மூலப்பொருள் விலை உயர்வால் சவால்களை சந்திக்கும் உலோக தொழிற்சாலைகள்

கோவை: இந்தியாவில் கடந்த 6 மாதங்களாக நிலவி வரும் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலான மூலப்பொருள் விலை உயர்வால் பல்வேறு சவால்களை உலோக தொழிற்சாலைகள் சந்தித்து வருகின்றன. இதற்கான நிவாரணத்தையும் இந்த தொழிற்சாலைகள் தேடி வருகின்றன.

இன்ஸ்டிடூட் ஆப் இந்தியன் பவுண்ட்ரிமென் அமைப்பு கடந்த 1950-ம் ஆண்டு துவக்கப்பட்டதாகும். இது இந்தியாவில் உலோக தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கு தேசிய அளவில் பெரும் பங்காற்றி வருவதோடு அதன் உற்பத்தியை மேம்படுத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.. இந்த அமைப்பில் இந்தியா முழுவதும் சுமார் 4 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்திய உலோக தொழிற்துறையானது உலக அளவில் 2வது இடத்தில் உள்ளது. இது ஆண்டுக்கு 12 மில்லியன் டன் மதிப்பு கூட்டப்பட்ட வார்ப்பு உலோகங்களை உற்பத்தி செய்து வருகிறது. இதன் மூலம் 19 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கிறது. இதன் ஏற்றுமதியானது உத்தேசமாக ஆண்டுக்கு 3 பில்லியன் டாலர் ஆகும். இந்த துறை நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்த துறையின் பங்களிப்பானது உத்தேசமாக 25 முதல் 28 சதவீதம் ஆகும். பொறியியல் உற்பத்தி மற்றும் பொறியியல் ஏற்றுமதியில் இந்த துறை முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் அனைத்து துறைகளும் அவற்றின் உற்பத்திக்கு உலோக வார்ப்புகளை சார்ந்துள்ளது.

மோட்டார் வாகனங்கள், மோட்டார் வாகனஉதிரி பாகங்கள், ரெயில்வே, டிராக்டர்கள், பொருட்கள் கையாளுதல்,  பாதுகாப்பு, நிலம் தோண்டுதல் மற்றும் கட்டுமான எந்திரங்கள், எலக்ட்ரிகல், சிமெண்ட், டெக்ஸ்டைல், மின்சார உற்பத்தி எந்திரங்கள், பம்ப்புகள், வால்வ் மற்றும் கம்ப்ரசர், ஏரோ ஸ்பேஸ் கருவிகள் உள்ளிட்டபல்வேறு பொறியியல் துறைகளுக்கு உலோக வார்ப்புகளின் பங்களிப்பானது மிகவும் முக்கியமானதாகும்.

இந்த துறை வளர்ச்சிக்கு தேவையான மூலப்பொருட்களும் இதற்கான மின்சாரம் போன்றவைகளும் நியாயமான விலையில் கிடைக்க வேண்டும். அவ்வாறு கிடைக்கும்பட்சத்தில் இந்த துறை நல்ல வளர்ச்சி அடையும்.

பொறியியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு முதுகெலும்பாக இருப்பவை உலோக வார்ப்பு தொழிற்சாலைகள் ஆகும். இந்த துறையானது ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை மற்றும் சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திரும்ப பணிக்கு வராமை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் விதிமுறைகள் மற்றும் இன்னும் பல காரணங்களால் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது.

மேலும் இந்த தொழிற்சாலைகள் ஒரு ஆண்டுக்கு காற்றாலை மின்சாரத்திற்கு தேவையான 60 ஆயிரம் டன் உலோக வார்ப்புகளை உற்பத்தி செய்கின்றன.  மேலும் வரி கட்டமைப்பு மற்றும் உள்ளீடுகளில் பயன்படுத்தப்படாத திரட்டப்பட்ட உள்ளீட்டு வரிக் கடன்காரணமாக காற்றாலை ஜெனரேட்டர்களுக்கு உலோக வார்ப்புகளை வழங்கும் தொழிற்சாலைகள் கடுமையான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன.

இது குறித்து இன்ஸ்டிடூட் ஆப் இந்தியன் பவுண்ட்ரிமென் தலைவர் விஜய் பெரிவால் கூறுகையில்,  மோசமான சூழ்நிலை காரணமாக கடந்த 5 முதல் 6 மாதங்களாக இரும்பு, இரும்பு துண்டுகள் மற்றும் எக்கு போன்ற மூலப்பொருட்களின் விலையானது 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மேலும் அதற்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் விலையும் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதேபோல் மின்சார கட்டணமும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதிக அளவில் உள்ளது. இந்த துறையானது அதிக அளவிலான மின்சாரத்தை நம்பியிருக்கும் துறையாகும். போட்டி நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதன் உற்பத்தி செலவில் அதிகபட்சமாக மின்சார செலவானது 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உள்ளது. சீன அரசு தொழில் துறைக்கு கோவிட் தொற்றுக்கு முன்பு 10 சதவீதம் மற்றம் கோவிட் தொற்றுக்கு பின்பு 5 சதவீத ஆதரவையும் அளித்து வருகிறது. உலோக வார்ப்பு தொழிலுக்கு இந்தியாவிலும் இதே போன்ற ஆதரவு வழங்க முன்மொழியப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.