் நாட்டில் செய்துவருவதை நாம் இதற்குமுன் பார்த்திருக்கின்றோம். ‘ஹிந்து தமிழ் திசை’ பத்திரிகையிலும் இவரை பற்றி பிரேத்தியேக கட்டுரைகள் வெளிவந்துள்ளன.  இவர் வாழும் ‘இந்தியன் தாத்தா’ என்று சொன்னால் அது மிகை ஆகாது, ஆனால்  தன்னை பற்றி பெரிதும் வெளியுலகிற்கு காட்டிகொள்ளாத ஒரு உயர்ந்த மனிதர் இவர் என்பதில் எந்த வித மாற்று கருத்தும்  இல்லை.

“எங்களுடைய வேண்டுகோள்களை அனைத்து கட்சிகளுக்கும் அறிவிப்பேன், அவர்கள்  இந்த மாதிரியான நல்லாட்சி வழங்கும் நபர்களை தேர்தலில் நிற்கவைத்தால், நல்ல வாக்குறுதிகளை வழங்கினால் இந்த கொள்கையின் கீழ் செயற்படுவோம் என்று வாக்குறுதி கொடுத்தால் கண்டிப்பாக துணை நிற்பேன்.

யார் நல்லாட்சி வழங்க முன்வந்தாழும் நான் 24-மணி நேரமும் இதற்காய் உழைக்க தயாராக உள்ளேன். வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவோம்.

மூன்றாம் வழி:

“நல்லாட்சி வேண்டுமென கேள்விகேட்க கூடிய… நல்லாட்சியை விரும்பும் ஒரு லட்சம் இளைஞர்களை அடையாளம் கண்டுள்ளேன்.  அவர்கள் மக்களிடத்தில் யாரெல்லாம் நல்லாட்சிக்காக முன் வந்து நிற்கும் பிரதிநிதிகள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். இளைஞர்களும் பத்திரிகைகளும்  நினைத்தால் போதும்,இந்த மாற்றத்தை எளிதில் ஏற்படுத்தலாம்.”

இறுதியான வழி:

“நான் கூறிய மூன்று வழிகளிலும் எதிர்பார்த்த மாற்றம் வரவில்லை என்றால், நானே அரசியல் களத்தில் இறங்குவேன். ஜனவரி 2021 இறுதிக்குள் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிற்கவைக்கும் பணியை நிறைவு செய்துவிடும் திட்டமும் இருக்கிறது. என்னுடன் துணையாக நிற்க பல சக்திவாய்ந்த நல்லாட்சியை விரும்புவோர் தயாராக உள்ளனர். மாற்றத்தை கண்டிப்பாக ஏற்படுத்துவோம்”, என்று கூறி முடித்தார்.