தொழில் துறைக்கு அவசர தேவை அரசின் உதவியே!

 

K.V.கார்த்திக், தலைவர், சீமா

பலமான தொழில் நகரமாக உருவெடுத்துள்ள கோவையில் சீமா என்று அழைக்கப்படும் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் 1952 ஆம்  ஆண்டு தொடங்கி இன்று வரை  சிறப்பாக இயங்கி வருகிறது. பொறியியல் துறை சார்ந்த பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், தரமான பொருட்களை உற்பத்தி செய்வதற்கான சமகால யுக்திகளையும், விழிப்புணர்வையும் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

இந்த சங்கத்தின்கீழ் பம்ப் உற்பத்தியாளர்கள், பவுண்டரி உரிமையாளர்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதன உற்பத்தியாளர்களும் அங்கம் வகிக்கின்றனர். நாட்டில் நிலவி வரும் திடீர் மூலப் பொருட்களின் விலை உயர்வால், ’பம்ப் நகரம்’ என்று அழைக்கப்படும் கோவைக்கு எப்படி பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதையும், இதை சீர் செய்ய உள்ள வாய்ப்புகள் குறித்தும் சீமாவின் தலைவர் கார்த்திக், நமது ‘தி கோவை மெயிலுக்கு’ அளித்த சிறப்பு நேர்காணல்…

இந்தியாவின் பம்ப் நகரம்: 

இந்தியாவின் பம்ப் மற்றும் மோட்டார் தேவைகளை கோவையும் குஜராத்துமே பெரிதளவில் பூர்த்திசெய்து வைக்கின்றன. இதில் கோவையின் பங்கு மிகப்பெரிது (55%) என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவுக்கு வரும் ஏற்றுமதி ஆர்டர்களில் பெரும்பகுதியை நம் கோயம்புத்தூர்தான் பெற்று வருகிறது. அதன் காரணம் நம் பம்ப்-களின் நிகரில்லாத தரம். ஆனால் கடந்த ஆண்டு முதலே  இந்தத் தொழிலில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

லாக்-டவுனிலிருந்து மீண்டோம்:

கொரோனா லாக்டவுன் (ஊரடங்கு) காலத்தில் பம்ப் உற்பத்தித் துறை மிகப்பெரிய  சவாலை சந்தித்தது. ஏனெனில், கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அனைவருக்கும் அதிகம், அப்போது அதிகமாக பம்ப் வாங்க ஆர்டர்கள் வரும். இந்தக் காலத்தில் கொரோனா ஊரடங்கால், வெறும் 50% வியாபாரம் ஆனாலே போதும் என்று கருதும் நிலை இருந்தது. அந்த நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய கடன் பெரும் உதவியாக இருந்தது, தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவும் முடிந்தது.

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் எங்கும் வியாபாரமில்லாத 2020-ன் முதல் பாதிக்குப்பின் ஜூன், ஜூலை மாதத்தில் மாற்றம் ஏற்பட்டது. மெதுவாக தேவை அதிகரிக்கத் துவங்கியது. அத்துடன், சீனா-வை நாடியிருந்த பல்வேறு நாடுகள், இந்தியா மீது தங்கள் கவனத்தைத் திருப்பின.

அப்படி பல நாடுகள் கோவை பம்ப் பற்றி விசாரிக்கத் தொடங்கியது எதிர்பார்க்காத வரவேற்பு. எங்களுக்கு அது மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அதன் அடிப்படையில், எப்படியும் இந்த வருட இறுதியிலாவது வியாபாரத்தில் ஒரு நல்ல நிலையை எட்டிவிடலாம் என்று நம்பிக்கையுடன் இருந்தோம்.

திடீரென ஏற்பட்ட  அசாதாரண சூழல்:

பம்ப் உற்பத்தியில் பவுண்டரி ஆலைகளின் பங்கு அளப்பரியது. பம்ப்க்குத் தேவையான கேஸ்டிங்ஸ் போன்ற பாகங்கள் பெரிதும் பவுண்டரி ஆலைகளிடம் இருந்துதான் பெறப்படுகிறது.

இந்நிலையில் பல்வேறு மூலப் பொருட்களின்  விலை கடந்த சில வாரங்களாக மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக,  பவுண்டரி ஆலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் (இரும்பு, செம்பு, எஃகு) விலையுயர்வு அசாதாரணமான நிலையை எட்டியுள்ளது. இதன் தாக்கம் பம்ப் உற்பத்தியில் பெரிதளவில் உள்ளது.

பவுண்டரி ஆலைக்குத் தேவையான மூலப் பொருட்களுடைய விலை உயர்வால் தற்போது கோவையில் நூற்றுக்கணக்கான தொழிற்கூடங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மூலப்பொருட்களை உபயோகித்து அவர்கள் எங்களுக்கு வழங்கும் பாகங்களைக் கொண்டுதான் நங்கள் எங்கள் பம்ப்புகளை உருவாக்குகிறோம். அதனால் இந்த விலை உயர்வு எங்களையும் மிகவும் பாதித்துள்ளது.

பம்ப் உற்பத்திக்கு ஆகும் தொகை சென்ற வாரம் 15% உயர்ந்தது, இந்த வாரம் அது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு தினமும் மூலப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், அதை கணக்கில் கொண்டு நாங்கள் தினமும் பம்புகளின்  விலையை நிர்ணயம் செய்ய முடியாது.

முதல்முறையாக, வாடிக்கையாளராக இல்லாத புதிய வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து வந்த ஆர்டர்களை, எவ்வாறு செய்து வழங்கப் போகிறோம் என்று தீவிர யோசனையில் இப்போது நாங்கள் இருக்கிறோம்.

தற்போது, தயாரிப்புப் பொருளின் விலையை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், வேறு வழியின்றி அதை நாங்கள் செய்தால், நம்மைவிட மிகக் குறைந்த விலையில் பொருள் உற்பத்தி செய்யும் வேறு இடங்களை நோக்கி வெளிநாட்டு நிறுவனங்கள் செல்ல வாய்ப்புள்ளது, அத்துடன் பொதுமக்களும் விலை அதிகரிக்கப்பட்ட பம்புகளை வாங்க வரவேற்பளிக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட நெருக்கடி நிலையில்தான் தற்போது நாங்கள் உள்ளோம்.

விலை உயர்வுக்குக் காரணம் என்ன?

நம் நாட்டில் இரும்பு, செம்பு மற்றும் ஸ்டீல் (எஃகு) அதிகப்படியாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நமக்கே இவைகளின் தேவை அதிகம் உள்ள நிலையில், ஏற்றுமதி அதிகம் இருப்பதால் விலை உயர்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளது.

அதோடு, நம்முடைய இரும்புத் தாதுக்களையும் அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. சீனா தற்போது 6 மாதத்திற்குத் தேவையான செம்பை வாங்கி வருகிறது. உலக அளவிலும் மூலப் பொருட்களின்  விலை ஏற்றம் காண்பதால் அதுவும் ஒரு காரணம்.

விவசாயிகள் போராட்டம்: 

நாட்டில் நிகழ்ந்துவரும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தாலும் பம்ப் துறைக்கு பின்னடைவு ஏற்படும். தற்போது பம்புகளின் தேவை விவசாயிகளுக்குக் குறைவாக இருந்தாலும் அடுத்த பருவத்திற்கு பம்ப் தேவைப்படும். ஆகவே அவர்களது போராட்டம் தொடர்ந்தால் இன்னும் சிக்கல் நிச்சயம் ஏற்படும்.

மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டிற்கு தீர்வு உண்டா?

ரயில்வே ஓவர் பிரிட்ஜ் கட்டுமானத்திற்கு வழிவகுக்க 2015 ஆம் ஆண்டில் மூடப்பட்ட கோவையில் உள்ள இந்திய எஃகு ஆணையத்தின் முற்றத்தை மீண்டும் திறக்க வேண்டும். அரசாங்கமே இதில் எஃகை நேரடியாக வைத்திருக்கும். இந்த முற்றத்தில் எஃகை எந்த விலைக்கு கொண்டு சேர்க்கிறார்களோ அதே விலைக்கு நம்மால்  வாங்கிக்கொள்ள முடியும். இது பெரிதும் உதவும்.

இது தவிர, மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி அளித்தால் அதுவும் தற்போது உள்ள நிலையை மாற்றும்.

அரசாங்கத்தின் ஹிந்துஸ்தான் காப்பர்  நிறுவனம் மூலம் தேவையான செம்பை அரசு வாங்கி அதை நிறுவனங்களுக்கு சற்றுக் குறைந்த விலை நிர்ணயம் செய்து வழங்கலாம். முக்கியமாக, மூலப் பொருட்களை பதுக்கி வைக்கும் செயலில் சிலர் ஈடுபடுவதாகத் தெரியவந்துள்ளது. இதையும் அரசு கவனிக்க வேண்டும்.

மேலும், இப்போது மூலப்பொருள் வாங்க அனைத்து இடங்களிலும் பணப் பரிவர்த்தனை முறை மட்டுமே பின்பற்றப்படுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு துவண்டு கிடக்கும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ஊரடங்கு காலத்தில் வழங்கியதுபோல மீண்டும் ஒருமுறை கடன் வழங்கினால் பெரும் உதவியாக இருக்கும்.

சீமாவின் நடவடிக்கைகள்:

இந்த நிலையைத் தெளிவாக  சீமா சார்பிலும், சக தொழில் துறை அமைப்புகளோடு இணைந்தும்  மத்திய, மாநில அரசாங்கத்திற்கு கூறியுள்ளோம், சம்மந்தப்பட்ட அமைச்சர்களை சந்திக்க  உள்ளோம்.

நாங்கள் உருவாக்கிய கோ-இந்தியா சங்கத்தின் மூலப்பொருள் வங்கியில் பொருட்களை வாங்கி, அதன் வழியாக சற்றுக் குறைவான விலையில் வழங்குவது குறித்தும் பேசி வருகிறோம்.

தேசிய சிறு தொழில்கள் கழகம்  அனைவரின் தேவைகளை ஒன்றிணைத்து மேலை நாடுகளில் மூலப் பொருட்களை கொள்முதல் செய்யப்போகின்றது. அதைப் பற்றியும் சிந்தித்து வருகிறோம்.

பொதுவாக, நம் நாட்டைப் பொறுத்தவரை கோவைதான் 55 % பம்ப் உற்பத்தி செய்யும் மாவட்டம். பல்லாயிரக்கணக்கானோருக்கு இந்தத் துறை வேலைவாய்ப்பளித்து வருகிறது.

நாட்டின் பொருளாதாரத்திற்கும்  வலுசேர்த்துவருகிறது. அப்படிப்பட்ட கோவையின் இன்றைய நிலை மாற வேண்டும் என்றால், நமது அரசாங்கம் இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்ப்பளித்தால் மட்டுமே அது சாத்தியப்படும்.